திங்கள், 25 பிப்ரவரி, 2013

பாலியல் பலாத்கார சிறுவர்களைசிறாராக பார்க்க கமிட்டி எதிர்ப்பு

மும்பை: "பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட குற்றவாளி, 15 வயதுடையவராக இருந்தாலும், அவரை சிறாராக கருதக்கூடாது' என, மகாராஷ்டிரா மாநில அரசு நியமித்த, விசாரணை கமிட்டி பரிந்துரை செய்துள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு எதிராக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, விசாரணை நடத்தி, அறிக்கை தாக்கல் செய்ய, நீதிபதி, சந்திரசேகர் தர்மாதிகாரி கமிட்டியை, மகாராஷ்டிரா அரசு நியமித்தது. விசாரணை நடத்திய கமிட்டி, முதல் இடைக்கால அறிக்கையை, 2010ம் ஆண்டு டிசம்பரிலும், இரண்டாவது அறிக்கையை, 2011, செப்டம்பரிலும் தாக்கல் செய்தது. மூன்றாவது அறிக்கையை, இம்மாதம், 16ம் தேதி தாக்கல் செய்தது.இந்த அறிக்கையில், பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க, எடுக்க வேண்டிய பல்வேறு நடவடிக்கைகளை சுட்டி காட்டியிருந்தது.இந்நிலையில், மும்பை ஐகோõர்ட்டில், பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது குறித்து, தொடரப்பட்ட பொது நல மனு மீதான விசாரணையின் போது, மேற்கண்ட கமிட்டியின் பரிந்துரை அறிக்கையின் பிரதி தாக்கல் செய்யப்பட்டது. நீதிபதி சந்திரசேகர் கமிட்டி தன் பரிந்துரையில் கூறியிருப்பதாவது:


பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டவர், 15 வயதுடையவராக இருந்தாலும், அவரை சிறாராக பார்க்க கூடாது. பொதுவாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் உருவாவதற்கு, இணைய தளங்களில் வலம் வரும் ஆபாச படங்களும், முறைகேடான உறவுகளை சித்தரிக்கும் காட்சிகளும் காரணம். இவை எளிதாக கிடைப்பதால், இளம் வயதினர் மத்தியில் தவறான எண்ணத்தை தோற்றுவிக்கிறது. இதுவே குற்ற செயல்களுக்கு காரணமாக அமைகிறது.இதை, உடனடியாக தடுக்க வேண்டும். பெண்களுக்கு எதிராக குற்றங்களை செய்து தண்டிக்கப் பட்டவர்கள் பற்றிய விவரங்களை பகிரங்க படுத்த வேண்டும்.

இது போன்ற குற்றங்கள் மீண்டும் நடைபெறாமல் தடுக்கவும், மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், இதை செய்ய வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டு தண்டிக்கப்பட்டவர்களை , அரசியல் கட்சிகள், தேர்தலில் போட்டியிட டிக்கெட் தரக்கூடாது. பள்ளிகளில், தங்களுக்கு எதிராக நடந்த குற்றங்களை, மாணவியர் புகாராக தெரிவிக்க, குறை தீர்ப்பு மையங்களை அமைக்க வேண்டும்.இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது   dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக