ஞாயிறு, 24 பிப்ரவரி, 2013

மாற்று கருத்து போராளி தோழர் சண்முகலிங்கம்

தோழர் சண்முகலிங்கம் அவர்கள் மிகவும் நேர்மையான ஒரு மனிதர். தனது கொள்கைகளை ஒரு போதும் விட்டு கொடுக்காதவர் . எந்த வித சுய லாபமும் இல்லாத ஏராளமான பொது காரியங்களில் இவர் சிரத்தையோடு ஈடுபடுவதை எப்போதும் காணலாம் . . இவர் நடந்து வந்த பாதை சரித்திர மகத்துவம் வாய்ந்தது . இளமையில் இடது சாரி கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு  மிக சிறு பிராயத்திலேயே சம சமாஜ கட்சியில் முழு நேர தொண்டனாக தன்னை இணைத்து கொண்டவர் தனது பிறந்த ஊரான கரவெட்டியை விட்டு வெளியேறி மலையகத்தில் இடது சாரி கொள்கைகளுக்காக தனது வாழ்வின் பெரும் பகுதியை செலவிட்டார் .இனப்பிரச்சனை பூதாகரமான வடிவை எட்டியபோது டாக்டர் ராஜசுந்தரம் போன்றவர்களுடன் இணைந்து காந்தியத்தை ஸ்தாபித்தார் . இவரது முழு வரலாறும் ஒழுங்கான முறையில் எழுதப்பட வேண்டிய ஒன்றாகும் ஏராளமான போராட்டங்களை சந்தித்த இவர்  இறுதி வரை உண்மையிலேயே ஒரு புரட்சி வாதியாகவே வாழ்ந்தார் . மாற்று கருத்தாளர்களை ஈவு இரக்கம் இன்றி வேட்டையாடிய  பாசிச கும்பல்களிடம் இருந்து தனது சுயத்தை விட்டு கொடுக்காது தான் நினைப்பதை நெற்றி அடியாக நேருக்கு நேர் சொல்லி விடுவது இவரின் தனி பண்பாகும் . விழுந்த பாட்டுக்கு குறி சுடும் சமுகத்தில் சுயமாக சிந்தித்து இறுதி வரை சுயம் இழக்காமல் வாழ்ந்த தோழர் shan எமக்கு ஒரு ஒளி விளக்காக திகழ்கிறார்

சில ஆண்டுகளுக்கு முன்பாக எனது பாலிய நண்பர் ஜெயகுமார் (பாரதி பாலன்) சமரச பூமி என்ற நாவலை கனடாவில் வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார் .அவர் அச்சடித்த புத்தகங்களுடன் டென்மார்க்கில் இருந்து கனடா வந்து தனது உறவினர்கள் வீட்டில் தங்கி இருந்தார் . அப்பொழுது அவருக்கு புத்தக வெளியீடு தொடர்பாக உதவி செய்வதாக வாக்குறுதி அளித்தவர்கள் பின்பு வழக்கமான அடாவடி  கலாசாரத்தின் பின் விளைவுகளை எண்ணி ஜெயகுமாரின் புத்தக வெளியீட்டுக்கு உதவி செய்ய வில்லை .
ஜெயக்குமார் மொன்றியலில் இருந்த என்னிடம் இது பற்றி தொலை பேசியில் கவலையுடன் கூறினார். அவருக்கு என்னாலான உதவி செய்வதாக கூறிவிட்டு தோழர் சண்முகலிங்கத்திற்கு இது பற்றி கூறினேன். இத்தனைக்கும் சமரச பூமி நாவல் அரசியல் சம்பத்தப்பட்டதல்ல ஆனால் கலாசார ரீதியான பல முற்போக்கு அல்லது சர்ச்சைக்கு உரிய கருத்துக்களை கொண்டிருந்தது . மாற்று கருத்துக்கான தளம் வேண்டும் என்ற நோக்கத்தில் தோழர் சண்முகலிங்கம் அவர்கள் இதை டொராண்டோவில் எப்படியும் வெளியிட்டே தீருவது என்று முடிவெடுத்து அதை அழகாக நிறைவேற்றியும் காட்டினார்  எந்த விதமான பணமோ புகழோ கருதாது மாற்று கருத்துக்கள் வெளிப்படுத்தும் உரிமை மதிக்கப்பட வேண்டும் என்பதற்காக மிக மிக சிரமப்பட்டு சமரச பூமி நூலின் வெளியீட்டை ஸ்கார்புரோ வில் நடத்தி காட்டினார் .எந்த ஒரு ஒரு மாற்று கருத்தும் கேட்க கூடாது என்பவர்களின்  எழுதப்படாத சட்டத்தை உடைத்து காட்டியவர் தோழர் சண்முகலிங்கம்
இன்று தோழர் இல்லை என்று எம்மால் நம்ப முடியவில்லை உயிர் துடிப்புள்ள உண்மையான மனிதனுக்கு மரணம் இல்லை 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக