வியாழன், 10 ஜனவரி, 2013

பங்காரு அம்மாவின் சொத்தைப் பல் மோசடி!

வினவு
ammaசங்கரமடம் மேட்டுக்குடி மக்களிடம் கொள்ளை அடித்துக் கொழுப்பது போல, கீழ் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த மக்களின் ஆன்மீக நம்பிக்கையை மூலதனமாக்கி தமது வியாபாரத்தை நடத்துகின்றனர் பங்காரு அடிகளார் குடும்பத்தினர்.
    மேல்மருவத்தூர் அம்மா பங்காரு அடிகளாரை நிறுவிய தலைவராகவும், அவரது மனைவி லஷ்மி பங்காரு அடிகளாரை தலைமை நிர்வாக அதிகாரியாகவும் கொண்டு ஆதிபராசக்தி பல் மருத்துவக் கல்லூரி இயங்கி வருகிறது. இந்தக் கல்லூரியின் நிர்வாக இயக்குனராக பங்காரு அடிகளாரின் இரண்டாவது மகன் செந்திலின் (சின்ன அம்மா) மனைவி ஸ்ரீலேகா செயல்பட்டு வருகிறார். 2012-ம் ஆண்டு எம்டிஎஸ் எனப்படும் பல் மருத்துவ மேற்படிப்புக்கான அனுமதி பெறுவதற்காக இந்திய பல் மருத்துவக் கழகத்திடம் கல்லூரி நிர்வாகம் விண்ணப்பத்திருக்கிறது.
    அக்டோபர் 2012-ல் நடந்த ஆய்வில் கல்லூரியில் அடிப்படை வசதிகள், ஆய்வகங்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இல்லாததை சுட்டிக் காட்டி அனுமதி மறுத்திருக்கிறது இந்திய பல் மருத்துவக் கழகம்.  டிசம்பர் 28-ம் தேதி கூடிய கல்லூரியின் நிர்வாகக் குழு இந்திய பல் மருத்துவக் கழகத்தின் உறுப்பினர் ராயப்பேட்டையைச் சேர்ந்த பல் மருத்துவர் டாக்டர் எஸ் முருகேசன் என்பவருக்கு லஞ்சம் கொடுத்து அனுமதி வாங்க முடிவு செய்திருக்கிறது.

    இந்த முருகேசன் எஸ்ஆர்எம் பல் மருத்துவக் கல்லூரியின் டீன் (பொறுப்பு) ஆகவும் இருக்கிறார். சரியான உள்கட்டமைப்பு வசதி இல்லாத கல்லூரிகளிடம் லஞ்சம் வாங்கிக் கொண்டு இந்திய பல் மருத்துவக் கழகத்தின் அனுமதி வாங்கிக் கொடுப்பதை முக்கிய தொழிலாக செய்து வருகிறார்.
    ஆதிபராசக்தி கல்லூரியினர்  முருகேசனுக்கு லஞ்சம் கொடுக்கப் போவது பற்றிய தகவல் சிபிஐ அதிகாரிகளுக்குத் தெரிய வந்து ராயப்பேட்டை லாயிட்ஸ் சாலையில் இருக்கும் அவரது கிளினிக்கில் ரெய்டு நடத்தினர். லஞ்சப் பணத்தின் முதல் தவணையாக ரூ 25 லட்சத்தை கொடுத்த போது, முருகேசனையும், கல்லூரியின் நிர்வாகச் செயலர் கருணாநிதி, நிர்வாக அலுவலர் கே ராம்பத்ரன் ஆகியோரையும் இடைத்தரகராக உடன் வந்த அ.தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் ஆரணி எம்எல்ஏ டி பழனியையும் சிபிஐ அதிகாரிகள் ஜனவரி 8-ம் தேதி கைது செய்திருக்கின்றனர்.
    கைது செய்யப்பட்ட நான்கு பேரும் சென்னை சிறப்பு சி.பி.ஐ. நீதிமன்றத்தில்   8-ம் தேதி மாலை ஆஜர் படுத்தப்பட்டனர். அவர்களுக்கு 15 நாட்கள் நீதி மன்ற காவல் விதிக்கப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
    கல்லூரியின் நிர்வாக இயக்குனரும் பங்காரு அடிகளாரின் மருமகளும் முன்னாள் காவல் துறை ஐஜி இளங்கோவனின் மகளான ஸ்ரீலேகா மீதும் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள அவரை தேடி வருகிறது சிபிஐ. கல்லூரியின் நிர்வாகக் குழுவின் மற்ற இரண்டு உறுப்பினர்களான பங்காரு அடிகளார் மீதும் லஷ்மி பங்காரு அடிகளார் மீதும் வழக்கு பதிவு செய்யவில்லை.
    ஆன்மீகம் என்ற பெயரில் கடவுளுக்கு புரோக்கர் வேலை செய்யும் சாமியார்கள் பொறியியல் கல்லூரிகளையும் மருத்துவக் கல்லூரிகளையும் ஆரம்பித்து மக்களைச் சுரண்டி வருகின்றனர். நிலங்களை கைப்பற்றுவது, அதிகார வர்க்கத்தின் துணையை தேடிக் கொள்வது, அரசியல் கட்சி ரவுடிகளுடன் பரஸ்பர சகாய உறவுகளை ஏற்படுத்திக் கொள்வது என்று தமது செல்வாக்கை வளர்த்துக் கொள்கின்றனர்.
    காஞ்சிபுரத்தின் சங்கர மடம்,  நிலங்களை வளைத்துப் போட்டு பல கல்வி நிறுவனங்களை நடத்துகிறது. இதே போன்று அமிர்தானந்த மாயி, சாயி பாபா உள்ளிட்டு பல்வேறு கார்ப்பரேட் சாமியார்கள் கல்விக் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர். கடவுள் பிசினசை விட கல்வி பிசினஸ் பல மடங்கு காணிக்கைகளை கொடுப்பதால் இவர்கள் தமது ஆன்மீக செல்வாக்கை வைத்து நடுத்தர வர்க்கத்திடம் பக்தி சுரண்டலோடு சேர்த்து கல்வி சுரண்டலையும் செய்து வருகின்றனர்..
    1970கள் முதல் மேல்மருவத்தூரில் அத்தகைய ஆன்மீக சாம்ராஜ்யம் நடத்துபவர் பங்காரு அடிகளார்.  மெட்ரிகுலேஷன் பள்ளி, பொறியியல் கல்லூரி, பாலிடெக்னிக், மருத்துவக் கல்லூரி, பல் மருத்துவக் கல்லூரி என்று ஆரம்பித்து கல்வி வியாபாரத்தை பக்தியுடன் கலந்து மக்களிடம் கொள்ளை அடித்து வருகிறார். பங்காரு அடிகளாரின் மனைவியும் இரண்டு மகன்களும் திருமதி அம்மா, பெரிய அம்மா, சின்ன அம்மா என்ற பெயர்களில் வியாபாரத்தின் வெவ்வேறு பிரிவுகளை நடத்தி வருகின்றனர்.
    இவர்கள் அ.தி.மு.க., தி.மு.க.  கட்சிகளைச் சேர்ந்த முன்னாள்/இன்னாள் அரசியல் வாதிகளான ஏ சி சண்முகம், விஸ்வநாதன், ஜேப்பியார் போன்ற ரவுடிகளுக்கும், அரசியல்வாதியாக வளர்ந்திருக்கும் பச்ச முத்து போன்ற கல்வித் தந்தைகளுக்கும் ஈடு கொடுத்து தமது சாம்ராஜ்யங்களை விரிவு படுத்தி வருகின்றனர்.
    காஞ்சி சங்கராச்சாரி கல்வி நிறுவனங்களை நடத்தி மேட்டுக்குடி மக்களிடம் கொள்ளை அடித்துக் கொழுப்பது போல,  கீழ் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த மக்களின் ஆன்மீக நம்பிக்கையை மூலதனமாக்கி தமது வியாபாரத்தை நடத்துகின்றனர் பங்காரு அடிகளார் குடும்பத்தினர்.
    அனைத்து மக்களுக்கும் தரமான, இலவசமான, தாய்மொழி வழிக் கல்வியை பட்ட மேற்படிப்பு வரை அரசே வழங்குவதற்கு மாற்றான எந்த ஒரு கல்வி முறையும் இது போன்ற வக்கிரங்களுக்கு வழி வகுக்கும் என்பதுதான் நிதர்சனம். மேல் மருவத்தூருக்கு பாத யாத்திரை போகும் செவ்வாடை பக்தர்கள் இனி புழல் சிறைக்குத்தான் போக வேண்டியிருக்கும். அம்மாவின் கிரிமினல் குற்றத்தை கண்ட பிறகாவது பக்தர்கள் திருந்துவார்களா?

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக