வியாழன், 31 ஜனவரி, 2013

விஸ்வரூபமூம் துப்பாக்கியும் மட்டும்தான் இசுலாமியர்களின் எதிரிகளா?

பெங்களூரில் கோரமங்களா சிக்னலுக்கு முன்பாக இடது புறமாக திரும்பும் சாலை ஒன்று இருக்கிறது. இரவு நேரத்தில் விளக்கு வெளிச்சம் போதுமானதாக இருக்காது.  ஆள் நடமாட்டமும் குறைவாகத்தான் இருக்கும். நேற்றிரவு பத்து மணிக்கு மேலாக பைக்கில் வந்து கொண்டிருந்த போது ஒருவர் லிஃப்ட் கேட்டார். ஊனமான தனது கால்களுக்கு உதவியாக தாங்குகோல்களை பிடித்துக் கொண்டு நின்றார். முஸ்லீம் குல்லாவும் தாடியுமாக இருந்த அவருக்காக வண்டியை நிறுத்த தயக்கமாக இருந்தது. சற்று தூரம் தள்ளிச் சென்று யாராவது அவருக்கு உதவுகிறார்களா என பார்த்துக் கொண்டிருந்தேன். சுமார் பத்துக்கும் மேற்பட்ட பைக்காரர்கள் நிற்காமல் சென்றார்கள். நான் உட்பட ஏன் யாருமே அவருக்கு உதவவில்லை என்ற யோசிக்கத் தோன்றியது. அறியாத மனிதருக்கு உதவச் சென்று வேறு ஏதேனும் பிரச்சினையில் சிக்கிக் கொள்ளக் கூடும் என்ற பயமா அல்லது இசுலாமியர் என்பதால் எழும் தயக்கமா என்று வெகு நேரம் குழப்பமாக இருந்தது.

இதே போன்ற வேறொரு நிகழ்வை சில நாட்களுக்கு முன்பாக பொம்மனஹள்ளியில் பார்த்திருக்கிறேன். அதுவும் இரவு நேரம்தான். ஒரு இசுலாமியர் பேருந்து நிறுத்தத்தில் நின்று டாக்ஸிக்காரர்களிடம் லிஃப்ட் கேட்டுக் கொண்டிருந்தார். யாருமே அவருக்கு அருகில் நிறுத்தவில்லை. ஆனால் அவரைத் தாண்டி நின்றவர்களை ஏற்றிச் சென்றார்கள். அந்த இசுலாமியர் மனதுக்குள் என்ன நினைத்துக் கொண்டார் எனத் தெரியவில்லை. ஆனால் கடைசியில் பேருந்துதான் அவருக்கு வாய்த்தது.
இப்படி நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இசுலாமியர்களுக்கு மறுக்கப்படும் உதவிகளையும், உரிமைகளையும் நாம் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. அவர்களும் கண்டு கொள்வதாகத் தெரியவில்லை. ‘இதெல்லாம் பழகிப் போய்விட்டது’ என்று சிம்பிளாக முடித்துக் கொள்ளலாம்.
இசுலாமியர் என்பதற்காக வாடகைக்கு வீடு தர மறுக்கும் ஓனர்களால் நிரம்பியதுதான் இந்தச் சமூகம். ‘துலுக்கனை இந்த நாட்டைவிட்டு துரத்தணும்’ என்று பேசுபவர்கள் இந்த நாடு முழுவதுமே உண்டு. இசுலாமியர்கள் சுத்தமாக இருக்க மாட்டார்கள் என்ற பிம்பம் மிகச் சாதாரணமானது. அவர்கள் முரட்டுத் தனமானவர்கள் என்று பொதுப்புத்தியில் பதிந்து கிடக்கிறது. இசுலாமியர்கள் கடத்தல் தொழில் செய்பவர்கள் என்று ஆரம்பித்து தீவிரவாதிகள் என்பது வரைக்கும் அவர்களுக்கான முத்திரைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். 
எங்கள் வீட்டில் கட்டட வேலைக்கு வந்திருந்தவர் சர்வ சாதாரணமாக ஒரு விஷயத்தைச் சொன்னார்.
  “என் ப்ரெண்ட் பன்னிக்கறி தின்பான் சார்” என்றார்.
  “எதனால தெரியுமா சார்?” இதுவும் அவரேதான்.
  “தெரியாது சொல்லுங்க” என்றான்.
  “நமக்கு ஆகுற பசுமாட்டை துலுக்கன் திங்குறான். பழிக்கு பழியாக அவனுக்கு ஆகாத பன்னியை நாம திங்கலாம்ன்னு சொல்லிட்டு தின்னுறான்” - சொல்லிவிட்டு கெக்கேபிக்கே என்று சிரித்தார்.
இசுலாமிய வெறுப்பை துல்லியமாக வெளிப்படுத்தும் டயலாக் இது. ஆனால் இத்தகைய டயலாக்குகள் யாருக்கும் எந்தச் சலனத்தையும் உருவாக்குவதில்லை. இங்கு இசுலாமிய வெறுப்பு என்பது சர்வசாதாரணமான விஷயம். இந்த வெறுப்பு ஆண்டாண்டு காலமாக புரையோடிக் கிடக்கிறது. வெறுப்பையும், ஒரு இனத்தின் மீதான தவறான பிம்பத்தையும் போலி மதச்சார்பின்மை கொள்கைகளும், வாக்கு அரசியலும் மேலும் சிக்கலாக்கி சீழ் பிடிக்க வைத்திருக்கின்றன. 
தேசியவாதம், ஒருமைப்பாடு என வறட்டு டயலாக் அடிக்கும் அத்தனை தேசபக்தர்களுக்கும் முன்னால் முக்கியமான பிரச்சினை ஒன்றிருக்கிறது. அது இசுலாம் மற்றும் இசுலாமியர் குறித்தான புரையோடிய பிம்பங்களையும், புரிதல்களையும் உடனடியாகக் களைவது. ஆனால் எந்த அரசியல் கட்சியும் சரி அல்லது எந்த சமூக அமைப்பும் சரி- இத்தகைய சிக்கல்களின் அடிப்படையைக் கூட கவனிப்பதில்லை.
கணிசமான ஓட்டு வங்கி உடைய சமூகம் என்பதைத் தவிர இசுலாமியர் மீதான துளியளவு அக்கறை கூட அரசியல் கட்சிகளுக்குக் கிடையாது. காங்கிரஸ், திமுக, அதிமுக என்ற எந்த ஓட்டுப்பொறுக்கி அமைப்புகளும் இதில் விதிவிலக்கல்ல. இப்தார் விருந்தில் முக்காடும் குல்லாவும் அணிந்து கொண்டு கஞ்சி குடித்து போட்டோவுக்கு ஃபோஸ் கொடுப்பதைத் தவிர்த்து எளிய இசுலாமியனுக்கான  சிக்கல்களை நீக்க இவர்கள் யாருமே துணியப்போவதில்லை.
மிகச் சாதாரணமான ஒரு சினிமாப் பட விவகாரத்திற்காக இரண்டு மதத்தைச் சார்ந்தவர்களும் முரட்டுத்தனமாக மோதத் தயாராவதை புன்முறுவலோடு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் அரசியல்வாதிகளும், சமுதாயத் தலைவர்களும். முகநூல் போன்ற சமூகத் தளங்களில் இனத்துவேஷங்களும் வசவுகளும் எந்த கீழ் மட்டத்திற்கும் போய்க் கொண்டிருப்பதை கவனித்துப் பார்க்கலாம். இந்த வெறுப்புகளும், துவேஷங்களும் மனதுக்குள் புதைந்து கிடந்தவை. இப்பொழுது கிடைத்திருக்கும் சில்லரைத்தனமான காரணத்திற்காக வெளியே எட்டிப்பார்க்கின்றன.
அரசியல்வாதிகள்தான் இப்படியென்றால் இசுலாமியர்களின் தலைவர்கள் என தங்களை அறிவித்துக் கொள்பவர்கள் தங்களுக்கு விளம்பரம் தேடிக் கொள்வதற்காக சினிமாக்காரர்களை எதிர்த்து ஜிம்மிக் நாடகங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த நாடகங்களால் சாமானிய இசுலாமியர்களுக்கு ஒரு பைசா பிரையோஜனம் இல்லை என்பது  நாடகக் காரர்களுக்கும் தெரியும். ஆனால் தேர்தல் நேரத்தில் ‘கல்லா’ கட்ட So Called தலைவர்களுக்கு இத்தகைய நாடகங்கள் உதவக் கூடும்.
இசுலாமியர்கள் போராட வேண்டியது விஸ்வரூபத்தையும், துப்பாக்கியையும் எதிர்த்து இல்லை என்பதை தைரியமாகச் சொல்லலாம். ஓட்டுப்பொறுக்கி அரசியல்வாதிகளையும், போலியான சமுதாயத் தலைவர்களையும், தங்களின் மீது குத்தப்படும் சமூகத்தின் முத்திரைகளையும் எதிர்த்துத்தான் போராட வேண்டும். ஆனால் அவர்கள் வலுவான எதிரிகளை விடுத்து வேலைக்காகாத பூச்சிகளை நசுக்கிக் கொண்டிருக்கிறார்கள்..nisaptham.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக