செவ்வாய், 29 ஜனவரி, 2013

மோடி அடுத்த பிரதமராக கோரிக்கை

புதுடில்லி:"வரும் லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வின் பிரதமர் வேட்பாளராக, நரேந்திர மோடியை அறிவிக்க வேண்டும்,'' என, அந்தக் கட்சியின் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்கா, முதன் முதலாக குரல் கொடுத்துள்ளார். அதனால், இந்த விவகாரத்தில், மோடிக்கு ஆதரவு பெருகுவதால் திருப்பமும், மறுபுறம் கூட்டணி கட்சியான, ஐக்கிய ஜனதா தளத்தை சின்கா சீண்டி விட்டதால், சர்ச்சையும் எழுந்துள்ளது. லோக்சபா தேர்தல், அடுத்தாண்டு நடைபெறவுள்ளது. இருந்தாலும், எந்த நேரத்தில் தேர்தல் வந்தாலும், அதை சந்திக்க, ஆளும் கட்சியும், எதிர்க்கட்சிகளும் தயாராகி வருகின்றன. காங்கிரஸ் சார்பில் சமீபத்தில், துணை தலைவராக தேர்வாகியுள்ள ராகுல், பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவார் என, எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி நிறுத்தப்பட்டால், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பா.ஜ., சார்பில், குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை பிரதமராக்க வேண்டும் என, கோரிக்கைகள் எழுந்துள்ளன.
இருப்பினும், மோடியை, பிரதமர் வேட்பாளராக ஏற்கும் பக்குவம், பா.ஜ., மூத்த தலைவர்களுக்கு இருக்குமா என, தெரியவில்லை. மோடியை எதிர்க்க, குஜராத்தில் நடந்த கலவரத்தை காரணம் காட்டுபவர்கள் கட்சியிலும், கூட்டணியிலும் இருக்கின்றனர். பா.ஜ., கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்தவரும், பீகார் முதல்வரான நிதிஷ் குமார், மோடியை ஏற்க தயக்கம் காட்டுகிறார். இந்நிலையில், பா.ஜ., மூத்த தலைவரான யஷ்வந்த் சின்கா, இந்த விவகாரம் தொடர்பாக, முதன் முதலாக விவாதத்தை துவக்கியுள்ளார். மோடிக்கு ஆதரவாக, சின்கா குரல் கொடுத்ததோடு, ஐக்கிய ஜனதா தளத்தையும் சீண்டி விட்டுள்ளார். இது தான் தற்போது சர்ச்சையாகி உள்ளது.

வாஜ்பாய் தலைமையிலான, தே.ஜ., கூட்டணி அரசில், மத்திய நிதி அமைச்சராக பதவி வகித்தவர், யஷ்வந்த்சின்கா. இவர், நேற்று டில்லியில் கூறியதாவது: பா.ஜ.,வில், யார் பிரதமர் வேட்பாளர் என்ற விவாதம் துவங்கி பல நாட்களாகி விட்டது. நான், போகும் இடங்களில் எல்லாம், மக்களும், கட்சி தொண்டர்களும், நரேந்திர மோடியை, பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என, வலியுறுத்துகின்றனர். மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்தால், பா.ஜ.,வுக்கு சாதகமாக அமையும். மோடியை முன் நிறுத்தினால், தே.ஜ., கூட்டணிக்கு வாக்காளர்கள் மத்தியில், மிகப்பெரிய தாக்கம் ஏற்படும். ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.,வின் நெருங்கிய கூட்டணி கட்சி; அக்கட்சி தனி ஒருவரைகுறிவைக்க கூடாது. நாங்கள் கட்சியாக மதச்சார்பற்றவராகவோ, மதப்பற்றுள்ளவராகவோ இருப்போம். இதில், ஒன்றை மட்டும் எடுத்துக்கொண்டு, தனிப்பட்ட ஒருவரை எதிர்க்க கூடாது. எந்த கட்சிக்கும் சொந்தமாக முடிவு எடுக்க உரிமை உள்ளது. மோடியை பிரதமர் வேட்பாளர் ஆக்கினால், அதை சர்ச்சை ஆக்காமல், ஐக்கிய ஜனதா தளத்தினர் ஏற்றுக் கொள்ள வேண்டும்.கூட்டணியை விட்டு ஒரு கட்சி வெளியேறினால், பல கட்சிகள் உள்ளே வரும். இந்த விஷயத்தில், ஐக்கிய ஜனதா தளம் தீவிரமாக யோசித்து முடிவு எடுக்க வேண்டும்.இவ்வாறு, யஷ்வந்த் சின்கா கூறினார்.

எப்போது மோடி விவகாரம் கிளம்பும் என்றிருந்த நிலையில், சரியாக பத்தவைச்சு விட்டார் யஷ்வந்த் சின்கா. இருப்பினும், ஐக்கிய ஜனதா தளத்தினர் சின்காவின் கருத்தை சர்ச்சையாக்கியுள்ளனர்.

ஐ.ஜ.த., செய்தி தொடர்பாளர் சிவானந்த திவாரி கூறுகையில்,""பிரதமர் வேட்பாளரை பா.ஜ.,தான் முடிவு செய்ய வேண்டும்; யஷ்வந்த் சின்கா அல்ல. அது அவரின் சொந்த கருத்து,'' என்றார்.
தே.ஜ., கூட்டணியின் அமைப்பாளரும், ஐக்கிய ஜனதா தள தலைவருமான சரத் யாதவ் கூறுகையில்,"" பெரும் கஷ்டப்பட்டே ஒரு கூட்டணியே உருவாகிறது. சூழ்நிலைக்கு ஏற்ப கூட்டணி அமையும் என்ற சின்காவின் கருத்து பா.ஜ.,வின் புது தலைவராகியுள்ள ராஜ்நாத் சிங்கிற்கு சின்காவின் கருத்து தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அவர்
கூறுகையில்,"" நான் இப்போது பயணத்தில் உள்ளேன்; சின்கா என்ன சொன்னார் என்பதை முழமையாக படித்து பார்க்கவில்லை. படித்து பார்த்தபின் சொல்கிறேன். இருப்பினும், பிரதமர் வேட்பாளர் குறித்து, கட்சியின் பார்லிமென்ட்ரி குழு தான் முடிவு செய்யும்,'' என்றார்.
லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் கூறுகையில்,""பிரதமர் வேட்பாளர் யார் என்பதை, பா.ஜ., பொருத்தமான நேரத்தில் முடிவு செய்யும். இருப்பினும், பா.ஜ.,வின் பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்து மீடியாக்கள், இந்த அளவுக்கு ஆர்வம் காட்டுவது ஆச்சரியபட வைக்கிறது,'' என்றார்.
நேற்று முன் தினம், தலைவர் ராஜ்நாத் சிங்கை, நரேந்திர மோடி இரண்டு மணி நேரம் பேசியுள்ளார். இச்சந்திப்புக்கு அடுத்த நாள், சின்கா தூபம் போட்டுள்ளது; சர்ச்சைக்கு வலு சேர்க்கிறது. இருப்பினும், மோடிக்கு அதிகரித்து வரும் ஆதரவு, பா.ஜ., மூத்த தலைவர்கள் மத்தியில் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக