திங்கள், 3 டிசம்பர், 2012

valentine day இனிமேல் ஜாதி ஒழிப்பு காதல் ஊக்குவிப்பு நாளாக கொண்டாடப்படும்: கி.வீரமணி

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடந்தது. இதில் தி.மு.க. சார்பில் கல்யாணசுந்தரம், முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியம், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு சார்பில் ரவீந்திரநாத், இந்திய கம்யூனிஸ்டு சார்பில் சம்பத், விடுதலை சிறுத்தைகள் சார்பில் பாலாஜி, திராவிடர் இயக்க தமிழர் பேரவை சார்பில் குமரன், மாறன், திராவிடர் கழக துணை தலைவர் கலிபூங்குன்றன், செயலவை தலைவர் அறிவுக்கரசு ஆகியோர் கலந்து கொண்டனர்.கூட்டம் முடிந்ததும் கி.வீரமணி நிருபர்களிடம் கூறியதாவது:- வன்கொடுமை சட்டத்தை தீவிரமாக அமுல்படுத்த வேண்டும். இந்த சட்டம் ஏட்டு சுரைக்காயாக இல்லாமல் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். ஜாதிகள் அகல காதல் திருமணங்களை ஊக்குவிக்க வேண்டும். காதலுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும். ஆண்டு தோறும் பிப்ரவரி 14ஆம் தேதி உலக காதலர் தினமானது இனிமேல் ஜாதி ஒழிப்பு காதல் ஊக்குவிப்பு நாளாக கொண்டாடப்படும்.
தர்மபுரி, கடலூரில் தலித்துக்களின் வீடுகள் எரிக்கப்பட்டது கண்டனத்துக்குரியது. வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு முழு நிவாரணம் வழங்க வேண்டும். புது வீடுகள் கட்டி கொடுக்க வேண்டும். நடந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
ஜாதி மறுப்பு, தீண்டாமை ஒழிப்பு மாநாடு வருகிற 9-ந்தேதி தர்மபுரியில் நடக்கிறது. இதில் அனைத்து கட்சி தலைவர்களும் பங்கேற்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக