திங்கள், 3 டிசம்பர், 2012

ஜாதியை முன்னிறுத்தி இனி அரசியல் நடத்த முடியாது

ஜாதியை முன்னிறுத்தி இனி அரசியல் நடத்த முடியாது - முத்தமிழ் அறிஞர் கலைஞர் சங்கநாதம்!


தர்மபுரிகள் நடக்காமல் இருக்க  நாடெங்கும்
பெரியார் நினைவு சமத்துவபுரங்கள் தோன்ற வேண்டும்

சென்னை, டிச.3- ஜாதியை முன்னிறுத்தி இனி யாரும் அரசியல் நடத்த முடியாது - தருமபுரிகள் நடைபெறாமல் தடுக்கப்பட நாடெங்கும் பெரியார் நினைவு சமத்துவ புரங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்றார் - தி.மு.க. தலைவர் கலைஞர். சென்னை பெரியார் திடலில் நேற்று மாலை நடை பெற்ற திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர் களின் 80ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் பங்கேற்று தி.மு.க., தலைவர் கலைஞர் அவர்கள் உரையாற்றியதாவது:
இங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற இந்த எழுச்சிமிகு விழா எத்தகைய மகிழ்ச்சியை நம் முடைய உள்ளங்களிலெல்லாம் நிரப்பியிருக்கிறது என்பதை நான் சொல்ல வேண்டிய அவசியமில்லை. பெரியார் திடலுக்கு நடிகவேள் ராதா மன்றத்திற்கு இன்று சிறப்புச் சேர்க்கின்ற வகையில் என்னுடைய இளவல் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர் களுடைய 80-ஆவது ஆண்டு பிறந்த நாள் விழாவைக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றோம்.

எனக்கு இதிலே  ஒரு கருத்து என்னவென்றால், இருவரையும் இணைத்தே இங்கே பேசியவர்கள் எல்லோரும் பேசினார்கள். ஆனால், வயதைப் பொறுத்தவரையில் நானும், வீரமணியும் சற்று வேறுபாடானவர்கள். அவருக்கு 80 வயது. இன்னும் ஓரிரு ஆண்டுகளில் எனக்கு 90 வயது. ஆக, 90 வயதை எட்டக் கூடிய நான், அந்த இடம்  நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்ற நான்; 80-ஐ இன்றைக்கு வாழ்த்தி மகிழ்கிறேன் என்றால், என்னுடைய இளமைக் காலத்தை நானும் இளவல் வீரமணி அவர்களும் பெரியார் அவர்களுடைய கொள்கைகளை இந்த நாட்டிலே பரப்புவதற்காக அரும்பாடுபட்டு, இன்று போலல்ல, தமிழகத்தின் தெருக்கள்தோறும், வீதிகள் தோறும், வரப்பு வயல்கள் தோறும், வாய்க்கால் கரைகள்தோறும் நடந்து நடந்து, நடக்க முடியாத இடங்களிலே கட்டை வண்டியிலே   ஏறிக் கொண்டு, இப்படியெல்லாம் பயணம் செய்து, பகல் என்றும் இரவு என்றும் பாராமல் திராவிட மாணவர் களுடைய சுற்றுப் பயணத்தை அமைத்துக் கொண்டு, நாங்கள் இருவரும் அன்றைக்கு தொண் டாற்றிய அந்தக் காலங்கள் எல்லாம் எனக்கு நினை வுக்கு வரத் தவறவில்லை.
அப்படிப்பட்ட இளமைக்காலத்திலிருந்து இன்று வரையில் பாடுபட்டுக் கொண்டிருக்கின்ற, பணியாற்றிக் கொண்டிருக்கின்ற பகுத்தறிவு ஒளிபெற்று, அதைப்  பரப்பிக் கொண்டிருக்கின்ற அந்த வேளையில் நாங்கள் ஈடுபட்டு இன்றைய தினம் அவருக்கு 80 வயது என்பதை நேற்றைக்கு முன் தினம்தான் நண்பர்கள் சொல்லி ஆச்சரியப்பட்டு, ``இவருக்கா 80 வயது என்று மகிழ்ந்து, அவரை வாழ்த்த இங்கே வந்திருக்கின்றேன்.


திராவிட இயக்கத்திற்கு ஒரு திருஞானசம்பந்தர் - அண்ணா மகிழ்ந்து எழுதினார்
அவரை திராவிட இயக்கத்திலே இணைத்த போது, சின்னஞ்சிறு பிள்ளையாக அவரை இணைத்தபோது, திராவிட நாடு இதழிலே அறிஞர் அண்ணா அவர்கள் ``திராவிட இயக்கத்துக்கு ஒரு திருஞானசம்பந்தர் கிடைத்திருக்கிறார் என்று அன்றைக்கு மகிழ்ந்து எழுதினார்கள்.
திருஞானசம்பந்தர் என்றால், கொள்கை ரீதியாக அல்ல, வயது ரீதியாக. அந்த ஆற்றலும், அறிவும் அத்தகைய இளமைத் துடிப்பும் கொண்ட இளைஞ ராக நம்முடைய ஆசிரியர் அவர்கள் அன்றைக்கு இந்த இயக்கத்திற்குக் கிடைத்தார்கள். நான் அமைச்சர் பொறுப்பிலே இருந்த நேரத்தில், குறிப் பாக முதலமைச்சராக இருந்த நேரத்தில் அவரு டைய அழைப்பை யேற்று பல நிறுவனங்களுக் கெல்லாம் சென்றிருக்கின்றேன். அவரால் இயக்கப்படுகின்ற பல அறப்பணி களையெல்லாம் பார்வையிட்டிருக்கின்றேன். அவரால் வளர்க்கப் படுகின்ற - பயிற்று விக்கப்படுகின்ற தமிழ் மாணவர் களையெல்லாம் கண்டு மகிழ்ந்திருக்கின்றேன்.
திருச்சியிலே, ஈரோடு நகரத்திலே, வல்லத்திலே  இப்படியெல்லாம் பல இடங்களில் மாணவர் களைப் பயிற்றுவித்து, அவர்களையெல்லாம் எதிர்கால தமிழகத்தினு டைய ஒளிவிளக்குகளாக ஆக்குவதற்கு அவர் அரும்பாடுபடுவதையும், அதற்கு அவர் வகுத் துள்ள ஏற்பாடுகளைக் கண்டும் வியந்து போயிருக் கின்றேன். திருச்சியிலே பேசும்போது, ஒரு நிகழ்ச்சி யிலே குறிப்பிட்டேன். நான் காலையிலே இருந்து இளவல் வீரமணி அவர்களுடைய நேர்த்தி யான இந்த அறப்பணிகளையெல்லாம் காணுகின்ற வாய்ப்பைப் பெற்றிருக்கின்றேன். இவைகளை யெல்லாம் காணும் போது, பெரியாருக்குப் பிறகு இந்த இயக்கத்தை யார் வளர்ப்பார்கள்? யார் வலிமையோடு இந்த இயக்கத்தைக் கொண்டு செல்வார்கள்? என்று இருந்த அச்சம் நீங்குகின்ற  அளவிற்கு அதற்கு  ஒரு வழித்தோன்றல் கிடைத்து விட்டார், அவர்தான் வீரமணி என்று நான் அன்றைக்கு புகழாரம் சூட்டினேன். அப்படிப்பட்ட அற்புதமான நிர்வாகத் திறனும், நேர்மைத் திறனும் கொண்டவர் வீரமணி அவர்கள்.
நான் ஏன் அவைகளையெல்லாம் குறிப்பிடு கிறேன் என்றால், பெரியாருக்குப் பிறகு, அவர் வைத்துவிட்டுப் போன சொத்துக்கள் எல்லாம்; இப்படிப்பட்ட அறக்கட் டளைகள் எல்லாம் என்ன ஆகுமோ? என்று இருந்த கேள்விக்குறிக்கு ஒரே பதில் ``ஒன்றும் ஆகாது. நான் இருக்கிறேன் என்று தன்னுடைய ஒளிமிகுந்த முகத் தைக் காட்டியவர் தான் என்னுடைய ஆருயிர் இளவல் வீரமணி அவர்கள் ஆவார்கள்! அவர்களைப் பெற்றிருக் கின்ற இந்த இயக்கத்திற்கு  திராவிட இயக்கத்திற்கு எந்த அழிவும் எப்போதும் நேர்வதற்கு இடமில்லை. அவரை தமிழகத்திலே மாத்திரமல்ல, நான் முதல மைச்சராகப் பொறுப்பேற்றிருந்த பொழுது டெல்லியிலே ``பெரியார் மாளிகை ஒன்று திறக்கப் பட வேண்டும், ஏற்கனவே ஒரு பகுதி திறக்கப் பட்டிருக்கிறது. நீங்கள் இன்னொரு பகுதியை திறக்க வேண்டும் என்று சொன்னபோது, அதைக் காண வேண்டும் என்று ஆதங்கத்தோடு நான் உடனடியாக டெல்லிக்குச் சென்றேன். டெல்லியிலே அவர் கட்டியிருக்கின்ற அந்த மாளிகை,  அந்த வட்டாரத் திலே உள்ள பெரியவர்கள் எல்லாம், வித்தகர்கள் எல்லாம், அங்கே இருக்கின்ற பொதுநலத்திலே அக்கறை கொண்டவர்கள் எல்லாம் எந்தளவிற்கு வந்து பார்த்து மகிழ்கிறார்கள் என்பதை எல்லாம் காணும்போது நான் பெருமை பெற்றேன். நானே இந்தக் காரியங்களை பெரியாருக்குப் பிள்ளையாக இருந்து செய்ய வேண்டுமென்று ஆணை யிடப்பட்டிருந்தால், என்னால் செய்திருக்க முடியாது. என்னையும் வெல்லக் கூடிய அளவிற்கு தமிழர் தலைவர் வீரமணி அவர்கள் நானே மூக்கில் விரல் வைக்கின்ற அளவிற்கு மிக அற்புதமான அறப்பணிகளை தந்தை பெரியார் அவர்களின் பெயரால் அன்னை மணியம்மை அவர்களின் பெயரால் ஆங்காங்கு  ஆக்கியிருக்கிறார். அங்கிங் கெனாதபடி எங்கெங்கும் வீரமணி அவர் களுடைய ஆற்றல் பளிச்சிடுவதை, ஒளிவிடுவதை, பிரகாசித்துக் கொண்டிருப்பதை  நான் காணுகின்றேன். அப்படிப் பட்ட வீரமணி அவர்கள் இன்றைக்கு எதிர் காலத்தைப்  பற்றி கவலைப் படத் தேவையில்லை. அவர் அதற்கான ஏற்பாடுகளையும் திறம்பட செய்திருக்கிறார் என்பதை நான் அறிந்து மகிழ் கின்றேன். அத்தகைய திறமையாளர்கள் வீரமணி அவர்களுடைய எண்ணத்தை, நாங்கள் எல்லாம் என்ன  எதிர்பார்க்கி றோமோ,  அந்த எதிர்பார்ப்பை நிச்சயமாக நிறைவேற்று வார்கள் என்ற நிறைந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்பதையும் இந்த இனிய விழாவிலே நான் தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கின்றேன்.
சமுதாயக் கொள்கைதான் இயக்கத்தின் மூலக் கொள்கை
அவர்கள் சொன்னார்கள்  - இந்த இயக்கத்தை நாங்கள் எப்படி வளர்க்கப் போகிறோம், என்னென்ன திட்டங்களைத் தீட்டியிருக்கிறோம்,  இந்த இயக்கத்தின் மூலக் கொள்கைகள் என்ன,  சமுதாயக் கொள்கை தான் எங்கள் மூலக்  கொள்கை என்று குறிப்பிட்டார்கள்.    திராவிட முன்னேற்றக் கழகம் என்னுடைய தலைமை யிலே இயங்குகிற இயக்கம்.   அது  அரசியலும் கலந்த இயக்கம்.  வெறும் அரசியல் இயக்கம் மாத்திரமல்ல.  அரசியலும் கலந்த இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம்.    திராவிட முன்னேற்றக் கழகம்  தோன்றிய போது  சென்னை ராபின்சன் பூங்காவில், அறிஞர் அண்ணா அவர்கள் என்ன சொன்னார்கள் என்றால்,  நாங்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்குகிறோம்,  இது பெரியாருக்கு விரோதமாக அல்ல,  திராவிடர் கழகத்திற்கு எதிர்ப்பாக அல்ல,  திராவிடர் கழகத்திற்கு துணையாக,  இரட்டைக் குழல் துப்பாக்கியாக திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் இருக்கும், விளங்கும்  என்று  1949ஆம் ஆண்டு செப்டம் பர் 17ஆம் தேதி நடை பெற்ற அந்த இனிய  ஆரம்ப விழாவில்  குறிப்பிட் டது இன்றைக்கும் நினைவிலே இருக்கின்றது என்பதற்கு அடையாளம் தான் இந்தத் திடலில் நாங்கள்  இருவரும் ஒன்றாக அமர்ந்திருப்பதும்,  இரண்டு இயக்கத்தின் நண்பர்களும் இங்கே குழுமியிருப்பதும் ஆகும்.
திராவிட முன்னேற்றக் கழகத்தை அழித்து விட வேண்டுமென்று  எதிரிகள்  இன்றைக்கு முற்படு வார்களேயானால்,  அதைத் தடுத்து நிறுத்தக் கூடிய  கேடயமாக திராவிடர் கழகம்,  தளபதி வீரமணி அவர்களுடைய தலைமையிலே இயங்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது.  (கைதட்டல்)  ஆகவே எங்களிடத்திலே வாலாட்ட வேண்டு மென்று விரும்புகின்றவர்கள்  ஜாக்கிரதை  என்று தான் இந்த நேரத்தில் குறிப்பிட விரும்புகிறேன்.
திராவிடர் இயக்கத்தைப் பொறுத்தவரையில் இன்றையதினம் சில கட்சிகள்  செய்யும் வேடிக்கை என்னவென்றால்  -  திராவிட என்கிற  பெயரை  தங்கள் கட்சிகளுக்கு வைத்துக் கொண்டிருக்கின்ற கட்சிகளே  கூட  - தி.மு. கழகத்தை விமர்சிக்கும் போது,  திராவிட  என்ற சொல்லையே  நாங்கள் ஏற் றுக் கொள்ள முடியாது என்று பேசுகின்ற விந் தையை  நான் பார்க்கின்றேன்.    ஒருசில தலைவர்கள்,  இரண்டு நாட்களுக்கு முன்பு கூட சொல்லி யிருக்கிறார்கள்.  திராவிட  என்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று, அதை நாங்கள் வீழ்த்தியே தீருவோம்,  அது எங்களுடைய சாதிகளுக் கெல்லாம் விரோதமாக இருக்கின்றது என்று கூறியிருக்கிறார்கள்.   நல்லவேளை,  சாதி ஆதிக்கத் திற்கு,  சாதிப் பிரிவினைக்கு  திராவிட முன்னேற்றக் கழகம், திராவிடர் கழகம் இரண்டும்,  ஆதரவாக இருக்கிறது என்று சொன்னால் நாங்கள் வருத்தப் படுவோம்.  (கைதட்டல்)  அதற்கு எதிராக  அவர்கள் இன்றைக்கு  சாதிகளுக்கு எதிர்ப்பாக இரு கழகங் களும் இருக்கின்றன என்று சொல்கிறார்கள்.
தமிழர் தலைவரின் 80ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களுக்கும்,  அவரது இணையர் மோகனா அம்மையாருக்கும்  தி.மு.க. தலைவர் கலைஞர் பொன்னாடை போர்த்தி வாழ்த்துக்களை தெரிவித்தார்  (2.12.2012).
கலப்புத் திருமணத்தை திராவிடர் இயக்கம் எதிர்க்கிறது என்று சொல்கிறார்கள்.   கலப்புத் திருமணத்தை எதிர்க்கிறவர்கள்,  ஆதரிக்கின்ற வர்கள் என்ற இரண்டு பிரிவினரில்  நீங்கள் எண் ணிப் பாருங்கள்  -  அய்யா ஆனாலும், அண்ணா ஆனாலும்,  திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் யார் ஆனாலும்,  பகுத்தறிவு வாதிகள் யாரானாலும், அவர்கள் எல்லாம் இன்றைய தினம் கலப்புத் திருமணத்தை வேண்டாம் என்று சொல்கிறவர்கள் அல்ல.    கலப்புத் திருமணம்தான் சமுதாயத்திலே ஒரு முன்னேற்றத்தை, ஒரு முற்போக்குத் தன்மையை உருவாக்கும் என்ற காரணத்தால் தான் கலப்புத் திருமணத்தை ஆதரிக்கின்ற இயக்கமாக  திராவிடர் இயக்கம் திகழ்ந்து கொண்டிருக்கின்றது.   நான் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன்.   நான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் என்ற முறையில் சொல்லுகிறேன்.  என்னுடைய மகன் மு.க. அழகிரி திருமணத்திற்காக ஏற்பாடுகள் எல்லாம் நடைபெற்ற போது நான் அவரை அழைத்து யாரைத் திருமணம்  செய்து  கொள்ள நீ முடிவு செய்திருக்கிறாய் என்று கேட்ட போது,  நான் யாரையாவது காதலித்து திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருக்கிறேன் என்று சொன்னார்.   நான் அவரிடம்,  நீ யாரைக் காதலிக்க விரும்பினாலும்,  நான் உன்னுடைய  தந்தை,  நான் எதைக் காதலித்திருக்கிறேன் தெரியுமா?   நான் காத லித்திருப்பது  சாதியற்ற, சமதர்ம சமுதாயம் என்கிற தத்துவத்தைத்தான் நான் காதலித்திருக்கிறேன்.
`அதற்கு என்னுடைய பிள்ளைகளாகிய நீங்கள் எல்லாம் உதவிட வேண்டும், துணை நிற்க வேண்டும் என்று சொல்லி,  நான் காதலுக்கு குறுக்கே,  உள்ளபடியே அன்றையதினம்  எதிர்ப்பாக இருந்து  அவர் காதல் செய்து யாரைத் திருமணம் செய்து கொள்ள விரும்பினாரோ, அதை வேண்டாமென்று தடுத்துவிட்டு,  திருமணம்  பெற்றோர்கள் திட்டமிட்ட படி, நிர்ணயித்த படி நடைபெற வேண்டுமென்று சொன்ன பிறகு தான், யாரை என்று  அவர் கேட்ட போது சொன்னேன்.     தாழ்த்தப்பட்ட சமுதா யத்தைச் சேர்ந்த  ஒரு பெண்ணை  நீ திருமணம் செய்து கொண்டால் தான்,  சாதித்திமிர், சாதி ஆணவம்,  சாதி வேறுபாடுகள் இவைகள் எல்லாம் ஒழிவதற்கு  முதலமைச்சராக இருக்கின்ற  நம்முடைய வீட்டி லேயே  அதற்கான முயற்சி நடைபெற்றிருக் கிறது என்று  எண்ணி, அந்தச் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் எல்லாம் மகிழ்வார்கள்.  ஆகவே நான்  பார்த்து வைத்திருக்கின்ற இந்தப் பெண்ணைத்தான் நீ திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்று வலியுறுத்தி,  அவர் அதற்கு சம்மதித்து  - இப்போது நீங்கள் பத்திரிகைகளில் பார்க் கிறீர்களே, காந்தி அழகிரி  என்று  அந்தக் காந்தி என்ற பெண்ணை  அழகிரி என்ற என்னுடைய மகன் திருமணம் செய்து கொண்டார் என்றால்,  கலப்புத் திருமணத்தை எதிர்பாரா மல்,  சந்தர்ப்ப வசத்தால்  வந்த  ஒரு நிகழ்ச்சி என்று எண்ணாமல் வேண்டு மென்றே திட்டமிட்டு,  கலப்புத் திருமணத்தை என் வீட்டிலே நடத்தி வைத்தவன் தான் இந்தக்  கருணாநிதி என்பதை, இன்றைக்கு சாதியைக் கட்டிக் கொண்டு சில தலை வர்களே கூட அழுகிறார்களே, அவர்கள்  எண்ணிப் பார்த்து திருந்த வேண்டும் என்பதற்காக இதைச் சொல்லுகிறேன்.
இன்றைக்கு சாதி ஒழிந்து,  சாதிபேதமற்ற நிலையில்,  சமதர்ம சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என் பதற்காகத்தான் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியிலே -  தேர்தல் நேரத்திலே  -   உங்களில்  சிலரால்  ஒழிக்கப்பட்ட, வீழ்த்தப்பட்ட, திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியிலேதான்  -  நான் சொல்ல விரும்புகிறேன்  -  காதல் திருமணங்கள்,  கலப்புத் திருமணங்கள்  எல் லாம் நடைபெறுவதற்கு  முடிந்த வகையில் எல்லாம் பணியாற்றியிருக்கிறோம்.    ஆனால் அந்தப் பணியினை விரிவாக ஆற்ற  திறம்பட  முடியாமல்,  தொடர்ந்து ஆற்ற முடியாமல் போய் விட்டது. தமிழ்நாட்டிலே சாதியைப் பேசுகின்றவர்களே இல்லை,  சாதியின்  பெயரால் மக்களைத் திரட்டி வைத்து  இன்னொரு சாதியை மிரட்டுகின்றவர்கள்,  இன்னொரு சாதியை அச்சுறுத்து கின்றவர்கள்,  இன்னொரு சாதியை அடிமைப்படுத்த எண்ணுகிறவர்கள், ஆதிக்கவாதிகள்;   வரக் கூடாது என்ற அந்தச் சூழ்நிலையை உருவாக்க  இன்னும் சில ஆண்டுகள் திராவிட முன்னேற்றக் கழக அரசு இருந்திருக்குமேயானால், அது நடைபெற் றிருக்கும்.
சமதர்ம சமுதாயம் நிறுவுகிற பணி வெற்றி பெறும் சூழல் உருவாகிறது!
நீங்கள் எண்ணிப் பாருங்கள்.  எத்தனை திருமணங் கள், சாதி ஒழிப்புத் திருமணங்கள்  சமீப காலத்திலே தமிழகத்திலே நடைபெற்றிருக்கின்றன என்பதை எண்ணிப் பார்த்தால், அந்தச் சமதர்ம சமுதாயத்தை நிறுவுகின்ற பணியிலே தான் விரைவிலே வெற்றி பெறக் கூடிய ஒரு சூழ்நிலை உருவாகிக் கொண்டிருந்தது.  அதுவும் சமுதாய  ரீதியாக வெற்றி பெற முடியாமல் தடுக்கப்பட்டது என்பதையும் நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.    கலப்புத் திருமணம்,  சாதியை மறுத்து நடை பெற்ற காரணத்தால்தான்  தர்மபுரியிலே இவ்வளவு பெரிய கலவரம் நடைபெற்றது.    தர்மபுரி கலவரத்திற்கு  சாதி மறுப்புத் திருமணம், காதல் திருமணமும்  ஒரு காரணமாக ஆயிற்று என்பதை ஏடுகளிலே படித்திருக்கிறீர்கள்.   இதற்கெல்லாம் என்ன காரணம்?   பெரியார் இல்லை. பெரியார் போற்றிய அந்தக் கொள்கையை விதைத் தவர்கள், அதை பரப்புகின்றவர்கள், அதைத் தருவாக வளர்த்து தன்மானத்தை தமிழகத்திலே பரப்புகின்ற வர்கள் ஆட்சியிலும்  இல்லாத காரணத்தால், அவர் களுடைய தொண்டர்களாகிய எங்களால் முழுமை யாக இயலவில்லை, முடியவில்லை,  எங்களைச் சாதியின் பெயரால், மதத்தின் பெயரால் இன்னமும் தாக்கிக் கொண்டிருப்பவர்கள், இன்னமும் தி.மு. கழகத் தையும் , தி.க. வையும் ,  அழிக்கலாம் என்று எண்ணிக் கொண்டிருப்பவர்கள், சாதியை நம்பிக் கொண்டி ருக்கிறார்கள்.
நான் இந்த நேரத்தில்  தந்தை பெரியார் அவர்க ளுடைய  பெயரால் உள்ள இந்த மன்றத்திலே அமர்ந்து சொல்கிறேன்.  இனி பத்தாண்டு காலத்திற்கு மேல்  சாதியை வைத்து எவரும் தமிழ்நாட்டிலே  யாரையும் ஏமாற்ற முடியாது.   (கைதட்டல்)   ஏனென்றால் பார்க்குமிடம் எல்லாம், இன்றைக்கு இளைஞர்கள் தயாராகிக் கொண்டு வருகிறார்கள்.   நான் திராவிடர் கழகத்திலே உள்ள இந்த இளைஞர்களையும் பார்க் கிறேன்.    திராவிட முன்னேற்றக்  கழகத்திலே இன் றைக்கு வளர்ந்து வருகின்ற இளைஞர்களையும் பார்க்கிறேன்.   அந்த இளைஞர் அணியினர் இன் றைக்கு வேகமாக  விறுவிறுப்பாக  திராவிட இயக்கத் தின் கொள்கைகளை,  சமுதாயக் கொள்கைகளை பின்பற்றக் கூடிய வீராதி வீரர்களாக,  இளைஞர் அணியாக வளர்ந்து வருகின்ற காட்சியைப் பார்க்கின் றேன்.   அவர்கள் எல்லாம் இன்னும் அய்ந்தாண்டு காலத்திற்குப் பிறகு, பத்தாண்டு காலத்திற்குப் பிறகு,  இந்த இயக்கத்தை, இந்தச் சமுதாயத்தை வாழ்த்தி, ஏற்று, வளர்த்து நடத்தக் கூடிய ஆற்றலும், அறிவும் பெற்றவர்களாக ஆகி விடுவார்களேயானால் பிறகு சாதிக்கு வேலையே இல்லை.   அப்படி ஆகவேண்டும் என்பதற் காகத் தான் நான்  நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில்,  சமுதாய ஒற்றுமைக்காக,  பல பகுதிகளில் வீடுகளை அமைத்து அங்கெல்லாம்  தந்தை பெரியார் பெயரால்,  சமத்துவ புரங்களைக் கட்டிக் கொடுத்து  -  அந்த வீடுகளிலே  ஒரு அய்யர், ஒரு முதலியார், ஒரு செட்டியார், ஒரு ஆதி திராவிடர் என்ற நிலையில்  வாழ வேண்டும், அப்படி வாழ்ந்தால்தான் அவர்களுக்கு வசதிகளைச் செய்து கொடுப்போம் என்று சொல்லி  அந்தப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது தான்,  ஆட்சி தொடர முடியாமல் போயிற்று.  ஆட்சி தொடர வில்லையே என்று கவலையில்லை.   ஆட்சி தொடர்ந்திருந்தால் இன்னும்  பதவி சுகத்தை நாம் அனுபவித் திருக்கலாமே என்ற அந்தக் கவலை இல்லை.
ஆட்சி தொடராத காரணத்தால்,  சமத்துவபுரங்களை மேலும் அதிகமாக உருவாக்க முடியவில்லையே,  அந்தச் சமத்துவபுரங்களில் எல்லா பிரிவு மக்களையும், எல்லா சாதி மக்களையும்  அமர்த்தி, அவர்களையெல்லாம் ஒன்றாக வாழ வைக் கின்ற அந்த உரிமையை சமத்து வத்தை அவர்களுக்குத் தருகின்ற  அத்தகைய பாக்கியம் நமக்குக் கிடைக் காமல் போய் விட்டதே என்ற வருத்தம் தான் எனக்கு.   இந்தப் புரட்சிக்கு தந்தை பெரியார் அவர்களின் காலத்தில் ஏற்பட்ட அதே வெற்றியை  மீண்டும் எங்கள் காலத்திலும் பெற்றுத் தருவீர்களேயானால்,  பெற்றுத் தருவதற்கு  நீங்கள் எல்லாம் ஒத்துழைப் பீர்களேயானால்,  சமத்துவபுரங்கள்  மீண்டும் தோன்றும்.   அப்படித் தோன்றுகின்ற சமத்துவபுரங் கள் இன்னும் அதிகமாகுமேயானால், தர்மபுரிகள் தோன்றாது.   தர்மபுரியில்  இதற்காக கூட்டம் நடத்தப் போகிறோம் என்று இளவல் வீரமணி அவர்களும்,  தம்பி திருமாவளவன் அவர்களும் இங்கே பேசும் போது குறிப்பிட்டார்கள்.   உண்மை தான்.   இந்த சாதி வெறியை, மேல் மட்டத்திலே யிருந்து  பரவுகின்ற  இந்த ஆணவத்தை, நாம் வீழ்த்தாத வரையில்,  சமத்துவமான நிலையை எல்லோரும் ஒருங் கிணைந்து வாழக் கூடிய நிலையை  தமிழகத்திலே ஏற்படுத்த முடியாது.    தமிழகம் இந்தியாவிலே  ஒரு தனித் தன்மை வாய்ந்த  நிலம்.   இந்தத் தமிழகத்திலே தான்  பெருந்த லைவர் காமராஜர்  - அவருக்குப் பிறகு திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒப்பற்ற தலைவர் பேரறிஞர் அண்ணா  - இவர்கள் எல்லாம்  நம்மை வழி நடத்திச் சென்றிருக்கிறார்கள்.   ஒன்றை நான் சொல்ல விரும்பு கிறேன்.
இன்றைக்கு நாடார் சமுதாயத்து மக்களை யாரோ இழிவுபடுத்தி விட்டார்கள்  - மத்திய அரசின் பாடப் புத்தகத்தில்  அவர்களை இழிவுபடுத்தி எழுதப்பட் டிருக்கிறது  - என்று ஒரு கிளர்ச்சி நடக்கின்றது.   அதை நானும் ஆதரிக்கிறேன்  -  அது கிளர்ச்சியாக ஆவதற்கு முன்பே 1957ஆம் ஆண்டு  திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக - நான் குளித்தலைத் தொகுதியிலே  சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்று  -  சபைக்குள் சென்றேன். பெருந்தலைவர் காமராஜர், சி. சுப்ரமணியம், பெரியவர் கக்கன் ஆகியோர் எல்லாம் வீற்றிருந்த சட்டசபையில்  எதிர்க் கட்சி வரிசையிலே நான் சென்று அமர்ந்தேன்.    அமர்ந்திருந்த போது என் மேஜையில், சில பேப்பர்கள் வைக்கப்பட்டிருந்தன.   பேப்பர்கள் எல்லாம் நாளேடுகள் அல்ல.   அரசு ஏடுகள்.    அவை என்னவென்று எடுத்துப் பார்த்தேன்.   அதில் சாதிவாரியான பட்டியல்  இருந்தது.   அதைப் படித்துப் பார்த்தால்,  ஒவ்வொரு சாதிக்கும் என்ன சதவிகிதம் என்று குறிப்பிட்ட போது,  பிராமணர்கள் இத்தனை சத விகிதம்,  செட்டியார்கள் இத்தனை சதவிகிதம்,  முதலியார்கள் இத்தனை சதவிகிதம், முக்குலத்தோர் இத்தனை சதவிகிதம்,  இசைவேளாளர் இத்தனை சதவிகிதம் என்று ஒவ்வொரு சாதிக்கும்  பெயர் குறிப்பிடும்போது  அந்தச் சாதியின் இறுதியில் ர் விகுதி போடப்பட்டு குறிப்பிட்டிருந்தது.    அதைப் படித்துக் கொண்டே வந்த போது சாணான் என்று  ஒரு வார்த்தை இருந்தது.  திடுக்கிட்டேன்.
திடுக்கிட்டு அவையில் எழுந்து ஒழுங்கு பிரச்சினை எழுப்பினேன்.   பேரவைத் தலைவராக இருந்த யு. கிருஷ்ணா ராவ், நல்ல மனிதர், பண்பாளர், சபாநாயகருக்கு ஏற்றவர்,  என்ன மிஸ்டர் கருணாநிதி, ஏன் எழுந்து நிற்கிறீர்கள் என்று கேட்டார்.   ஒழுங்கு பிரச்சினை சார்,  மேஜையில் வைத் திருக்கும் பேப்பரில் தமிழகத்தில் உள்ள சாதிகளின் பெயர்கள் எல்லாம் குறிப்பிடப் பட்டிருக்கின்றன.   அதில் செட்டியார், முதலியார், மருத்துவர், நாவிதர், வன்னியர் என்றெல்லாம் எல்லா சாதி களுக்கும் ர் விகுதி போட்டு மரியாதையாக எழுதப் பட்டிருக்கிறது.   ஆனால் சாணார் என்று போடாமல், சாணான் என்று  ன் விகுதி  போடப்பட்டிருக்கிறதே, இது சுயமரியாதைக்கே பங்கம் இல்லையா என்று கேட்டேன்.   உடனே  பெருந்தலைவர் காமராஜர், அன் றைய பிற்படுத்தப்பட்டத் துறையின் அமைச்சராக இருந்த கக்கன் அவர்களைத் திரும்பிப் பார்த்து என்ன இது என்று கேட்டார்.   உடனே கக்கன் எழுந்து,  (கருணாநிதி) சொல்வது சரிதான்,  அப்படித் தவறாக அச்சடிக்கப் பட்டிருக்கு மேயானால், உடனடியாக திருத்தப்படும் என்று சொன்னார்.  அடுத்த நாளே, சாணான்  என்றிருந்த வார்த்தை, சாணார் என்று மாற்றப்பட்டது.   இப்படி அன்றைக்கு சமுதாயத்திற்காகப் புரட்சி செய்தது  திராவிட முன்னேற்றக் கழகம்,  அந்தக் கழகத்தின் தலைவனாகிய நான்தான் என்று உங்களுக்குக் குறிப்பிட விரும்புகிறேன்.
இன்றைக்கு பத்திரிகைகளைப் பார்த்தால் பெரிய பெரிய விளம்பரம்.  மாலைப் பத்திரிகைகளை எல்லாம் எடுத்தால் அரைப் பக்க விளம்பரம், ஒரு பக்க விளம்பரம், கால் பக்க விளம்பரம்.   நாடார்களுக்கு ஏற்பட்ட நலிவை,  பழியைத்  துடைக்க வந்த அம் மாவே  என்றெல்லாம் போட்டு  அவர்களுக்கு பாத பூஜை செய்து,  போற்றிப் பதங்கள்   எல்லாம் பாடி இன்றைய தினம் விளம்பரங்களில்  பெருமைப் படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.  ஆனால் ஒரு நிமிடம் எழுந்து நின்று, நான் கேட்ட மாத்திரத்திலேயே அதை மாற்றிக்  கொடுத்தவர் அன்றைய பெருந்தலைவர் காமராஜரும், பெரியவர் கக்கனும் என்பதை இங்கே நான் சொல்ல விரும்புகிறேன்.
ஏன் இதைச் சொல்லுகிறேன் என்றால், இந்த உணர்வு ஏதோ அரசியல் ஸ்டண்ட் அல்ல.   இந்த உணர்வு  நம்முடைய நெஞ்சத்தின் அடித்தளத்திலே ஊறிப் போய் இருக்கின்ற, ஆழ்ந்து கிடக்கின்ற உணர்வு.  அதன் காரணமாகத்தான் அன்றைக்கு அந்த உணர்வைப் பயன்படுத்தி, அதை மாற்றச் செய்தேன்.
இன்றைக்கு யாரோ மாற்றி விட்டார்கள் என் றெல்லாம் சொன்னால், நீங்கள் இதை மறந்து விடக் கூடாது.    1957ஆம் ஆண்டு தமிழகச் சட்டமன்றத்தில் வைக்கப்பட்ட அந்த ஏடுகளில்  சாதிகளைப் பற்றிச் சொல்லும்போது, இந்த வார்த்தை இருந்ததா இல் லையா?  அதை எழுந்து ஒழுங்குப் பிரச்சினை எழுப்பி,  அதை எடுக்கச் சொல்லி கருணாநிதி வாத மிட்டது உண்டா இல்லையா  என்ற உண்மையைத் தெரிந்து கொள்ள முடியும்.   இன்றைக்கு இல்லை என்று  கூடச்  சொல்லுவார்கள்.  ஏனென்றால் அவ்வாறு அச்சடிக்கப் பட்ட  ஏடுகள் என் கையிலே ஒன்று இருக்கின்றது, இப்போதும் இருக்கிறது, எனவே யாரும் தப்பிக்க முடியாது.   (சிரிப்பு)
தி.மு.கழக ஆட்சியிலே நடத்திய விழாவை மீண்டும் நடத்துகிறார்கள்
இன்னும் கூடச் சொன்னார்களாம்.   கருணாநிதி  அதைப் படிக்கவில்லை,  நாங்கள் சொல்லித்தான் இருக்கிறோம் என்று சில அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சொன்னார்களாம்.  எதை?  நான் விவரமாகச் சொல்லு கிறேன்.   தமிழ்நாட்டின் சட்ட மன்ற வரலாற்றில்  வைர விழா,  பொன் விழா,  பவள விழா என்றெல்லாம் நடை பெறும்.
1997ஆம் ஆண்டு  நாங்கள் ஆட்சியிலே இருந்த போது  பவள விழாவையும், வைர விழாவையும் சேர்த்து நடத்தி முடித்து விட்டோம்.   இப்போது  அதே வைர விழாவை இப்போது  இது என்ன வைரமோ, என்ன பொன்னோ தெரியவில்லை  -  அதே விழா வை நடத்தியிருக்கிறார்கள்.    நடத்தியவர்களாவது சரியாக நடத்தினார்களா என்றால் இல்லை.   அதிலே அவர்கள் பேசிய பேச்சுக்களை யெல்லாம் நான் தொலைக் காட்சியிலே கேட்டேன்.   அதைக் கேட்ட போது,  தமிழ்நாட்டில் யார் யார் ஆட்சி நடைபெற்றது என்றெல்லாம்  சொல்லி விட்டு  -   சென்னை ராஜ்யம் என்ற பெயரை  தமிழ்நாடு  என்று  1968ஆம் ஆண்டு மாற்றினார்கள் என்று பேசினார்கள்.   ஆனால் அவ்வாறு பெயரை யார் மாற்றினார்கள் என்று சொல்லவே இல்லை.   சொல் லலாமா?   அண்ணாவின் பெயரைச் சொன்னால் அது பெரிய பாவம் அல்லவா?   பெருந்தலைவர் காமராஜர் காலத்திலே கோரிக்கை வைக்கப்பட்டு, அண்ணா காலத்திலே நிறைவேற்றப் பட்ட  அந்தக் கோரிக்கை, அந்தக் கோரிக்கை  - தமிழ் நாடு என்ற அந்தக் கோரிக்கை  - நிறைவேறியது யாரால் என்பதைக் கூடச்  சொல்லாமல்  -  அண்ணாவால் அது நிறைவேறியது என்பதைக் கூட மறைத்து விட்டு ஒரு விழா நடத் தினார்கள்.   அதற்குப் பெயர் வைரவிழா என்று சொன்னார்கள்.   அது வைர விழாவா, வீண் விழாவா என்று தெரியவில்லை.   ஏனென்றால் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய  பழைய கால வரலாறுகள்  - நாம் என்றைக்கும் சமுதாய மக்களை  - ஒன்று போல் நடத்தக் கூடிய  - சமமாக நடத்தக் கூடிய  - அனைவருக்கும் உரிமைகளைத் தரக் கூடிய  -  அனை வருடைய சுய மரியாதையையும் காப்பாற்றக் கூடிய  இயக்கமாக  திராவிட முன்னேற்றக் கழகம் இருந்தது என்பதற்காகத்தான் இதைக் குறிப்பிடுகிறேனே அல்லா மல் வேறல்ல.
இலங்கைத் தமிழர்களுக்காக குரல் கொடுத்தது தி.மு.கழகம்தான்
தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் பிறந்தநாளில் பெரியார் கல்வி நிறுவன மாணவ, மாணவிகளின் சார்பில் நடைபெற்ற கலைநிகழ்ச்சி (2.12.2012, சென்னை)
அந்த இயக்கம் இன்றைக்கு திராவிடர் கழகத்தோடு சேர்ந்து  பல செயல்களை ஆற்றிக் கொண்டிருக் கின்றது.   இன்று பேசிய நண்பர்கள் சில பேர்,  தங்கள் பேச்சின் இடையே இலங்கைத் தமிழர்களைப் பற்றிக் குறிப்பிட்டார்கள்.  அந்த இலங்கைத் தமிழர் களுக்காக குரல் கொடுத்தது திராவிட முன்னேற்றக் கழகம் என்பதை யாரும் மறுக்க முடியாது.   இன்னும்  சொல்லப் போனால்   அறிஞர் அண்ணா அவர்கள் காலத்திலேயே  இலங்கைத் தமிழர்களுக்காக குரல் கொடுக்கப்பட்டது, அது எப்படிப்பட்ட குரல் என் பதை உங்களிடத்திலே நான் படித்துக் காட்ட விரும்புகிறேன்.
10-5-1961 அன்று  கழகத்தின் பொதுச் செயலாளராக இருந்த அண்ணா  அவர்கள் அய்.நா. பொதுச் செயலா ளருக்கு ஒரு கேபிள்  -  கடல் வழி தந்தி அனுப்புகிறார்.  இன்றைக்கு தம்பிகள் ஸ்டாலினும், டி.ஆர். பாலுவும் சென்று  எந்தக் கருத்தை அய்.நா. மன்றத்தில் எடுத்து வைத்தார்களோ, அந்தக் கருத்தை 1961ஆம் ஆண்டு அண்ணா அவர்கள் கழகத்தின் பொதுச் செயலா ளராக இருந்த போது  கடல்வழி தந்தி மூலமாக அனுப் பினார்கள்.   அதில், இலங்கையில் வாழும் 25 லட்சம் தமிழர் களை அழித்தொழிக்கும் பயங்கர நிலைமை யை அடக்கவும்,  அடக்குமுறை கொடுமையில் இருந்து அவர்களை விடுவிக்கவும் திராவிட முன் னேற்றக் கழகம் ஒரு வேண்டுகோளைத் தந்துள்ளது.   இலங்கையில் தமிழர் தலைவர்கள் சிறைப்படுத்தப் பட்டுள்ளனர்.  தமிழர்கள்  அச்சத்திலும் ஆபத்திலும் அழுத்தி வைக்கப்பட் டுள்ளனர்.   நீங்கள் அய்.நா. சபை சார்பில் தயவு செய்து இந்தப் பிரச்சினையில் தலை யிட்டு அமைதிப்படுத்தவும்,  மனித உரிமைகளைப் பாதுகாக்கவும்,  நிலைமை நேரிடை யாகக் கண்டறிய  ஒரு ஆய்வுக் குழுவை நியமிக்கவும்,  தமிழ் மொழி யையும்  தமிழர்களையும் அழிக்கச் செய்யும் முயற்சி களைத் தடுத்து நிறுத்தவும்  ஆவன செய்ய வேண்டு கிறோம்.  தமிழ்நாடு முழுவதும் இந்த வேண்டுகோளை விடுக்கிறது.   உடனடியாக  அய்.நா. சபை ஈடுபட்டு  நீதி தேடினால்  அதன் மதிப்பு உயர்வதாகும் நீதியையும்  அமைதியையும் ஒற்றுமையையும் நிலை நாட்ட ஐ.நா. சபை இலங்கை தமிழர்  பிரச்சினையில்  ஈடுபடுமென  எதிர்பார்க்கிறோம்.
- சி.என். அண்ணாதுரை,
பொதுச்செயலாளர், தி.மு.க. 10-.5.-1961
ஏதோ இப்போது தான் அய்.நா. சபைக்கு நாம் வேண்டுகோள் விடுக்கிறோம் என்பதைப் போல  சிலர் சொல்லுகிறார்கள்.  ஒரு புத்திசாலி சொல்லி யிருக்கிறார்.   இதை நீங்கள்  ஐ.நா. சபைக்கு  இங்கே யிருந்தே கடிதம் அனுப்பியிருக்கலாமே, பேக்ஸ் மூலமாகத் தெரிவித் திருக்கலாமே என்று அமைச்சராக இருந்த ஒருவர், அவரே அய்.நா. மன்றத்திற்கு நேரில் சென்றதை மறந்து விட்டுச் சொல்லியிருக்கிறார்.
இதுதான் தமிழர்களிடம் உள்ள விதண்டாவாதம்.   தமிழன் உருப்படாமல் போனதற்குக் காரணமே, இது தான்.   இல்லாவிட்டால் பிரபாகரன் ஆரம்பித்த அந்தக் காலத்திலேயே  நமக்கு  அவர் ஆயுதம் ஏந்திப் போரிடத் தொடங்கிய  அந்தக் காலத்திலேயே நமக்கு ஈழத் தமிழர்களின் விடுதலை கிடைத்திருக்கும்.   அது கிடைக்காமல் போனதற்குக் காரணம், அங்குள்ள தமிழர்களை நசுக்கிய சிங்களவர்கள் அல்ல.   இங்குள்ள தமிழர்கள்  - அவர்களும் வேறுபட்டு  -  இந்த வேறுபாட்டின் காரணமாக அங்குள்ள தமிழர்களையும் வேறு படுத்தி, அதன் காரணமாக வேற்றுமை விரிவடைந்து, ஒற்றுமை நீங்கி, இலங்கையிலே கிடைக்க வேண்டிய உரிமைகள்,  ஈழத் தமிழகம் கிடைக்கவில்லை.   ஆனால் அந்த ஈழத் தமிழகம் கிடைப்பதற்கான முயற்சிகளை  நானும், நம்முடைய வீரமணி அவர் களும், நம்முடைய சுப. வீரபாண்டியன் அவர்களும், நம்முடைய தொல். திருமாவளவன் அவர்களும் இருக்கின்ற இந்த டெசோ அமைப்பின் மூலமாக நாங்கள்  பெறுவதற்கான முயற்சிகளிலே ஈடுபட்டிருக் கிறோம்.    அந்த முயற்சிகள் வென்றிட  உங்களுடைய ஒத்துழைப்பு தேவை. எனவே இந்தக் கூட்டத்தில், இந்த இனிய விழாவில் நான் என்னுடைய  இளவல் வீரமணி அவர்களை வாழ்த்தும் அதே நேரத்தில்  இந்த வாழ்த் துகள் எல்லாம்  உண்மையாக இருக்க வேண்டு மேயானால்,  இந்த வாழ்த்துகள் எல்லாம் பலிக்க வேண்டுமேயானால்,  இந்த வாழ்த்துகளால் நாங்கள் பெற்றுள்ள உரமும்,  உறுதியும் நிலைத்து அதன் காரணமாக  இந்த இயக்கத்தின் கொள்கைகள்,  சமுதாயக்  கொள்கைகளானாலும், இலங்கைத் தமிழர் களைக் காப்பாற்றுகின்ற குறிக்கோள்,  கொள்கை களானாலும்,  இவைகள் எல்லாம் வெற்றி  பெற நீங்கள் எல்லாம் உறுதுணையாக இருக்க வேண்டும், உறு துணையாக இருக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டு  -  வாழ்க வீரமணியார்  -  வாழ்க அவருடைய தொண்டு  - வெல்க  அவருடைய தியாகம்  - வெல்க அவருடைய ஏடு விடுதலை  -  அவருடைய முயற்சிகள் எல்லா திக்குகளிலும்   - வெளி நாடுகளிலும்  பரவி  - இன்றைக்கு அவர் பெற்றிருக்கின்ற இந்தப் புகழ் மேலும் மேலும் பரவிட வேண்டும் என்று என்னு டைய வாழ்த்துகளைத் தெரிவித்து விடைபெறு கிறேன்.
- இவ்வாறு தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் உரை யாற்றினார்.

5 அல்லது 10 ஆண்டுகளுக்குப்பின்...

நான் இந்த நேரத்தில்  தந்தை பெரியார் அவர் களுடைய  பெயரால் உள்ள இந்த மன்றத்திலே அமர்ந்து சொல்கிறேன்.  இனி பத்தாண்டு காலத் திற்கு மேல்  ஜாதியை வைத்து எவரும் தமிழ் நாட்டிலே  யாரையும் ஏமாற்ற முடியாது.   (கை தட்டல்)   ஏனென்றால் பார்க்குமிடம் எல்லாம், இன்றைக்கு இளைஞர்கள் தயாராகிக் கொண்டு வருகிறார்கள்.   நான் திராவிடர் கழகத்திலே உள்ள இந்த இளைஞர்களையும் பார்க்கிறேன்.  திராவிட முன்னேற்றக்  கழகத்திலே இன்றைக்கு வளர்ந்து வருகின்ற இளைஞர்களையும் பார்க்கிறேன்.   அந்த இளைஞர் அணியினர் இன்றைக்கு வேகமாக  விறுவிறுப்பாக  திராவிட இயக்கத்தின் கொள்கை களை,  சமுதாயக் கொள்கைகளை பின்பற்றக் கூடிய வீராதி வீரர்களாக,  இளைஞர் அணியாக வளர்ந்து வருகின்ற காட்சியைப் பார்க்கின்றேன்.   அவர்கள் எல்லாம் இன்னும் அய்ந்தாண்டு காலத்திற்குப் பிறகு, பத்தாண்டு காலத்திற்குப் பிறகு,  இந்த இயக்கத்தை, இந்தச் சமுதாயத்தை வாழ்த்தி, ஏற்று, வளர்த்து நடத்தக் கூடிய ஆற்றலும், அறிவும் பெற்றவர்களாக ஆகிவிடுவார்களேயானால் பிறகு ஜாதிக்கு வேலையே இல்லை.
- தமிழர் தலைவர் பிறந்த நாள் விழாவை கலைஞ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக