வியாழன், 20 டிசம்பர், 2012

குஜராத்தில் மோடியின் வெற்றி உறுதி

அகமதாபாத்: குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. குஜராத்தில் பெரும்பான்மையான இடங்களில் பா.ஜ. முன்னிலையில் உள்ளது. இந்த மாநிலத்தில் நரேந்திர மோடியின் ஹாட்ரிக் வெற்றி உறுதியாகி உள்ளது. இமாச்சல பிரசேதத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கிறது. குஜராத் சட்டசபைக்கு கடந்த வாரம் இரண்டு கட்டமாக தேர்தல் நடந்தது. மொத்தமுள்ள 182 தொகுதிகளில் முதல்கட்டமாக கடந்த 13ம் தேதி 87 தொகுதிகளிலும், இரண்டாம் கட்டமாக 17ம் தேதி 95 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடந்தது. முதல்கட்ட தேர்தலில் 68 சதவீத வாக்குகளும் இரண்டாம் கட்ட தேர்தலில் 71 சதவீத வாக்குகளும் பதிவாயின. பதிவான வாக்குகள் அனைத்தும் மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டிருந்த 33 வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டன.

இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. ஆரம்பம் முதல் பெருவாரியான இடங்களில் பா.ஜ. வேட்பாளர்கள் முன்னிலை பெற்றிருந்தனர். பகல் 11 மணியளவில் 155 தொகுதிகளுக்கான முன்னிலை நிலவரம் அறிவிக்கப்பட்டது. இதில் பா.ஜ. 107 இடங்களிலும், காங்கிரஸ் 68 இடங்களிலும் முன்னிலை பெற்றிருந்தன. முன்னாள் முதல்வர் கேசுபாய் படேல் தொடங்கிய ஜிபிபி கட்சி 4 இடங்களில் மட்டுமே முன்னிலையில் இருந்தது. சுயேச்சைகள் 3 இடங்களில் முன்னிலையில் இருந்தனர். பெரும்பான்மையான இடங்களில் பா.ஜ. முன்னிலை பெற்றிருப்பதை தொடர்ந்து இந்த மாநிலத்தில் மீண்டும் பா.ஜ. ஆட்சி அமைவது உறுதியாகிவிட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக