வியாழன், 20 டிசம்பர், 2012

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு : சசிகலாவிடம் நீதிபதி சரமாரி கேள்வி

பெங்களூர் தனி கோர்ட்டில் இன்று ஆஜரான சசிகலாவிடம் நீதிபதி சரமாரியாக கேள்விகளை கேட்டார். முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை பெங்களூர் தனி கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கை தனி கோர்ட் நீதிபதி பாலகிருஷ்ணா விசாரித்து வருகிறார். இந்த வழக்கு கடந்த 11ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது சசிகலா தரப்பில் வக்கீல் மணி சங்கர் ஆஜராகி, ‘பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களில் சில, அரசு தரப்பில் பயன்படுத்தாமல் உள்ளது.
அவற்றை திரும்ப தர கோர்ட் உத்தரவிட வேண்டும்’ என்றார். இதற்கு அரசு வக்கீல் சந்தேஷ் சவுடா எதிர்ப்பு தெரிவித்து வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பாலகிருஷ்ணா, சசிகலா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து, விசாரணையை 19ம் தேதிக்கு தள்ளிவைத்தார். அதன்படி, இந்த வழக்கு, இன்று காலை விசாரணைக்கு வந்தது. அப்போது சசிகலா கோர்ட்டில் ஆஜரானார். நீதிபதி பாலகிருஷ்ணா சரமாரியாக கேள்விகளை கேட்க தொடங்கினார்.

சசிகலா வங்கி கணக்கில் இருந்து எந்த, எந்த நிறுவனங்களுக்கு எல்லாம் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டது உள்ளிட்ட கேள்விகளை நீதிபதி கேட்டார். ஒவ்வொரு கேள்விக்கும் சசிகலா பதில் அளித்தார். அவற்றை நீதிபதி பதிவு செய்துகொண்டார். இன்று பகல் 12 மணிவரை நீதிபதி 20 கேள்விகளை கேட்டார். ஏற்கனவே சசிகலாவிடம் 632 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இளவரசி, சுதாகரன் ஆகியோர் இன்று கோர்ட்டில் ஆஜராகவில்லை. அதற்கான மனுவை அவர்களது வக்கீல்கள் கோர்ட்டில் தாக்கல் செய்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக