வியாழன், 8 நவம்பர், 2012

பார்ப்பன கண்ணோட்ட HERO மோட்டர் பைக் விளம்பரம்

ஷிவ்ராம் அய்யர்-சௌம்யா அய்யர்-Splendor அய்யர்: ஜாதியை ஒழிச்ச HERO


‘தன் பெயருக்கு பின்னால் ஜாதி பெயரை போட்டுக் கொள்கிற இழிவான பழகத்தை தமிழகத்தலிருந்து ஒழித்தவர் தந்தை பெரியார். ஜாதி உணர்வாளர்களிலிருந்து ஜாதி சங்கத் தலைவர்கள் வரை அப்படி போட்டுக் கொள்வதற்கு வெட்கப்படும் சூழ்நிலையை அவரே உருவாக்கினார்.
இந்த அதிசயம் இந்தியாவில் வெறெங்கும் நிகழாதது. கேரளா, மேற்கு வங்கத்தில் உள்ள கம்யுனிஸ்டுகள்கூட நம்புதிரி, சட்டர்ஜி, பட்டாச்சாரியா என்று ‘பெருமை’யோடு அலைந்து கொண்டு இருக்கிறார்கள்..
என்று கடந்த ஆறு ஆண்டுகளாக பெருமையோடு நான் எழுதியும் பேசியும் வருகிறேன்.

‘என்னடா பெரிய பெரியார் பெருமை? வெங்காயம்‘ என்ற சொல்வது போல்,
வெளிநாட்டிற்கு சென்று நன்கு படித்து, நிறைய சம்பாதித்து, அமெரிக்கக்காரர்களே வியக்கும் அளவிற்கு இங்கிலிஷ் பேசி, வெள்ளைக்கார பெண்களே மிரளும் அளவிற்கு உடை உடுத்தி, நவீன நாகரிகத்திற்கு தன்னை மாற்றிக் கொண்டு, தங்கள் ஆச்சாரத்திற்கு எதிராக புரட்சிகர நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள்,
திரும்ப இந்தியாவிற்கு வரும்போது, ஜனனி அய்யராக, லட்சுமி அய்யங்கராக, அவதாரம் எடுத்து வருகிறார்கள்.
‘என்னங்க இது, பெண்கள்கூட ஜாதி பெயர் போட்டுக்கிறீங்க?‘ என்று கேட்டால்,
‘ஏன் ஜாதி ஆண்களுக்கு மட்டும்தான் சொந்தமானதா? பெண்கள் போட்டுக் கொள்ளக்கூடாதா?‘ என்று ஆணாதிக்க எதிர்ப்பு, புரட்சிகர வசனம் பேசுவாங்க போல…
அண்ணல் அம்பேத்கர் அமெரிக்காவில் இருக்கும்போதுதான் ‘ஜாதி ஒழிப்பு’ என்ற நூலை எழுதினார். அதற்கு பழிவாங்கும் நோக்கத்தில் அக்கிரகாரத்து பொண்ணு அமெரிக்காவிலிருந்து வரும்போது ஜாதியின் புத்தம் புதிய பதிப்பாக ஜாதி பட்டத்தோடு வருகிறார்.
ஆண்கள் மட்டுமே ஜாதி பெயர் போட்டுக் கொண்ட இந்தியாவின் இழிவான செயலை, அயல்நாடுகளுக்குப் போய் வந்த சில அக்கிரகாரத்து பெண்களும் செய்தததைப்போல்,
ஜாதி ஒழிக்க வந்ததாக சொல்லிக் கொண்ட கிறித்துவ நிறுவனங்கள், தன் பிரசங்கி பத்மா என்ற பெண்ணுக்கு, முதலியார் என்று இழிவான பட்டம் கொடுத்து, பத்மா முதலியார் என்று இந்து சமூகமே கேவலமாக பேசும் அளவிற்கு கொஞ்சமும் வெட்கமில்லாமல் நடந்து கொண்டன.
இவைகளை எல்லாம் தூக்கி சாப்பிடுகிற அளவிற்கு, பெரிய புரட்சி இன்று(08-11-2012) நடந்திருக்கிறது.
இன்றைய நாளிதழ்களில் HERO கம்பனியின் Splendor மோட்டர் பைக்கிற்கான விளம்பரம்,
‘ஷிவ்ராம் அய்யர் – சௌம்யா அய்யர் – ஸ்பௌண்டர்அய்யர்’
‘தந்திடுமே ஒரு குடும்பத்தின் உணர்வை’ என்று அறிவிக்கிறது.
மோட்டர் பைக்கிற்கே பூணூல் போட்டு அய்யர் ஆக்கிட்டாங்க.
நிச்சயமா, இப்படி ஒரு விளம்பர யோசனை ஒரு அய்யருக்குத்தான் வந்திருக்கும்.
மிக நிச்சயமாக அந்த அய்யர் அமெரிக்கா, அஸ்திரேலியா, அய்ரோப்பாவில் ‘டிரைனிங்’ எடுத்த அய்யராத்தான் இருப்பாரு.
ஆனால், அந்த அதிகாரி அய்யர், ஆண் அய்யரா? பெண் அய்யரா? தெரியலை.
தகுதியானவர்கள் விரும்புவதினால், அது தரமான பொருளாக இருக்கும்’ என்ற நோக்கத்தில், இந்த விளம்பரம் செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், அதை இப்படியும் புரிந்து கொள்ளலாம்,
‘HERO கம்பனியோட Splendor மோட்டர் பைக் அய்யர் குடும்பத்திற்கு மட்டும்தான்’
*
இந்த விளம்பரம் பார்ப்பன கண்ணோட்டம் கொண்டதாக இருக்கிறது என்று நான் கண்டித்து எழுதுகிறேன்.
வேற யாராவது வந்து, இதுக்கு பதில் எழுதுறேன் என்று,
“HERO கம்பெனி ஒரு நவீன பாரதியாக அவதாரம் எடுத்திருக்கிறது. அன்று ஜாதி ஒழிப்பிற்காக தன் வாழ்கையையே அர்பணித்துக்கொண்ட மகாகவி பாரதி, ஒரு தாழ்த்தப்பட்டவருக்கு பூணூல் அணிவித்தான்.
அவனின் வாரிசாக பார்ப்பனியத்திற்கு எதிராக மோட்டர் பைக்கிற்கே ‘அய்யர்’ என்று பெயர் வைத்து, ஒரு இயந்திரத்தையே பிராமணர் ஆக்கியிருக்கிறது HERO நிறுவனம்.” என்று ஒரு அத்துவைத விளக்கம் கொடுக்காமல் இருந்தால் சரி.   http://mathimaran.wordpress.com/2012/11/08/572/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக