வியாழன், 8 நவம்பர், 2012

அடிப்படை கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரான 66-A

இந்தியாவில் சட்டங்களை எழுதுபவர்கள் மற்றும் திருத்துபவர்களின் சட்ட அறிவைக் குறித்து நாம் சந்தேகப்பட வேண்டியதில்லை. பல்வேறு நாடுகளின் சட்டங்களை வாசித்தவர்கள். இத்துறையில் பழம் தின்று கொட்டை போட்டவர்கள் என்பதையெல்லாம் நாம் கண்ணை மூடிக்கொண்டு ஒப்புக் கொள்ளலாம். ஆனால் அவர்களுக்கு நம் சமூகம் குறித்த சரியான புரிதல் இருக்கிறதா என்பதுதான் நம்முடைய சந்தேகம். ஒரு புதிய சட்டத்தின் மூலமோ, சட்டத் திருத்தத்தின் மூலமோ அதிகாரத்தில் இருப்பவர்கள் சாதாரண மனிதர்களை மிக சுலபமாக பழிவாங்க முடிந்தால் அந்த சட்டமோ, சட்டத் திருத்தமோ எவ்வளவு அபத்தமானது.. ஆபத்தானது?
பெங்களூரில் மாலினி என்ற பெண் தற்கொலை செய்துக்கொண்டார்
இவர் ஐ.ஐ.எம்.மில் எம்.பி.ஏ. படித்துக் கொண்டிருந்தார். இவருக்கும், இவரது காதலருக்கும் ஏதோ தகராறு. வாய்ச்சண்டை போட்டு காதலர் பிரிந்துச் சென்றதும் ஃபேஸ்புக்கில் ஒரு ஸ்டேட்டஸ் இட்டார். “மகிழ்ச்சியான நாள் இன்று. கேர்ள்ஃப்ரண்டை பிரிந்துவிட்டேன். சுதந்திரநாள் வாழ்த்துகள்”. மாலினி தற்கொலை செய்துக் கொண்டார். காதலரின் ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் இந்த தற்கொலைக்கு தூண்டுதல் என்று காவல்துறை கருதிஅவர்மீது இன்ஃபர்மேஷன் ஆக்ட் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள்அனேகமாக மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனையோடுவேறு சில தண்டனைகளும் கிடைக்கலாம்.
அடிக்கடி இந்தியாவில் சைபர் சட்டங்கள் தவறாகப் பயன்படுத்துவது தொடர்கதை ஆகிவிட்டது. இந்திய தண்டனைச் சட்டத்தோடு ஒப்பிடுகையில் சைபர் சட்டத்தின் தண்டனை ஒப்பீட்டளவில் அதிகம். ஐ.டி. சட்டம் 66-ஏவின் படி causing annoyance or inconvenience electronically என்று குறிப்பிடப்படும் குற்றத்துக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை (இதனால் உயிரிழப்பு ஏற்பட்டால் மேலும் சில ஆண்டுகள்) வழங்கப்படுகிறது. இதில் annoyance என்று சொல்லப்படுவதற்கு என்ன வரையறை என்கிற தெளிவு இல்லை. கலைஞரை யாராவது திட்டினால் நான் irritate ஆவேன். அவ்வாறு திட்டியவரின் மீது 66-ஏவின் படி வழக்கு தொடர்ந்து மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை என்றால் இது என்ன நீதி?

‘துப்பாக்கி திரைப்படம் மொக்கை’ என்று எனக்கு தோழர் கார்க்கி ஒரு எஸ்.எம்.எஸ். அனுப்புகிறார். அதை நம்பி நாலு பேருக்கு நானும் ஃபார்வேர்ட் செய்கிறேன். இதனால் இளையதளபதி விஜய் மன உளைச்சல் அடைந்தால், அவர் கார்க்கி மீதும் என் மீதும் புகார் கொடுக்கலாம். அந்த புகாரை காவல்துறையும், நீதித்துறையும் ஏற்றுக்கொள்ளவைக்கும் செல்வாக்கும், அதிகாரமும் விஜய்க்கு உண்டல்லவா? மேலும் இப்பிரிவின் கீழ் வழக்கு தொடுக்கப்பட்டவரை கைது செய்ய வாரண்ட் அவசியமில்லையாம்.
66- என்னவோ இண்டர்நெட்டில் ஈடுபடும் காமன்மேன்களை மட்டும்தான் அடக்கும் என்று நினைத்தோ என்னவோ ஊடகங்கள் போதுமான எதிர்ப்பைத் தெரிவிப்பதில்லை. ஒருவகையில் குஷியாக கூட இருப்பதாகத் தோன்றுகிறது. பொதுவாக பத்திரிகைகளில் எழுதப்படுவதற்கு ‘அவதூறு வழக்கு’கள் தொடுக்கப்படுவது வழக்கம். புரட்சித்தலைவி அம்மா அவர்களால் ‘அவதூறு வழக்கு’ இன்று நாடு முழுக்க பிரபலமாகியிருக்கிறது. அவதூறு வழக்கு என்பது கிட்டத்தட்ட விசாரணைக் கமிஷன் மாதிரி. பெரியதாக செய்கூலி, சேதாரம் ஏற்பட்டு விடப்போவதில்லை. ஆனால் இணையத்தில் எழுதுபவர்கள் மீது மட்டும்தான் 66-ஏ பாயுமென்று நிறைய பேர் நினைக்கிறார்கள்.
இன்று அச்சில் வரும் எல்லா ஊடகங்களுமே இணைய வடிவையும் கொண்டிருக்கிறது. அவ்வகையில் எந்த ஒரு பத்திரிகையின் மீதும், தொலைக்காட்சி சேனல் மீதும் 66-ஏ-வை பாயவைக்க முடியும். any information which he knows to be false, but for the purpose of causing annoyance, inconvenience, danger, obstruction, insult, injury, criminal intimidation, enmity, hatred or ill will, persistently by making use of such computer resource or a communication device என்றுதான் சட்டம் கூறுகிறது. இந்த communication device என்கிற பதம் வெறுமனே இணையத்துக்கு மட்டுமல்ல. டிவி, மொபைல்போன் ஆகியவற்றுக்கும் கூட பொருந்தும் இல்லையா? எனவே 66-ஏ என்பது சாதாரண மனிதர்களுக்கு மட்டுமின்றி, ஊடகங்களுக்கும் கூட அச்சுறுத்தல்தான் என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும். ஒரு கட்டுரை எழுதியதற்காக அந்த பத்திரிகையின் நிருபரில் தொடங்கி ஆசிரியர், பதிப்பாளர் அத்தனை பேரும் மூன்று வருட சிறைத்தண்டனை பெறக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.
இந்திய அரசியல் சட்டம் வழங்கியிருக்கும் அடிப்படை உரிமையான கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரானது என்கிற வகையில் 66-ஏ-வை எதிர்க்க அனைவருமே (ஊடகங்களும் சேர்த்துதான்) கடமைப்பட்டவர்கள் ஆகிறோம்.
தவறாமல் வாசிக்கவும் : 66-ஏ குறித்த அய்யா தருமியின் பதிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக