புதன், 7 நவம்பர், 2012

ராஜஸ்தான் உயர் நீதிமன்றம்: பிடிக்காத தம்பதிகள் பிரிந்து விடுவது மேல்''…

ஜெய்ப்பூர்: மனதிற்குப் பிடிக்காத தம்பதிகளை ஒருவரை ஒருவர் சகித்துக்கொண்டு வாழ வற்புறுத்துவது நரகவாழ்க்கைக்கு ஒப்பாகும் என்று ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மோகன்லால் - ரேகா தம்பதியருக்கு குடும்பநல நீதிமன்றம் விவாகரத்து அளித்தது. இதனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் ரேகா மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த நீதிபதிகள், 1994ஆம் ஆண்டு திருமணம் செய்த மோகன்லால் - ரேகா தம்பரியர், திருமணம் செய்து இரண்டே ஆண்டுகளில் பிரிந்துள்ளனர். பின்னர் தம்பதியர் இடையே மீண்டும் சமரசம் ஏற்பட்டு 2000ஆவது ஆண்டு சேர்ந்து வாழ்ந்து குழந்தை பெற்றுள்ளனர். பிறகு மீண்டும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2001ஆம் ஆண்டில் பிரிந்துவிட்டனர். இந்த நிலையில் இவர்களுக்கு குடும்ப நல நீதிமன்றம் விவகாரத்து வழங்கியுள்ளது.

15 ஆண்டு பிரிவு
இந்த தம்பதி தங்களது 18 ஆண்டு கால திருமண வாழ்க்கையில் 15 ஆண்டுகளுக்கு மேல் பிரிந்தே வாழ்ந்துள்ளனர். மேலும், குடும்ப சண்டையில், மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் கணவரும், அவரது குடும்பத்தாரும் காவல்துறையின் கைது உள்ளிட்ட இன்னல்களுக்கு ஆளானதால், கணவர், அந்த பெண்ணுடன் சேர்ந்து வாழ விரும்பவில்லை.
எனவே, திருமண வாழ்க்கை என்பதே, தங்களது வாழ்க்கையில் வரும் இன்பங்களை பகிர்ந்தும், துன்பங்களை ஒற்றுமையோடு அணுகி தீர்வு காண்பதுமே ஆகும். ஆனால் அந்த அடிப்படை எதுவும் இவர்களது உறவில் இல்லை. எனவே விவாகரத்து அளிக்கப்பட்டதில் எந்த தவறும் இல்லை என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
மனு தள்ளுபடி
மேலும், திருமண பந்தத்தில் மனதுக்குப் பிடிக்காத ஒருவரை சகித்துக் கொண்டு வாழ வேண்டும் என்று வற்புறுத்துவது, இருவரது வாழ்க்கையையுமே நரகமாக்கிவிடும் என்று கூறிய நீதிபதிகள் ரேகா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக