புதன், 7 நவம்பர், 2012

ஜெயலலிதா ஆட்சியில் போலீஸை வசமாக மாட்டிவிடும் முயற்சியில் முன்னாள் அமைச்சர்!


Viruvirupu
தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகள், கைதுகள் எல்லாம் பரபரப்பாக நடந்த நாட்கள் முடிந்து, யாரும், எந்தத் தண்டனையும் பெறாமல் உள்ளார்கள். இதனால், “தி.மு.க. முக்கியஸ்தகளை கைது செய்வது பழிவாங்கல் நடவடிக்கை” என்று ஆரம்பம் முதல் தி.மு.க. கூறிவந்தது, மக்களிடம் ஓரளவுக்கு எடுபடத் தொடங்கியுள்ளது.
அரசுக்கு சங்கடமான இந்த சூழ்நிலையில், தி.மு.க. முன்னாள் அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் தாம் கைது செய்யப்பட்டது பழிவாங்கல்தான் என்பதை நிரூபிக்க முனைப்புடன் உள்ளார். தம்மிடமுள்ள ஆதாரங்களுடன் கோர்ட்டுக்கு செல்லவும் தயாராகிறார்.
தி.மு.க.-வின் திருப்பூர் மாவட்டச் செயலாளரான சாமிநாதனை, ‘கொலை மிரட்டல்’ கேஸ் ஒன்றில் பிடித்து 3 வாரங்களாக சிறையில் போட்டிருந்தது காவல்துறை. தமாஷ் என்னவென்றால், சாமிநாதன் வெளியே வந்துவிட்டார். இவர் மிரட்டியதாக புகார் கொடுத்த நபர் இப்போது உள்ளே போயிருக்கிறார்.
காரணம், புகார் கொடுத்தவர்மீது பல மோசடிக் குற்றச்சாட்டுகள் உள்ளன!

மூலனூர் கோபிநாத் என்ற நபர் கொடுத்த புகாரை அடிப்படையாக வைத்தே சாமிநாதனை, போலீஸ் கைது செய்திருந்தது. புகார் கொடுத்த கோபிநாத், ஏற்கெனவே நில விவகாரம் ஒன்றில் சம்பந்தப்பட்டவர். இப்போது மோசடிக் குற்றச்சாட்டின் பேரில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்.
சாமிநாதன் இவரை மிரட்டியதாகச் சொன்ன தேதியில், கோபிநாத் வெளியூரில் இருந்ததாக அரசுப் பதிவேடுகள் கூறுகின்றன. தவிர சாமிநாதன் மிரட்டியதாக கொடுக்கப்பட்ட புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதற்கு முன்னரே, கோபிநாத்தின் பெயர் போலீஸ் ரிக்கார்டுகளில் உள்ளது.
“என் மீது புகார் கொடுத்தவரின் லட்சணத்தைப் பாருங்கள். இவரது புகாரை நம்பும் அளவுக்கு சென்ற போலீஸ் அதிகாரிகள்மீது சி.பி.ஐ. விசாரணை வேண்டும்” என்று கோர்ட்டை நாடும் நடவடிக்கையில் இறங்கி விட்டாராம் சாமிநாதன். இது சரியாக வேலை செய்தால், சில போலீஸ் அதிகாரிகள், கோர்ட் படி ஏற வேண்டிய நிலை ஏற்படலாம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக