வியாழன், 8 நவம்பர், 2012

1 லட்சத்து 36 ஆயிரம் பேருக்கு வேலை என்று ஏமாற்றுவதா?

சென்னை: திமுக தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:20 ஆயிரம் கோடி முதலீட்டில் தொழில்கள் தொடங்க அதிமுக அரசு சார்பில் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்காகவே ஐந்து நட்சத்திர ஓட்டலில் முதலமைச்சரே கலந்து கொள்ளும் விழா. இப்படி நடைபெறுவது இது தான் முதல்முறை.   ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள ஹுண்டாய் மோட்டார் தொழிற்சாலை திருப்பெரும்புதூரில் அமைக்கப்பட்டு, நானும், மத்திய அமைச்சராக இருந்த முரசொலி மாறனும் சென்று திறப்பு விழா நடத்தி வைத்து, வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது. அந்தத் தொழிற்சாலையில் 2ம் கட்டத்தை 4,000 கோடி முதலீட்டில் 2-2-2008ல் திமுக ஆட்சியில் திறந்து வைத்தோம். இந்தத் தொழிற்சாலையின் 2 கட்ட தொழிற் பிரிவுகளிலும் ஏற்கனவே 11 ஆயிரம் பேர் வேலை வாய்ப்புகள் பெற்றுள்ளனர். http://www.dinakaran.com/
மற்றொரு தொழிற்சாலை நோக்கியா. அதிமுக ஆட்சியில் இந்தத் திட்டத்திற்காக முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக ஜெயலலிதா பேசியிருக்கிறார். எனினும், ஒரகடத்தில் 300 கோடி முதலீட்டில் அமைக்கப்பட் டுள்ள இந்தத் தொழிற்சாலைக்காக திமுக ஆட்சியில் 26-6-2008ல் ஒப்பந்தம் போடப்பட்டது. அது போலவே செயின்ட் கோபைன் தொழிற்சாலையும் திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டுச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இன்னும் சொல்ல வேண்டுமேயானால், டிட்கோ நிறுவனத்தின் மூலமாக மட்டும் திமுக ஆட்சியில் கடந்த 2006 மே முதல் 27 தொழில்கள் தொடங்கப்பட  ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. 24 அரசாணைகள் மூலம் 24 தொழில்கள் தொடங்கப்பட அனுமதிகள் வழங்கப்பட்டன. இவற்றின் விளைவாக தமிழகத்தில் 62 ஆயிரத்து 349 கோடி முதலீட்டில், 51 புதிய தொழிற்சாலைகள் தொடங்கப்படவும், அவற்றின் மூலம் 2 லட்சத்து 35 ஆயிரத்து 464 பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைத் திடவும் வழிவகுக்கப்பட்டது.

2011ல் மைய அரசின் மத்திய புள்ளி விவர நிறுவனம், 2008-2009ல் தொழிற்சாலைகள் குறித்து ஆண்டு ஆய்வை வெளியிட்டது. அந்த ஆய்வின்படி, தமிழ்நாடு மொத்தம் 26,122 தொழிற்சாலைகளைக் கொண்டுள்ளது இதன் மூலம் தொழிற்சாலைகள் எண்ணிக்கையில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம் வகிக்கிறது;  தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் எண்ணிக்கையிலும் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது. தமிழ்நாட்டில் 17 லட்சத்து 74 ஆயிரத்து 19 பேர் தொழிற்சாலைகளில் மட்டும் பணிபுரிகின்றனர். மொத்த முதலீட்டின் வரிசையில் தமிழ்நாடு 3ம் இடம் வகிக்கிறது. மொத்த தொழில் உற்பத்தியில் தமிழ்நாடு 3ம் இடம் வகிக்கிறது.நிகர மதிப்பு கூடுதல் அளவில் தொழிற்சாலை வரிசையில் தமிழ்நாடு 3ம் இடம் வகிக்கிறது. என்று கூறப்பட்டிருந்தது. 6-11-2012 தேதி ஒரு தமிழ் நாளிதழ் செய்தியில் முதலமைச்சர் ஜெயலலிதா குறிப்பிடும் போது, எனது தலைமையிலான அரசுடன் கடந்த ஆண்டு மே 14ம் தேதி டெய்லர் இந்தியா, யமஹா மோட்டார், அசோக்லேலண்ட் நிசான் மோட்டார் நிறுவனம், எய்ச்சர் மோட்டார்ஸ், பிலிப்ஸ் கார்பன் பிளாக் ஆகிய நிறுவனங்கள் 5,700 கோடிக்கு முதலீடு செய்யும் வகையில் ஒப்பந்தம் செய்தது, இதன் மூலமாக 9,500 பேருக்கு நேரடி வேலை வாய்ப்பு கிடைக்கும் நிலை உருவாகி இருக்கிறது என்று பேசியதாக வெளியிட்டுள்ளது.

முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த ஆண்டு பதவி ஏற்றதே மே 16ம் நாள் தான் அவ்வாறு இருக்கையில் மே 14ம் தேதியன்றே மேலே குறிப்பிட்டுள்ள நிறுவனங்களோடு எவ்வாறு ஒப்பந்தம் செய்திருக்க முடியும் என்பது தான். நேற்றைய மாலைப் பத்திரிகை ஒன்றில் அதிமுக ஆட்சியில் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ள இந்த 12 தொழிற்சாலைகளும், அதில் வேலைவாயப்பு பற்றி  விரிவாக வெளியிடப்பட்டுள்ளது. கூட்டிப் பார்த்தால் 13,855 பேர்களுக்குத் தான் நேரடியாக வேலை வாய்ப்பு கிடைத்திடும். இதில் கோவையில் தொடங்கவுள்ள ஆட் இண்டஸ்டிரி பார்க் நிறுவனம் மூலமாக 2000 பேருக்கு உடனடியாக வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் படிப்படியாக 25,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று  நாளிதழ் சொல்லியிருக்கிறது. ஆனால் காலை நாளிதழில் இதே தொழிற்சாலையில் நேரடி வேலைவாய்ப்பில் 25 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று சொல்கிறார்கள்.

அந்த 25 ஆயிரம் பேரையும் உண்மை என்று கணக்கிட்டால் கூட மொத்தம் 36 ஆயிரம் பேர் தான் வருகிறது. ஆனால் அனைத்து விளம்பரங்களிலும் 1,36,000 பேர்களுக்கு வேலை வாய்ப்பு தருவதாக கொட்டை எழுத்துச் செய்திகள். எந்த அளவிற்கு நாட்டு மக்களை ஏமாற்றுகிறார்கள் என்பதை எண்ணிப் பாருங்கள்.இதைச் சமாளிப்பதற்காக நேரடியாக வேலை வாய்ப்பு இவ்வளவு பேருக்குக் கிடைத்தாலும் மறைமுகமாக வேலை வாய்ப்பு கிடைப்பதையும் சேர்த்துக் கணக்கிட்டோம் என்பார்கள். அதிலும் 14 ஆயிரம் பேருக்கு நேரடியாக வேலை என்றால் மீதி 1 லட்சத்து 22 ஆயிரம் பேருக்கு மறைமுகமாக வேலை கிடைக்கும் என்றால் அது நம்பக் கூடியதா என்பதையும் நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள். தொழில் துறையில் திமுக ஆட்சியில் செய்யப்பட்ட அளப்பரிய சாதனைகளை யும், அவை பற்றிய விவரங்களையும், இப்போது நடக்கின்ற புள்ளி விவர மாய்மாலங்களையும் கணக்கிட்டு ஒப்பிட்டுப் பாருங்கள்.இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.


ஒபாமாவுக்கு வாழ்த்து
 அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஒபாமாவுக்கு திமுக தலைவர் கருணாநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.இது குறித்து கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:அமெரிக்க மக்களிடையே ஏற்றத் தாழ்வற்றதும், இனவேற்றுமை உணர்வு அற்றதுமான சமத்துவம் நிலைக்கவும், சமதர்ம உணர்வு துளிர்த்து செழிக்கவும், இவற்றோடு இந்தியா போன்ற நாடுகளுடன் உறவு தழைக்கவும் ஒபாமாவின் வெற்றி பயன்படும் என்று நம்புகிறேன். இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக