வியாழன், 8 நவம்பர், 2012

ஒபாமா வெற்றி பெற்றது எப்படி?


பராக் ஒபாமாவுக்கு மேலும் நான்கு ஆண்டுகளை அமெரிக்கா வழங்கியுள்ளது.  ஒரு கட்டம் வரை, ரிபப்ளிகன் கட்சி வேட்பாளர் மிட் ரோம்னி ஒபாமாவோடு ஒட்டியும், பிறகு அவரை மிஞ்சியும் சென்றபோதும், இறுதிகட்டத்தில் ஒபாமாவால் சுலபமாக ரோம்னியை வீழ்த்தமுடிந்தது. வெற்றி பெறுவதற்கு  270 பிரதிநிதிகளின் ஓட்டு தேவை என்ற நிலையில், ஒபாமா 303 ஓட்டுகள் பெற்றிருக்கிறார்.
ஹார்வர்டில் சட்டம் பயின்ற பராக் ஒபாமா, இலினாய்ஸ் செனடராக (2005-2008) இருந்தவர். 2008 அதிபர் தேர்தலில் ரிபப்ளிகன் கட்சியைச் சேர்ந்த ஜான் மெக்கெய்னைத் தோற்கடித்து அதிபரானார். 2012 தேர்தலில் ஒபாமா வெற்றி பெற்றதற்குக் கீழ்வரும் காரணங்கள் பொதுவாக முன்வைக்கப்படுகின்றன. இவையே அவருடைய சாதனைகளாகவும் முன்னிறுத்தப்படுகின்றன.
  • 2011ல் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டது.
  • டெட்ராய்ட் வாகனத் தொழில்துறையைப் பிணையில் எடுத்தது.
  • இராக், ஆப்கனிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகளை விலக்கிக்கொள்வதாக அறிவித்தது.
  • மருத்துவத் துறையில் சீர்திருத்தம். ஒபாமாகேர் என்னும் பெயரில் புதிய சட்டம் (The Patient Protection and Affordable Care Act) கொண்டுவந்தது.  http://www.tamilpaper.netஓரினச் சேர்க்கையாளர்களை ராணுவத்தில் சேர்க்கக்கூடாது என்றிருந்த சட்ட விதியை மாற்றியது.
  • நடுத்தர வர்க்க மக்களை ஈர்க்கும் தேர்தல் வாக்குறுதிகள். (வரிக் குறைப்பு; கல்வி, சுகாதாரம், கட்டுமானம் உள்ளிட்ட துறைகளில் சீர்திருத்தம்; எரிசக்திஉற்பத்தியில் (bio/renewable energy) 150 பில்லியன் முதலீடு; அமெரிக்காவில் குடிபெயர்பவர்களுக்கான விதிகளை எளிமைப்படுத்துதல்; ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்களின் திருமணத்தை அங்கீகரித்தல்).
  • தேர்தல் நடைபெற்ற சமயம் வீசிய சான்டி புயலும் அதை ஒபாமா நிர்வாகம் எதிர்கொண்ட விதமும்.
மிட் ரோம்னியின் தந்தை ஜார்ஜ் டபிள்யூ ரோம்னி மிச்சிகன் கவர்னராக இருந்தவர். 1968 அதிபர் தேர்தலில் வேட்பாளராக இருந்தவர். மிட் ரோம்னி ஒரு பங்கு சந்தை நிறுவனத்தை முன்னதாக நடத்தியிருக்கிறார். 1998ல் அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதற்குப் பிறகு ஒவ்வொரு மறுதேர்தலிலும் வெற்றி பெற்றிருக்கிறார்.
2012 தேர்தல் பிரசாரத்தின்போது மிட் ரோம்னி அளித்த வாக்குறுதிகள் இவை. பொருளாதார வளர்ச்சி உறுதிபடுத்தப்படும். வேலைவாய்ப்புகள் அதிகரிக்கப்படும். தேசிய பாதுகாப்பு பலப்படுத்தப்படும். அமெரிக்கா தனது எண்ணெய் தேவைக்கு பிற நாடுகளைச் சார்ந்திருக்கவேண்டியதில்லை; அமெரிக்கா எண்ணெய் நிறுவனங்கள் அமெரிக்காவிலேயே சுலபமாக எண்ணெய் எடுப்பதற்கான வழிமுறை உருவாக்கப்படும். ஆசியாவோடு பொருளாதார ரீதியில் அமெரிக்கா போட்டியிடும். சீனாவின் சவால்கள் கட்டுப்படுத்தப்படும்.  ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்துகொள்வது அங்கீகரிக்கப்பட மாட்டாது.
மிட் ரோம்னியின் தேர்தல் வாக்குறுதிகளை அமெரிக்கா அவ்வளவு முக்கியமான எடுத்துக்கொள்ளவில்லை என்பதை ஒபாமாவின் வெற்றி ஊர்ஜிதப்படுத்துகிறது. ஒபாமாவுக்கு எதிரான அலை பலமாக வீசியபோதும், ஒபாமாவின் ஆட்சித்திறன்மீது பெரும்பாலான அமெரிக்கர்கள் நம்பிக்கை தொலைத்தபோதும், அவருக்கு மாற்றாக ஒரு ரிபப்ளிகனைப் பதவியில் அமர்த்த அவர்கள் துணியவில்லை. அந்த வகையில், ஒபாமாவின் வெற்றிக்கு ஒபாமாவைவிட மிட் ரோம்னியே அதிகம் பங்களித்திருக்கிறார் என்று சொல்லலாம்.
இத்தனைக்கும் ஒபாமா அதிபராக இருந்தபோதுதான், ஸ்டாண்டர்ட் அண்ட் பூர் நிறுவனம், முதல் முறையாக அமெரிக்காவின் கடன் மதிப்பீட்டுக் குறியீட்டை ஒரு படி கீழே இறக்கியது. சர்வதேச அளவில் அமெரிக்காவுக்கு ஏற்பட்ட மிகப் பெரிய சங்கடம் இது. அமெரிக்க நிதி நிலைமை மோசமடைந்ததற்கு ஒபாமாவே காரணம் என்று மிட் ரோம்னிகூட மிகப் பெரிய அளவில் பிரசாரத்தை மேற்கொண்டார். இருந்தும் மிட் ரோம்னியை அமெரிக்கா நிராகரித்திருக்கிறது. அதற்குக் காரணம் ஒபாமாவே குறிப்பிட்டதுபோல, மிட் ரோம்னியால் நிதி நிலைமையை விமரிசிக்கத்தான் முடிந்ததே தவிர, ஒரு உருப்படியான மாற்றை முன்மொழிய முடியவில்லை.  தெளிவான வெளியுறவுத் துறை சார்ந்த கொள்கைகளும் அவரிடம் இல்லை. தவிரவும், பிற்போக்குவாத சிந்தனைபோக்கு உடையவராகவே மிட் ரோம்னி அறியப்பட்டார். மொத்தத்தில், தெரியாத ரோம்னியைவிட தெரிந்த ஒபாமா மேல் என்று அமெரிக்கர்கள் நினைத்திருக்கிறார்கள்.
2008 தேர்தலின்போது அமெரிக்காவிலும் அமெரிக்காவைத் தாண்டி உலகம் முழுவதிலும் வீசிய ஒபாமா ஆதரவு அலையில் ஒரு பகுதிகூட இந்த முறை வீசவில்லை என்பதையும் நாம் கவனிக்கவேண்டியிருக்கிறது. அதற்குக் காரணம் பராக் ஒபாமா என்பதையும் மறுப்பதற்கில்லை. மாற்றம், மாற்றம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த ஒபாமா, ஏமாற்றத்தையே பெருமளவில் தன் வாக்காளர்களுக்கு அளித்திருக்கிறார். முந்தைய ஜார்ஜ் புஷ்ஷின் போர்கள் வேறு வகையில் இன்னமும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன.  சிரியாவும் இரானும் தொடர்ந்து உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டு வருகின்றன.
சென்ற தேர்தலின்போது ஒபாமாவை உணர்ச்சிபூர்வமாக ஆதரித்த ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் இந்த முறை அமைதியாக இருப்பதைப் பார்க்கும்போது அவர்களுடைய எதிர்பார்ப்புகள் தோல்வியடைந்ததைத் தெரிந்துகொள்ளமுடிகிறது. ஒபாமாவை இன்னமும் ஆதரிப்பவர்கள்கூட இந்த உண்மையை ஏற்றுக்கொண்டுள்ளனர் என்பதற்கு இந்தக் கட்டுரை ஓர் உதாரணம். கடந்த தேர்தலில் மிகுந்த ஆரவாரத்துடன் ஒபாமாவை ஆதரித்த அமெரிக்க வாழ் இஸ்லாமியர்கள், ஆசியர்கள், ஹிஸ்பானியர்கள், சிறுபான்மையினர் என்று அனைத்து தரப்பினரும் இந்த முறை அமைதி காக்கின்றனர். இவர்களில் பெரும்பாலனோர் இந்த முறையும் ஒபாமாவுக்கே வாக்களித்திருக்கக்கூடும். திருப்தியுடன் அல்ல, மீண்டுமொருமுறை எதிர்பார்ப்புடன்.
மேற்கு ஆசியாவின் சிக்கல்கள் தீர்க்கப்படவில்லை. பாலஸ்தீனியர்கள்மீதான இஸ்ரேலின் ஆக்கிரமிப்புப் போர் முடிவடையவில்லை. குவந்தனாமோ பே இன்னமும் மூடப்படவில்லை. ‘வெள்ளை மாளிகையில் கறுப்பின அதிபர்’ வந்துவிட்டதால் அந்நிய நாடுகள்மீதான அமெரிக்காவின் மறைமுக மற்றும் நேரடி அத்துமீறல்கள் மாறிவிடவில்லை. பின் லேடன் நேரடியாகக் கொல்லப்பட்டார் என்றால் கடாபி மறைமுகமாக. அமெரிக்காவின் மேலாதிக்க மனோபாவம் மாறிவிடவில்லை.  ஜார்ஜ் புஷ் மாற்றப்பட்டு பராக் ஒபாமா வந்தார் என்பதைத் தாண்டி அமெரிக்கா பெரிய அளவில் எந்தவித மாற்றத்தையும் சந்திக்கவில்லை. அமெரிக்கர்களே உணர்வுபூர்வமாக, அனுபவப்பூர்வமாகக் கண்டுணர்ந்த உண்மை இது. இந்த உண்மையை உணர்ந்த பிறகும் மீண்டும் ஒபாமாவை அவர்கள் வெற்றிபெறச் செய்ததற்கு ஒரே காரணம், அதைத் தவிர வேறு வழி அவர்களுக்குத் தெரியவில்லை என்பதுதான்.
0
மருதன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக