புதன், 3 அக்டோபர், 2012

EVKSஇளங்கோவன்: தமிழர்களை வைத்து அரசியல் நடத்தாதீர்கள்

 தமிழக மக்கள் இன்று 12 மணி நேர மின்வெட்டில் சிக்கி தவித்து
.வருகிறார்கள். ஆனால் இதை பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் வைகோ, சீமான் போன்றவர்கள் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக செயல்படுகிறார்கள்.E.V.K.S. Elangovan
திருச்சி மாநகர் வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உற்பத்தியை விரைவில் தொடங்க வலியுறுத்தியும், அணுமின் நிலையத்தை திறக்க கோரியும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெரோம் ஆரோக்கியராஜ், வடக்கு மாவட்ட தலைவர் ராஜசேகரன், தெற்கு மாவட்ட தலைவர் சுபசோமு, முன்னாள் மேயர் சாருபாலா தொண்டைமான் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.ஆர்ப்பாட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் முன்னாள் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தலைமையில் காங்கிரசார் மின் வளர்ச்சியை தடுக்காதே, தமிழ்நாட்டின் வளர்ச்சியை தடுக்காதே, இருண்ட தமிழகத்தை உருவாக்காதே, கூடங்குளத்தில் மின் உற்பத்தியை உடனே தொடங்கு என்று கோஷங்கள் எழுப்பினர்.

அதனை தொடர்ந்து ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தலைமைதாங்கி பேசியபோது, ’’தமிழ்நாட்டில் மின் பற்றாக்குறை இருக்கக்கூடாது என்று நாங்கள் நினைக்கிறோம். தமிழக மக்களும் நினைக்கிறார்கள். அதனால் தான் கடந்த தி.மு.க. ஆட்சியில் 2 மணி நேரம் மின்வெட்டு இருந்ததால், கடந்த தேர்தலில் மக்கள் அ.தி.மு.க. ஆட்சிக்கு வர ஓட்டு போட்டனர். ஆனால் தற்போது, தி.மு.க. ஆட்சியே பரவாயில்லை என்ற நிலை ஏற்பட்டு உள்ளது.
தற்போது 12 மணி நேரம் மின்வெட்டு அமுலில் உள்ளது. இதனால் திருப்பூர், கோவை, சேலம், ஈரோடு போன்ற மாவட்டங்களில் தொழிற்சாலைகள் மூடப்பட்டு கிடக்கிறது. இதே நிலை நீடித்தால் திருச்சியில் பெல் தொழிற்சாலையும் மூடும் அபாயம் ஏற்படும்.
ஒரு ஆட்சி புதிதாக வந்தால், புதிதாக தொழிற்சாலைகள் தொடங்குவது தான் சாதனையாக இருக்க முடியும். மக்களுக்கு சேவை செய்ய முடிவு செய்தால், முதலமைச்சர் ஜெயலலிதா கூடங்குளம் அணு மின்நிலையத்தில் மின் உற்பத்தி தொடங்க நடவடிக்கை எடுக்க முன் வர வேண்டும். முதலமைச்சர் ஜெயலலிதா நினைத்தால் போராட்டக்காரர்களை 12 மணி நேரத்தில் வாபஸ் பெற வைத்து, மின் உற்பத்தியை தொடங்க நடவடிக்கை எடுக்கலாம்.

மறைந்த காந்தி, நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி மற்றும் தமிழகத்தில் காமராஜர், பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். ஆகியோர் மக்களுக்கு தியாகம் செய்ததாலும் தொண்டு செய்ததாலும் இன்றும் போற்றப்பட்டு வருகிறார்கள்.
அதேபோன்று முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு என்றென்றும் நல்ல பெயர் நிலைத்திருக்க வேண்டும் என்றால் இடிந்தகரை போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்து, மின் உற்பத்தியை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அணுமின் உற்பத்தியால், எந்த பாதிப்பும் இல்லை. பிரான்சு நாட்டில் 85 சதவீதம் மின்சாரம் அணுமின் உற்பத்தியால் பயன்படுத்தப்படுகிறது.
ஜப்பான் நாட்டில் அணுமின் உற்பத்தி காலாவாதி ஆகி விட்டதால்தான் அதனை மூடிவிட்டனர். எந்த பொருளுக்கும் காலாவதி காலம் உண்டு. அதேபோன்று பிரச்சினை இல்லாத வாழ்க்கையோ, சிக்கல்களோ இல்லை இவற்றை எல்லாம் சமாளித்து வாழ்வதுதான் வாழ்க்கை. தமிழக மக்கள் இன்று 12 மணி நேர மின்வெட்டில் சிக்கி தவித்து வருகிறார்கள். ஆனால் இதை பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் வைகோ, சீமான் போன்றவர்கள் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக செயல்படுகிறார்கள்.
உதயகுமாரோடு குழியில் இறங்கி போராடுகிறார்கள். அவர்களுக்கு ஒன்றை கூறி கொள்கிறேன். தமிழை வைத்து வாழுங்கள், இலங்கை தமிழர்களை வைத்து வேண்டுமானால் அரசில் நடத்துங்கள், ஆனால் நம் தமிழர்களை வைத்து அரசியல் நடத்தாதீர்கள். 3 ஆயிரம் மெகாவாட் மின் பற்றாக்குறையை போக்க கூடங்குளம் அணுமின் உற்பத்தியை தொடங்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’’என்று தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக