புதன், 17 அக்டோபர், 2012

குண்டர் சட்டத்தை தவறாக பயன்படுத்திய கலெக்டர், இன்ஸ்பெக்டருக்கு அபராதம்

மதுரை: வலுவான காரணம் இல்லாமல் குண்டர் சட்ட உத்தரவு பிறப்பித்த விருதுநகர் கலெக்டர், பரிந்துரைத்த நகர் இன்ஸ்பெக்டருக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். விருதுநகரை சேர்ந்தவர் கே.சுப்பிரமணி(32). இவர் மீது மணல் கொள்ளை வழக்கு உள்ளது. இவர், குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். குண்டர் சட்ட உத்தரவை ரத்து செய்யக்கோரி, சுப்பிரமணியன் தந்தை கந்தசாமி, ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்தார்.

மனுவை நீதிபதிகள் கே.சுகுணா, ஆர்.மாலா ஆகியோர் விசாரித்தனர். நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் நபரை, கோர்ட் விசாரணையை சந்திக்காமலேயே ஓரு ஆண்டுக்கு சிறையில் அடைக்கலாம். தொடர்ந்து குற்றங்களில் ஈடுபடும் நபர்கள், அது போன்ற குற்றங்களில் ஈடுபடக்கூடாது. திருந்தி நல்லவராக வாழ வேண்டும் என்ற நோக்கத்தில் குண்டர் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஒருவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிடும் போது, அதற்கான காரணங்களை கவனமாக கையாள வேண்டும்.


மனதை செலுத்தாமல் உத்தரவில் அதிகாரிகள் கையெழுத்திடக்கூடாது. இதனால் குண்டர் சட்டத்தின் உண்மையான நோக்கம் அடிபடுவதுடன், அந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் நபரின் தனிமனித சுதந்திரமும் பாதிக்கப்படுகிறது. குண்டர் சட்டத்தை அமல்படுத்தும் போது பல்வேறு கட்டுப்பாடுகளை கோர்ட்கள் விதித்துள்ளன. அதை அதிகாரிகள் கடைபிடிக்காமல், இயந்திரத்தனமாக செயல்பட்டு உத்தரவுகளை பிறப்பிக்கின்றனர். இந்த வழக்கில் குண்டர் சட்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்ட காலத்தில் மனுதாரரின் மகன் சிறையில் இருந்துள்ளார். அவர் மே 19ல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு காவல் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளார்.

ஆனால், ஜூன் 1ம் தேதி நீதிமன்ற காவல் நீட்டிப்பு பெற்றதாக குண்டர் சட்ட உத்தரவில் கூறப்பட்டுள்ளது. அதற்கான ஆதாரங்களை தாக்கல் செய்யவில்லை. இவற்றை பார்க்காமலேயே விருதுநகர் கலெக்டர் ஹரிகரன் குண்டர் சட்ட உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். அவரது உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இதுபோன்று இயந்திரத்தனமாக செயல்பட்டு குண்டர் சட்டத்தில் கைது செய்வதை தடுக்க விருதுநகர் கலெக்டருக்கும், மனுதாரர் மகனை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க பரிந்துரைத்த இன்ஸ்பெக்டருக்கும் தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. பணத்தை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட சுப்பிரமணிக்கு வழங்க வேண்டும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக