புதன், 17 அக்டோபர், 2012

மகாராஷ்டிராவில் BJP கத்காரிக்கு 100 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு: கெஜ்ரிவால் புகார்!

 Arvind Kejriwal Set Another Revelation Today டெல்லி: மகராஷ்டிரா மாநிலத்தில் பாஜக தலைவர் நிதின் கத்காரிக்கு விதிகளுக்கு முறைகேடாக 100 ஏக்கர் நிலத்தை மகாராஷ்டிர ஆளும் காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் அரசு வழங்கியிருப்பதாக அதிரடிப் புகாரை சமூக ஆர்வலர் அர்விந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இந்தப் புகார் மூலம் பாஜக, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மூன்று கட்சிகளையும் ஒரு சேர ஊழல் கட்சிகளாக கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.
ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபார்ட் வத்ரா, அமைச்சர் சல்மான் குர்ஷித் ஆகியோரது தலைகளை உருட்டிய அர்விந்த் கெஜ்ரிவால் குழுவினர் இன்று பாஜக தலைவர் கத்காரிக்கு தொடர்புடைய ஊழல் ஆதாரங்களை வெளியிட்டது. அதன் விவரம்,
குற்றச்சாட்டு 1:
மகாராஷ்டிரா மாநிலத்தின் நீர்ப்பாசனத் திட்ட முறைகேடுகளில் கத்காரிக்கும் தொடர்பிருக்கிறது.
குற்றச்சாட்டு 2:

கத்காரியின் தொழிற்சாலைகளுக்காக மகராஷ்டிரா அரசு முறைகேடாக 100 ஏக்கர் நிலத்தை ஒதுக்கியிருக்கிறது.
குற்றச்சாட்டு 3:
நாக்பூரில் அணை கட்டுவதாகக் கூறி விவசாயிகளின் நிலத்தை அபகரித்திருக்கிறார் கத்காரி
குற்றச்சாட்டு 4:
கத்காரியின் தொழிற்சாலைகளுக்காக பலவந்தமாக விவசாயிகளின் நிலங்கள் பறிக்கப்பட்டன. மேலும் விவசாய பாசனத்துக்காக நீரை கத்காரியின் தொழிற்சாலைகள் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டது
மகாராஷ்டிர அரசுடன் கூட்டு
இவைதான் கத்காரி மீது பாஜக முன்வைத்திருக்கும் குற்றச்சாட்டுகளாகும். அதாவது மகாராஷ்டிராவில் ஆளும் காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசுக்கும் பாஜக தலைவர் கத்காரிக்கும் இடையேயான தொடர்பை தாம் அம்பலப்படுத்தியிருக்கிறோம் என்கிறார் கெஜ்ரிவால்.
கத்காரி வியூகம்
தம் மீது கெஜ்ரிவால் இன்று புகார்ப் பட்டியலை வாசிக்கப் போகிறார் என்று தெரிந்தது முதலே அதனை தாம் எப்படியும் எதிர்கொள்வேன் எனக் கூறிவந்தார் கத்காரி. கெஜ்ரிவால் புகார் கூறி செய்தியாளர்கள் சந்திப்பை நடத்திக் கொண்டிருந்த நேரத்தில் கத்காரியில் இல்லத்தில் பாஜக தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்டோர் தீவிர ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக தம்மீதான புகார் தொடர்பாக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியையும் கூட கத்காரி சந்திக்கக் கூடும் என்று கூறப்பட்டு வந்தது.
பாஜக மறுப்பு:
இதனிடையே பாஜக தலைவர் நிதின் கத்காரி மீது அர்விந்த் கெர்ஜிவால் குழுவினர் புகார் தெரிவித்த சிறிது நேரத்தில் கத்காரி, சுஷ்மா ஸ்வராஜ், அருண்ஜேட்லி ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தனர்.
பாஜக தலைவர் நிதின் கத்காரி கூறுகையில், கெஜ்ரிவால் கூறுகிற நீர்ப்பாசன திட்ட முறைகேட்டை முதன் முதலில் அம்பலப்படுத்தியதே பாஜகதான். எங்களுக்கு ஆதரவாக தேசியவாத காங்கிரஸ் செயல்படுவதாக கூறுவது காங்கிரஸ் கிளப்பிவிட்டிருக்கும் கட்டுக்கதை. என்மீதான எந்த ஒருவிசாரணைக்கும் நான் தயாராகவே இருக்கிறேன் என்றார்.
எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் கூறுகையில், அனைத்து கட்சிகளையும் குறிவைத்து கெஜ்ரிவால் குற்றம்சாட்டி வருவது என்பது தேர்தல் பிரச்சாரத்தைப் போல இருக்கிறது. காங்கிரஸ் தலைவர்கள் மீது அடுக்கிய புகர்களைப் பார்த்தால் கத்காரி மீதான புகார்கள் அப்படி ஒன்றுமில்லை என்றுதான் சொல்ல வேண்டும். கத்காரிக்கு ஒதுக்கப்பட்ட நிலம் எதுவும் விளை நிலம் அல்ல. பயனற்ற நிலங்களே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன என்றார்.
மற்றொரு பாஜக மூத்த தலைவர் அருண் ஜேட்லி கூறுகையில், கத்காரிக்கு ஒதுக்கப்பட்ட நிலம் என்பது குத்தகைக்குத்தான்.. அதுவும் விவசாயிகளின் நன்மைக்குத்தான் என்றார் அவர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக