புதன், 3 அக்டோபர், 2012

தமிழக சாயப்பட்டறைகளின் கைங்கர்யம் காவிரி தண்ணீரில் சாயக்கழிவு

ஈரோடு : கஷ்டப்பட்டு வாங்கியுள்ள காவிரி தண்ணீரை, சாயப்பட்டறைகள் மாசுபடுத்துவதை, இரு மாவட்ட மாசுக் கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள், வேடிக்கை பார்த்து வருகின்றனர்.
தமிழகத்தின் நெற்களஞ்சியமான, தஞ்சை டெல்டா பாசனப் பகுதிக்கு, தண்ணீர் வழங்கும் தாயாக, காவிரி ஆறு உள்ளது. பயிர் உற்பத்திக்கு மட்டுமின்றி, கூட்டுக் குடி நீர் திட்டம் மற்றும் மின் உற்பத்திக்கும், காவிரி ஆறு உதவுகிறது.காவிரியில், ஜூன் 12ம் தேதி, டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும். நடப்பாண்டு மழையில்லாததால், குறுவை பாசனத்துக்கு தண்ணீர் திறக்கவில்லை. குடி நீர் வழங்கும் நோக்கில், நாள்தோறும், 1,000 கன அடி தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டது.


குறுவைப் பாசனத்துக்கு, தண்ணீர் வழங்க கர்நாடகம் மறுத்ததை அடுத்து, சம்பா பாசனத்துக்காவது தண்ணீர் திறக்க வேண்டும் என, பிரதமர் தலைமையிலான நடுவர் மன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும், தமிழக அரசு போராடியது. இதன் தொடர்ச்சியாக, 9,000 கன அடி தண்ணீரை, கர்நாடகா அரசு திறந்துள்ளது.காவிரியில் தண்ணீர் பெற, கடுமையான போராட்டம் ஒரு புறம் நடந்து கொண்டிருக்க, எதையுமே கண்டுகொள்ளாமல், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் இயங்கும் சாயப்பட்டறை, பிளீச்சிங் பட்டறை மற்றும் தோல் தொழிற்சாலைகள், கழிவு நீரை சுத்திகரிக்காமல், நேரடியாக காவிரி ஆற்றில் கலக்கின்றன.

அத்துடன், சாயமேற்றிய துணிகளை, பரிசல் மூலம் ஆற்றுக்குள் கொண்டு சென்று அலசுகின்றனர். இதனால், காவிரி தண்ணீரில், உப்பின் அளவு கடுமையாக உயர்ந்துள்ளது.ஆற்றை ஒட்டிய ஆழ்குழாய் கிணறுகளில், தண்ணீர், பல நிறங்களில் வருவதாக, மக்கள் புகார் தெரிவித்தும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.ஈரோடு - பள்ளிப்பாளையம் இடையே, காவிரி பாலத்தில் செல்லும் போது, கழிவு நீர் கலப்பது, கண்கூடாக தெரிகிறது. இந்நிலையில், ஈரோடு, நாமக்கல் மாவட்ட மாசுக் கட்டுப்பாடு அதிகாரிகள், கண்டும் காணாமல் இருப்பதற்கான காரணம் புரியாமல் உள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக