புதன், 3 அக்டோபர், 2012

காந்தி ஜெயந்தியில் சரக்கு விற்பனை அமோகமாக,,,

காந்தி ஜெயந்தி நாளான நேற்று, கடலூர் மாவட்டத்தில் பல பகுதிகளில் டாஸ்மாக் கடைகளில், "சரக்கு' விற்பனை அமோகமாக நடைபெற்றது.
"அகிம்சா' வழியில் போராடி சுதந்திரம் பெற்றுத் தந்த, தேசத் தந்தை காந்தியை கவுரவிக்கும் பொருட்டு, அவரது மதுவிலக்கு கொள்கையை அரசு, அவரது பிறந்த நாளான அக்., 2ம் தேதி அமல்படுத்தி வருகிறது.காந்தி ஜெயந்தியை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள், பார்கள் மற்றும் தனியார் மதுபான கூடங்களை மூட அரசு உத்தரவிட்டிருந்தது. ஆனால், கடலூர் மாவட்டத்தில், பல டாஸ்மாக் கடைகளில் நேற்று, "சரக்கு' விற்பனை ஜோராக நடந்தது. பெரும்பாலான விற்பனையாளர்கள், முன்னேற்பாடாக, நேற்று முன்தினம் இரவே, "சரக்குகளை" அருகில் உள்ள பார், கடைகள் மற்றும் வீடுகளில் வைத்து, கூடுதல் விலைக்கு விற்பனை செய்தனர்.


சில விற்பனையாளர்கள், அதிகாரிகள் வருகையை கண்காணிக்க சிலரை நியமித்து விட்டு, கடையை வெளிப்புறமாக பூட்டி விட்டு, உள்ளே இருந்து, "சரக்கு'களை எடுத்துத் தர, அதை வெளியே இருந்து ஒருவர் வாங்கி, "குடிமகன்'களுக்கு விற்பனை செய்தார்.விருத்தாசலம் அடுத்த கோ.பென்னேரி கிராமத்தில் உள்ள டாஸ்மாக் பாரில், மதுபாட்டில் விற்கப்பட்டது. விருத்தாசலம் பஸ் நிலையத்தில் உள்ள டாஸ்மாக் கடை வாசலில், நீண்ட நேரமாக லாரியை நிறுத்தி, காலிபாட்டில் ஏற்றும்போது, இடையிடையே சரக்கு விற்பனையும் நடந்து கொண்டிருந்தது.

இது தொடர்பாக, அரசு வெளியிட்டுள்ள, இலவச தொலைபேசி எண், 18004 252015ல் தொடர்பு கொண்டு கேட்டபோது, மாடசாமி என்பவர் கூறுகையில், "இது குறித்து நீங்கள், மாவட்ட மேலாளரை தொடர்பு கொண்டு தெரிவியுங்கள்' எனக் கூறி, இணைப்பை துண்டித்து விட்டார்.காந்தி ஜெயந்தி தினமான நேற்று, மாவட்டம் முழுவதும், போலீசார், தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். டாஸ்மாக் கடை, பார் மற்றும் வீடுகளில் வைத்து மது விற்பனை செய்ததாக, நேற்று, பிற்பகல், 2:00 மணி வரை, 11 வழக்குகள் பதிவு செய்து, ஒரு மூதாட்டி உள்ளிட்ட, 10 பேரை கைது செய்தனர். இவர்களிடமிருந்து, 175, "குவார்ட்டர்' பிராந்தி பாட்டில்களும், 12 லிட்டர் சாராயத்தையும் கைப்பற்றினர்.

- நமது நிருபர் -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக