செவ்வாய், 23 அக்டோபர், 2012

அரவிந்த் கேஜ்ரிவால் மேடையில் பரபரப்பாக நடிக்கும் ஒரு நடிகன்

அரவிந்த் கேஜ்ரிவால்
காங்கிரஸ்காரர்கள் ‘பொறுமைக்குப்’ பெயர் போனவர்கள். எதையும் நின்று நிதானித்து, ஆழமாய் ரசித்துச் செய்து முடிப்பதில் கில்லாடிகள் என்கிற புகழ் அவர்களுக்கு உண்டு. ஒட்டுமொத்த இந்தியாவையும் ஓட்டாண்டியாக்க வேண்டுமென்கிற ஒற்றை லட்சியத்துக்காக நூற்றாண்டுகளையும் கடந்து கொஞ்சம் கொஞ்சமாய் காய் நகர்த்தும் சாமர்த்தியம் அவர்களுக்குண்டு. சட்டென்று பாய்ந்து குரல்வளையைக் கடித்துக் குதறி ரத்தம் உறிஞ்சும் பாரதிய ஜனதாவின் வழிமுறையும் காங்கிரசின் வழிமுறையும் வேறு வேறானது. முந்தையது ரத்தக்காட்டேறி என்றால் இது ராட்சச அட்டைப்பூச்சி. வலியை உணரக் காலமாகும்.

நிற்க.
இப்படியாப்பட்ட பெருமைக்கும் புகழுக்கும் சமீபமாய் பெரும் ஆபத்து வந்துள்ளது. எந்த முன்னறிவிப்பும் இன்றி டீசல் விலையை உயர்த்தியது, சிலிண்டர்களுக்குக் கட்டுப்பாடு விதித்தது, ஓய்வூதியத்தை சூதாட்டத்தில் இறக்கி விட்டது, வால்மார்ட்டை நுழையவிட்டது, இன்சுரன்ஸ் துறை மற்றும் ஊடகத் துறையில் அந்நிய முதலீட்டை அதிகரித்தது விமான சேவையில் அந்நிய முதலீட்டை அனுமதித்தது மற்றும் இறுதியாக முக்கியமான மூன்று பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்க முடிவு செய்தது என்று தேசத்தின் மேல் அதிரடித் தாக்குதல்களை காங்கிரஸ் கூட்டணி அரசு தொடுத்துள்ளது. இது மக்கள் மேல் தொடுக்கப்பட்ட ஒரு உள்நாட்டுப் போர்.
தலையே கூத்தாடும் போது வால் துடிக்கவாவது வேண்டுமல்லவா? தில்லி நடுத்தர வர்க்கத்தினரிடையே ஆக்ஸ்போர்டில் படித்தவர், பண்பானவர் என்றெல்லாம் பெயரெடுத்த சல்மான் குர்ஷித் நாலாந்தர ரவுடியைப் போல ‘எங்க ஏரியாவுக்கு வாடா மவனே முழுசா திரும்பிப் போய்டுவியான்னு பாக்கறேன்’ என்பது போல மிரட்டல் விடுத்துள்ளார். யாருக்கு இந்த மிரட்டல்? அர்விந்த் கேஜ்ரிவால் தான் மிரட்டப்பட்டவர். ஆம், வினவு வாசகர்களுக்கு நன்றாக அறிமுகமான ‘ அண்ணா ஆதரிக்கிறாரு ஆனா ஆதரிக்கலை’ புகழ் கேஜ்ரிவால் தான்.
கேஜ்ரிவால் தனக்கென்று சொந்தமாக ஒரு புத்தம் புதிய அரசியல் கம்பெனி துவங்கி கோதாவில் குதித்திருப்பது வாசகர்கள் அறிந்ததே. புதுப் படமல்லவா, எனவே புரமோஷன் வேலைகள் படு ஜரூராக நடந்து வருகிறது. நாளொரு ஊழல் குற்றச்சாட்டும் பொழுதொரு முறைகேட்டுப் புகாருமாக அம்பலப்படுத்தி டி.ஆர்.பி ரேட்டிங் பெற கடுமையாகப் போராடி வருகிறார். அந்த வகையில் பல்வேறு அரசியல் கட்சிப் பிரமுகர்களின் யோக்கியதைகள் தொடர்ச்சியாக வெளியாகி இந்திய ஓட்டுக்கட்சி ‘ஜனநாயகம்’  ஒளிவீசிப் பிரகாசித்து வருகிறது.
சமீபமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘ஊழல் எதிர்ப்பு’ ரியாலிட்டி ஷோவின் எத்தனாவதோ சீசனில் முதலில் மாட்டியவர் ராபர்ட் வதேரா. ஐம்பது லட்சத்தில் ‘தொழிலைத்’ துவங்கிய நாட்டின் முதல் மறுமகனார் ராபர்ட் வதேரா, சூரியவம்சம் லாலாலா பாட்டு முடியும் இடைவெளிக்குள் முன்னூறு கோடியாக அதை வளர்த்தெடுத்ததன் பின்னே இருக்கும் இரகசியங்களை கேஜ்ரிவால் சந்திக்கு இழுத்து வந்தார். இதில் டி.எல்.எஃப் என்கிற கட்டுமான மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவனம் ராபர்ட் வதேராவுக்கு சும்மா கைமாத்தாக பல கோடி ரூபாய்களைக் கொடுத்ததும், அதைத் தொடர்ந்து தில்லியைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் அரியானாவிலும் அந்நிறுவனம் அடிமாட்டு விலைக்கு நிலங்களை வளைத்துப் போட்டதும் அம்பலமானது.
அதைத் தொடர்ந்து ராபர்ட் வதேரா நேரடியாகவே அடிமாட்டு விலைக்கு நிலங்களை வளைத்துப் போட்டிருப்பதும், பல்வேறு வகையான அசையாத சொத்துக்களை வாங்கிப் போட்டிருப்பதும், இதற்கு அரசு இயந்திரமே முன்னின்று உதவியிருப்பதும் ஒவ்வொன்றாக வெளியாகி காந்தி குடும்பத்தின் மானம் கந்தல் கந்தலானது. நாட்டின் முதல் குடும்பத்தின் முதல் மறுமகனாரையே சந்திக்கு இழுத்திருப்பதால் யாவாரம் சூடு பிடிக்கும் என்று கேஜ்ரிவால் எதிர்பார்த்திருப்பார். ஆனால், அவர் நினைத்த அளவிற்கு  செல்ப் எடுக்கவில்லை. தில்லி ஜந்தர் மந்தரில் வழமையாக கூடும் ஊழல்  எதிர்ப்பு கட்சியினரின் கூட்டங்களுக்கு எப்போதும் வரும் அதே இருநூற்றி பதினேழரை பேர்கள் தான் வந்திருந்தனர்.
திரைக்கதையில் நான்கைந்து சண்டைக்காட்சிகள் சேர்த்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தார்களோ என்னவோ, ராபர்ட் வதேராவைத் தொடர்ந்து சல்மான் குர்ஷித் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் நிதின் கட்காரி ஆகியோரும் மேடைக்கு வந்துள்ளார்கள்.
சல்மான் குர்ஷித் மற்றும் அவரது மனைவி நடத்தும் மாற்றுத் திறனாளிகளுக்கான என்.ஜி.ஓ அமைப்பு, சுமார் 71 லட்சம் அளவிற்கு மோசடியில் ஈடுபட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. ஜாகீர் ஹுசேன் நினைவு அறக்கட்டளை எனும் பெயரில் மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித்தும் அவரது மனைவி லூசி பெர்னான்டஸும் இணைந்து நடத்தி வரும் என்.ஜி.ஓ அமைப்பு, ஊனமுற்றோருக்கு கருவிகள் வாங்கியதில் போர்ஜரி உள்ளிட்ட மோசடிகளில் ஈடுபட்டு கொள்ளையடித்திருப்பதாக வட இந்தியாவைச் சேர்ந்த ஊடகங்களில் பரபரப்பாக செய்திகள் வெளியாகத் தொடங்கியது.
இதையடுத்து, சல்மான் குர்ஷித் மேல் நடவடிக்கை எடுக்க கோரி பிரதமரின் இல்லத்தை மாற்றுத்திறனாளிகளோடு முற்றுகையிட்டுப் போராடப் போவதாக அரவிந்த் கேஜ்ரிவால் அறிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து தனது தொகுதியான பரூகாபாத்தில் பேசிய போது தான் சல்மான் குர்ஷித், அரவிந்த் கேஜ்வாலுக்கு மிரட்டல் விடுத்திருந்தார்.
நிதின் கட்காரியைப் பொருத்தளவில் ஆர்.எஸ்.எஸின் அரசியல் கம்பேனிக்கு மேனேஜர் வேலை பார்ப்பதோடு சொந்தமாக பூர்த்தி சின்ச்சன் கல்யான்காரி சன்ஸ்தா என்கிற தொண்டு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்திற்கு பெயர் பலகை அமைப்புகள் பலவற்றிடம் இருந்து எந்த முகாந்திரமும் இல்லாமல் கோடிக்கணக்கான முதலீடுகள் வந்து குவிந்துள்ளன.
1995-ம் ஆண்டிலிருந்து 1999-ம் ஆண்டுவரை மகாராஷ்டிராவை ஆட்சி செய்த சிவசேனா – பரதிய ஜனதா கூட்டணி ஆட்சியில் பொதுப்பணித் துறை அமைச்சராக பொறுப்பு வகித்த நிதின் கட்காரி, ஐடியல் ரோடு பில்டர் எனும் கம்பெனிக்கு பல்வேறு கட்டுமானக் காண்டிராக்டுகளை வாரி வழங்கியுள்ளார். 1996-ல் 46 கோடி ரூபாயாக இருந்த இந்நிறுவனத்தின் வருமானம் 1999-ம் ஆண்டு வாக்கில் 67 கோடிகளாக உயர்ந்துள்ளது. இந்நிலையில் ஐடியல் நிறுவனம் தனது இன்னொரு துணை நிறுவனமான குளோபல் சேப்டி விஷன் வழியாக நிதின் கட்காரின் பூர்த்தி நிறுவனத்திற்கு எந்த அடிப்படையும் இல்லாமல் ‘கடனாக’ 165 கோடி ரூபாய்களை வழங்கியுள்ளது. மேலும் பல நூறு ஏக்கர் விவசாய நிலங்களையும் நிதின் கட்காரி மகாராஷ்டிர அரசின் துணையோடு ஆக்கிரமித்திருப்பதும் அம்பலமானது.
இப்படியாக கேஜ்ரிவால் தன்னைச் சுற்றி 360 டிகிரியிலும் கற்களை சராமாரியாக எரிந்து வருவது தேசிய ஊடகங்களில் பரபரப்பான செய்திகளாக இடம் பெற்று வருகின்றது.
இதில் பாரதிய ஜனதாவின் நிலை தான் உண்மையிலேயே நகைச்சுவையாய் இருக்கிறது. காங்கிரசு சேற்றில் சிக்கித் தவிக்கிறதே என்று இவர்களால் குதூகலிக்கவும் முடியாதபடிக்கு மலக்குட்டைக்குள் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஊழல் எதிர்ப்பு ரியாலிட்டி ஷோவிலிருந்து கெமிஸ்ட்ரி ஒர்கவுட் ஆகவில்லை என்பதால் வெளியேற்றப்பட்டுள்ள பாரதிய ஜனதா, வைல்ட் கார்ட் ரவுண்டிலாவது இடம் கிடைக்க வேண்டுமே என்று தவியாய்த் தவிக்கிறது. நடக்கும் நாடகத்தில் எந்தக் கதாபாத்திரத்தின் வாலைப் பிடித்துக் கொண்டு தொங்கலாம் என்கிற முடிவை வழக்கம் போல் இன்னும் வலது இடது போலி கம்யூனிஸ்டுகள் எடுத்து முடிக்கவில்லை. எடுத்து விட்டாலும் அது அவரகளின் பாரம்பரிய வழக்கத்தின்படி மொக்கையாய்த் தான் இருக்குமென்பதால் அதைப் பற்றி மக்களே கவலைப்பட மாட்டார்கள். போகட்டும்.
அரவிந்த் கேஜ்ரிவாலின் ஊழல் எதிர்ப்பு இயக்கம் ஒரு குறிப்பான பிரச்சினைக்காக போராடும் இயக்கம் என்பதைக் கடந்து பொதுவான அரசியல் கட்சி என்கிற அவதாரத்தை எடுத்துள்ளது. இவர்கள் ஊழல் எதிர்ப்பு மற்றும் அதற்கான தீர்வாக ஜன்லோக்பால் மசோதா என்பவற்றை முன்வைத்து இயங்கிய போதே பிரச்சினைகளைப் பற்றி கொண்டிருந்த கண்ணோட்டம் அபாயகரமானது. ஊழல் ஒழிப்பு என்பதைப் பற்றிப் பேசும் போதே அதற்கான அடிப்படைகளையும் அதன் ஊற்றுமூலம் என்னவென்பதையும் பற்றி பேசாமல் தவிர்த்தே வந்தனர்.
அதன் காரணமாகவே  இந்த நாட்டின் மிகப் பெரிய கிரிமினல் கும்பலான ரிலையன்ஸ் குழுமத்திடமிருந்தும் கூட உதவிகளைப் பெற்றுக் கொண்டனர். அலைக்கற்றை ஊழலில் தின்று வீங்கிய செல்பேசி நிறுவனங்கள் முன்வந்து வழங்கிய உதவிகளை எந்தக் கூச்சமும் இல்லாமல் பெற்றுக் கொண்டே ஊழலை எதிர்த்து முழக்கமிடத் தயங்கவில்லை.
பன்னாட்டு மூலதனத்தின் முன்னும், உள்நாட்டுத் தரகு முதலாளிகளிடமும், மேல்நிலை ஏகாதிபத்தியங்களின் பாதார விந்தங்களிலும் இந்தியப் பொருளாதாரமே அடகு வைக்கப்பட்டு விட்ட நிலையில், அவர்களின் லாப வேட்டைக்கும் பகாசுர கொள்ளைக்கும் தேசத்தின் எல்லைகள் அகலமாகத் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த அடிப்படையிலிருந்தே இந்நாட்டின் வளங்களை வேண்டிய மட்டிலும் கூடிய விரைவில் உறிஞ்சித் தீர்த்து விட இவர்கள் வெறி கொண்ட முறையில் முயற்சிப்பதிலிருந்து தான் சட்டங்கள் நடைமுறைகள் விதிமுறைகள் மரபுகள் என்று சகலமும் கழிவறைத் தொட்டிக்குள் வீசியெறியப்படுகிறது. ஊழல் துவங்குகிறது.
அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் வெட்டியெடுத்ததாக சொல்லப்படும் கிரானைட் ஊழலைப் பற்றிப் பேசும் போது பி.ஆர்.பிக்கு எந்த வரைமுறையும் இன்றி மலைகளைப் பட்டா போட்டுக் கொடுக்க வகை செய்த அரசின் தனியார்மயக் கொள்கைகளில் இருந்து தான் துவங்க வேண்டும். அனைத்து மக்களுக்குச் சொந்தமான இயற்கையான வளம் ஒன்றை பி.ஆர்.பி என்கிற தனி நபருக்குச் சொந்தமாக்க வேண்டும் என்பதில் இருந்து தான் ஊழல் துவங்குகிறது. இதில் அனுமதிக்கப்பட்ட அளவு என்பதெல்லாம் வெறும் கேலிக்கூத்து – குரல்வளையை ஒரு இஞ்சு ஆழத்துக்கு அறுக்க அனுமதி; அதற்கு மேல் அனுமதியில்லை என்பதைப் போன்ற வாதம் தான் அது.
கேஜ்ரிவால் ஊழல் பற்றி பேசுகிறார். ஊழல் செய்தவர்களை அம்பலப்படுத்தி பேசுகிறார். சவால் விடுத்துப் பேசுகிறார். ஆனால் இதற்குக் யாரெல்லாம் – எதெல்லாம் காரணமோ அவற்றை பற்றி மட்டும் பேசாமல் தவிர்க்கிறார். ஊழல் ஒழிப்புக்கான வருத்தமில்லா வாலிபர் சங்கமாக இருந்து அதன் அடித்தளத்தின் மேல் இப்போது அவதரித்திருக்கும் கட்சியின் நிலைப்பாடும் இப்படித்தான் இருக்கும் என்பது ஆபத்துக்குரியது.
இன்றைய நிலையில் ஆளும் கும்பல் தேசத்தின் மக்களின் மேல் ஒரு உள்நாட்டுப் போரைத் திணித்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை உயராத நிலையிலும் எந்தக் காரணமும் இன்றி டீசல் விலை உயர்த்தப்பட்டதால் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் விண்ணை முட்டுமளவிற்கு அதிகரித்துள்ளது. மின் உற்பத்தியும் வினியோகமும் தனியார் நிறுனங்களுக்குத் தாரை வார்க்கப்பட்டு விட்டதால் மின்சார கட்டணம் முன்னெப்போதும் இல்லாத வகையில் உயர்ந்துள்ளது. தண்ணீர் வினியோகமும் கொஞ்சம் கொஞ்சமாக தனியார்களுக்குத் திறந்து விடப்பட்டு விட்டது.
“நான் கஷ்டப்பட்டு சம்பாதிச்சேன். இப்ப ஜாலியா இருக்கேன். நான் ஏன் போராடனும்” என்று கிண்டலாக கேட்கும் தடித்தோல் கனவான்களுக்கும் ஆப்பு வந்துள்ளது மன்மோகன் மாண்டேக் சிதம்பரம் கும்பலால். உழைப்பால் உயர்ந்த விக்கிரமன் பட ஹீரோக்களின் ஓய்வூதியத்தையும் சேமிப்பையும் காப்பீட்டையும் சூதாட்டத்தில் இறக்கி விட அரசு தயாராகி வருகிறது. இன்று கிரீஸிலும் ஐரோப்பாவின் பிற நாடுகளிலும் நடப்பது நாளை இங்கும் நடக்கும். இதெல்லாம் தாராளமய பொருளாதார சீர்திருத்தத்தின் பல்வேறு கட்டங்களாய் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இன்சுரன்ஸ் துறையில் அந்நிய முதலீடு, ஓய்வூதியத்தை தனியாருக்கும் அந்நியருக்கும் திறந்து விடுவது, பச்சை வேட்டை, வேதாந்தாவின் சுரண்டல், 2ஜி அலைக்கற்றை ஊழல், நிலக்கரி ஊழல், ஆதர்ஷ் வீட்டு மனை ஊழல், பி.ஆர்.பியின் மலைத்திருட்டு, பா. சிதம்பரத்தின் கள்ளச் சிரிப்பு, மன்மோகனின் கள்ள மௌனம், நிதின் கட்கரியின் நில மோசடி, ராபர்ட் வதேராவின் நில மோசடி, ராகுல் காந்தியின் ஃபிராடுத்தனம், நரேந்திர மோடியின் இதழோரம் வழியும் இரத்தம், விலைவாசி உயர்வு, மின் தட்டுப்பாடு – இவையனைத்தும் வேறு வேறு அல்ல. தேசத்தின் இறையாண்மையை ஒட்டுமொத்தமாக அடகுவைத்து நாட்டை மீண்டும் காலனியாக்கும் ஒரு  மாபெரும் நிகழ்ச்சி நிரலின் சின்னச் சின்ன பகுதிகளாக செயல்படுத்தப்படும் திட்டங்களின் வெளிப்பாடுகள் தான் இவை.
ஆக, இவையணைத்துக்கும் மையமான பிரச்சினையாக விளங்கும் காரணத்தைப் பற்றிப் பேசாமல் தவிர்ப்பதென்பது அதற்குச் சேவை செய்வதில் தான் முடியும். அந்த வகையில் தான் ஊழிலின் அடிப்படையை பற்றிப் பேசாமல் தவிர்க்கும் அரவிந்த் கேஜ்ரிவால் அதே மௌனத்தை மின்வெட்டு, விலைவாசி உயர்வு, தனியார்மயமாக்கம், பன்னாட்டு மூலதனத்தின் சுரண்டல் போன்றவைகளையும் பேசாமல் அமைதி காக்கிறார்.
போராடும் மக்களை திசை திருப்புவதற்காக ஏகாதிபத்தியங்களால் வளர்த்தெடுக்கப்பட்ட என்.ஜி.வோ பாணியிலான அரசியல் இயக்கம்தான் அரவிந்த கேஜ்ரிவால் மற்றும் அண்ணா ஹசாரேவுடையது. பரபரப்பான முழக்கங்கள், கிளர்ச்சிகள், வாய்ச் சவடால்கள் என்று வடிவத்தில் புரட்சியையும், உள்ளடக்கத்தில் ஆளும் வர்க்க சேவையும்தான் இத்தகைய தன்னார்வக்குழுக்கள் கொண்டிருக்கின்றன.
மாறி மாறி வரும் ஓட்டுக்கட்சிகளின் அரசாங்கங்களின் ஆட்சியின் கீழ் தொடர்ந்து தாம் வஞ்சிக்கப்படுவதை மக்கள் ஒருவேளை உணர்ந்து விழிப்படைந்து விட்டால் அவர்களுக்கு ஒரு மாற்று இருக்கட்டுமே என்பது தான் கேஜ்ரிவாலுக்கு முதலாளிததுவ ஊடகங்களில் கிடைக்கும் முக்கியத்துவத்தின் அடிப்படை. ஒருவேளை காங்கிரசும் பாரதிய ஜனதாவும் தமது ஊழல் மகாத்மியங்களால் மக்களில் ஒருபிரிவினரிடையே செல்வாக்கிழந்து போனால் அந்த இடைவெளியை அரவிந்த் கேஜ்ரிவால் நிரப்புவது போன்ற மாயையைத் தரக்கூடும். ஆனால் அந்த மாயை எதையும் சாதித்து விடாது என்பதும் ஆளும் வர்க்கத்திற்கு தெரியும். அவர்களுக்குத் தேவை மேடையில் பரபரப்பாக நடிக்கும் ஒரு நடிகன். “நல்ல நடிகன்”.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக