வெள்ளி, 19 அக்டோபர், 2012

நித்தி சுவாமிகள் – மதுரை ஆதீனம் ‘டீல்களை’ வீதிக்கு வர வைக்கும் தீர்ப்பு இன்று!

Viruvirupu
தமிழக அரசு ஒருவழியாக மதுரை மூத்த, இழைய ஆதீனங்கள் மீது பார்வையை திருப்பியுள்ளது. சென்னை ஹைகோர்ட்டில் தமிழக அரசு, “நித்தியானந்தா இளைய மடாதிபதியாக செயல்பட தகுதியற்றவர்” என்று தெரிவித்தது ஒருபுறம் இருக்க, மதுரை நீதிமன்றத்தில், “மதுரை ஆதீன மடத்தையே அரசிடம் ஒப்படைக்க வேண்டும்” என்று மனு தாக்கல் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்து அறநிலையத் துறை சார்பில் மதுரை நீதிமன்றத்தில், “மதுரை ஆதீன மடத்தின் சொத்துக்களை அரசு விதிகளை மீறி குறைந்த விலைக்கு விற்பனை செய்துள்ளது உள்ளிட்ட, பல்வேறு வழிகளில் முறைகேடு நடந்துள்ளதால், மடத்தை அரசிடம் ஒப்படைக்க வேண்டும்” என மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனு மீதான தீர்ப்பு இன்று வழங்கப்படும் என்று நீதிபதி கூறியுள்ளார்.
இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் தனபால், மதுரை மாவட்ட முதன்மை சார்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ள தகவல்களின்படி, மதுரை ஆதீனத்தின் மடாபதிபதி அருணகிரிநாதரும், அவரால் இளைய ஆதீனமாக நியமிக்கப்பட்டதாக கூறப்படும் நித்யானந்தாவும் சேர்ந்து 23.4.2012ல் மதுரை ஆதீன சொத்துக்களை நிர்வகிக்க ஒரு அறக்கட்டளையை உருவாக்கினர்.
ஆதீன சொத்துக்களை விற்பனை செய்வது, குத்தகைக்கு விடுவதற்கு முன்பு இந்து அறநிலையத் துறையிடம் முறையாக அனுமதி பெற வேண்டும். அப்படி அனுமதி பெறாமல் எந்த சொத்தையும் விற்கக்கூடாது. ஆனால், அதைப் பற்றியெல்லாம் இந்த இரு சாமியார்களும் கவலைப்படவே இல்லை.
நித்தி சுவாமிகள் காட்சிக்குள் வரும் முன்னரே திருவிளையாடல்கள் ஆரம்பமாகி விட்டன.
ஆல்-இன்-ஆல் ஆதீனமாக அருணகிரிநாதர் இருக்கும்போதே பல ஆண்டுகளாக இந்து அறநிலையத் துறையிடம் அனுமதி பெறாமலேயே ஏராளமான சொத்துக்களை விற்பனை செய்துள்ளார். 1995-ம் ஆண்டில் 7.3 ஏக்கர் நிலத்தை குறைந்த விலைக்கு விற்றுள்ளார். 1999-ம் ஆண்டில் ஆதீனத்திற்கு சொந்தமான மேலும் ஒரு சொத்தை விற்றுள்ளார்.
அவர் இளைய மடாதிபதியாக நித்யானந்தாவை நியமித்ததும், சட்டத்திற்கு புறம்பான செயல். இவர்கள் இருவரும் அடித்த திருக்கூத்துகளால், ஆதீன மடம் சார்பில் மீனாட்சி கோயிலில் நடக்கும் பூஜைகள்கூட நடக்கவில்லை. அந்தளவுக்கு இருவரும் வெளி வேலைகளில் பிசி.
இந்து சமய அறநிலையத் துறை தாக்கல் செய்துள்ள மனுவில், “அரசு விதிகளுக்கு முரணாக செயல்பட்டதன் மூலம் மடாதிபதியாக இருக்க அருணகிரிநாதர் தகுதி அற்றவர். சுயவிளம்பரத்திற்காகவும் ஆதீன மடத்தின் வருவாயை அருணகிரிநாதர் பயன்படுத்தியது தெரிய வந்துள்ளது. ஆதீன மடத்தின் சொத்துக்களை அபகரிக்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்ட அறக்கட்டளையின் பதிவை செல்லாது என அறிவிக்க வேண்டும். ஆதீன மடத்தை அரசிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.
இந்த மனு மீதான விசாரணை நேற்று நீதிபதி குருவையா முன்னிலையில் நடந்தது. அரசு தரப்பில் வக்கீல் நாகேந்திரன் ஆஜரானார். மனு மீதான தீர்ப்பு இன்று அறிவிக்கப்படும் என நீதிபதி கூறினார்.
இரு சுவாமிகளில் ஒருவருக்கு எதிராக தீர்ப்பு வெளியானால்கூட, இருவரும் வீதியில் இறங்கி அடிபடுவதை பார்க்கக்கூடியதாக இருக்கும். அப்போதுதான், இதுவரை தெரியாத, இவர்களுக்கு இடையேயுள்ள பல டீல்கள் பற்றிய ரகசியங்கள் வீதிக்கு வரும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக