வெள்ளி, 19 அக்டோபர், 2012

500 தியேட்டர்களில் போடறாங்களே? தங்கர் பச்சான் குமுறிக் கொண்டிருக்கிறார்.

சென்னை: ஒரே படத்தை 500 தியேட்டர்களில் வெளியிடுகிறார்களே, இது நியாயமா... இதனால எங்க படங்களுக்கெல்லாம் தியேட்டர் கிடைக்காம போகுதே, என்று மீண்டும் கேட்டுள்ளார் இயக்குநர் தங்கர் பச்சான்.

ரொம்ப நாள் கழித்து தான் இயக்கியுள்ள அம்மாவின் கைபேசி படத்தை வாங்க யாரும் வரலியே என்று செம கடுப்பிலிருக்கிறார் தங்கர் பச்சான்.
அதன் விளைவு பத்திரிகை, தொலைக்காட்சி பேட்டிகளில் எல்லோரையும் சகட்டு மேனிக்கு திட்டி வருகிறார்.
இப்போது தீபாவளிக்கு படத்தை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார் தங்கர்.

இதுபற்றி சமீபத்தில் அளித்த பேட்டியில், "என்னைப் போன்ற இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மக்களை மட்டுமே நம்பி படம் எடுக்கிறார்கள். ஆனால், எங்கள் படங்கள் மக்களை போய்ச் சேருவதில்லை.

பண்டிகை காலங்களில் மட்டுமே பெரிய முதலீட்டு படங்கள், பெரிய நடிகர்களின் படங்களை திரையிட வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் சங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றினார்கள். ஆனால் அந்த தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை.
பெரிய நடிகர்களின் படங்கள், பெரிய டைரக்டர்களின் படங்கள், பெரிய முதலீட்டில் தயாரிக்கப்படும் படங்கள் வரிசையாக தோல்வி அடைந்து வருகின்றன. ஆனால், அந்த படங்களுக்குத்தான் தியேட்டர்களில் முன்னுரிமை கொடுக்கிறார்கள். ஒரே படத்தை 500 தியேட்டர்களில் திரையிடுகிறார்கள். தீபாவளிக்கு முன்பே பெரிய படங்கள் திரைக்கு வர ஆரம்பித்து விட்டன.
கதையையும், மக்களையும் மட்டுமே நம்பி படம் எடுக்கும் என்னைப் போன்றவர்களின் படங்களுக்கு தியேட்டர்கள் கிடைப்பதில்லை. யாரிடம் சென்று இதை முறையிடுவது? என் போன்ற நூற்றுக்கணக்கான இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் குமுறிக் கொண்டிருக்கிறார்கள். பெரிய படங்களுக்கு 500 தியேட்டர்கள் கொடுத்தால், எங்கள் படங்களுக்கு 100 தியேட்டர்களாவது கொடுங்கள்," என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக