திங்கள், 1 அக்டோபர், 2012

திரைப்படங்கள் பெண்களை தவறான கோணத்திலேயே காட்டுகின்றன



ஜெயிக்கலாம் தோழி / அத்தியாயம் 11 பொதுவாக இந்தியப் பெண்கள் தங்களுடைய உடல் அழகை, உடல் நலத்தைப் பேணிக் காப்பதில்லை. திருமணத்துக்கு முன்புவரை மட்டுமே தங்களைப் பற்றிப் பெரும்பாலும் கவலைப்படுகிறார்கள், அழகாக தங்களைக் காண்பித்துக் கொள்ளவும் பெருமுயற்சி எடுத்துக் கொள்கிறார்கள். இப்பொழுது நிலைமை பெரும்பாலும் மாறிக்கொண்டு வருகிறது என்று எடுத்துக்கொண்டாலும், இந்த மனோபாவம் மேல்தட்டு மக்களிடையேயும், உயர்மட்ட மத்திய தர பெண்களிடம் மட்டுமே நிலவுகிறது.
ஆண், பெண் கவர்ச்சியும், ஈடுபாடும் அக்காலத்திலும் இருந்தாலும், பெரும்பாலும் திருமணம் என்ற பந்தம் ஒரு கட்டுக்கோப்பான சமுதாய விதியாக காப்பாற்றப்பட்டு வந்தது. அதாவது சமூக மதிப்பீடுகள் உயர்வாகக் கருதப்பட்ட சமயம் அது.
விதிமீறல்கள் அங்குமிங்கும் இருந்தாலும் மீறுபவர்கள் பெரும் விமரிசனத்திற்கு உள்ளானார்கள். சமூக அங்கீகரிப்பும் மறுக்கப்பட்டது. மேற்கூறிய காரணத்தால் பெண்கள் தங்கள் குடும்பம், குழந்தைகள், கணவன், உற்றார், உறவினர், வழிபாடுகள், பண்டிகைகள் என்று ஒரு வட்டத்துக்குள் தங்களின் கடமைகளை செவ்வனே நிறைவேற்றிக் கொண்டு இருந்தார்கள்.
பொருளாதார ரீதியாக குடும்பத்தின் பொறுப்புகள் பெரும்பாலும் ஆண்களால் கையாளப்பட்டு வந்தன. திறமையுள்ள பெண்கள், தங்கள் அறிவை, திறமையை எழுத்து, இசை, நடிப்பு, நாடகம் என்ற பொழுதுபோக்கு அம்சங்களில் வெளிப்படுத்தி சமூக அங்கீகாரம் பெற்றார்கள். திருமண பந்தம் அழுத்தமாக இருந்த காரணத்தால், விலகல்கள் அநேகமாக இல்லை. பெண் தன் இயலாமையை, வருத்தங்களை தனக்குள் புதைத்து ‘இது எனக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கை’ என்ற கோணத்தில் சகிப்புத்தன்மையுடன் எடுத்துக்கொண்டாள்.
ஆண்கள் பெண்கள்மீது ஆதிக்கம் செலுத்திவந்தபோதும், சமூக, குடும்பக் கடமைகளிலிருந்து பின்வாங்கவில்லை. பெண் சுதந்தரம், பெண்ணுரிமை என்றெல்லாம் சிலர் பேசிவந்தாலும் சமூகமாற்றம் எதுவும் பெரிய அளவில் ஏற்படவில்லை. பெண் தனக்கு வரையறுக்கப்பட்ட கோடுகளைத் தாண்டிச் செல்லவில்லை. தன் சுதந்தரம் கட்டுப்படுத்தப்பட்டது பற்றியும் தனது தனித்துவத்தை இழந்தது பற்றியும் பெரும் மனவருத்தம் அடையவில்லை.
காலம் மாற மாற, பொருளாதாரப் பிரச்னைகள் முன்னுக்கு வந்தன. முன்புபோல், குடும்பப் பொறுப்பை ஆண் ஒருவரே கவனித்துக்கொள்வது கடினமாக இருந்தது. இதனால் பெண்கள் கல்வி கற்பதும் வேலைக்குப் போவதும் அதிகரித்தன. பெண்களுக்குப் பொருளாதாரச் சுதந்தரம் கிடைத்தது. தங்கள் தனித்துவத்தைப் பற்றி நினைக்கத் தொடங்கினர். நான், எனது அறிவு, எனது கருத்து, எனது உணர்வு, எனது நிலை என்று சிந்தனையை மேம்படுத்தத் தொடங்கினர். பெண் தியாகம் செய்பவள், வீட்டில் அடங்கி கிடப்பவள், அதிகாரம் அற்றவள் என்ற நிலை மாறத் தொடங்கியது. எந்த ஒரு சமூக மாற்றத்துக்கும் பொருளாதாரம் அடிப்படையாக இருக்கும் என்பதற்கு இது ஒரு முக்கிய உதாரணம்.
நம் நாட்டில் பல்வேறு நம்பிக்கைகள், சமூக நியதிகள், சமூக விதிகள் ஆகியவை பின்பற்றப்படுகின்றன. எழுதப்படாத சமூகச் சட்டங்களாக இவை பின்பற்றப்படுகின்றன. பிற்போக்குத்தனமானவற்றை ஒதுக்கிவைத்துவிட்டு பொதுவாக அணுகினால் இந்த சமூக அமைப்புகள் நம்மை மேற்கத்திய கலாசாரங்களில் இருந்து காப்பாற்றியிருக்கின்றன என்றுதான் சொல்லவேண்டும். இந்தியக் குடும்ப அமைப்பு மேற்கத்திய பாணியிலான அமைப்பில் இருந்து பெரிதும் வேறுபடுவதற்குக் காரணம் நம் சமூக, கலாசார, வரலாற்று அடித்தளம்.
சமூக மதிப்பை, விதியை ஒரு ஆண் மீறும்போது தனிப்பட்ட முறையில் அவன் பாதிக்கப்படுகிறான். ஒரு பெண் மீறும்போது குடும்ப அமைப்பு குலைகிறது. குடிகாரத் தலைவன், கொலைக்காரத் தலைவன், பொறுப்பற்ற கணவன் என்ற எத்தகைய மோசமான நிலையை ஆண் எடுத்தாலும், அந்தக் குடும்பத் தலைவி அதைச் சமன் செய்யும் திறமைசாலியாக, உழைப்பாளியாக இருக்கும் பட்சத்தில், அக்குடும்பத்தின் பாதிப்புகள் நீக்கப்பட்டு குழந்தைகளின் எதிர்காலம் ஓரளவுக்கு நல்ல முறையில் அமைந்து விடுகிறது. இதிலிருந்து நாம் தெரிந்து கொள்வது என்னவென்றால் பெண் தவறும்போது, பெண் செயல்படாமல் இருக்கும்போது, மிக மோசமான விளைவுகளை அக்குடும்பத்தினருக்கு ஏற்படுத்தி விடுகிறாள். இவ்வகையில் ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே என்ற கூற்று உண்மையென்றே கூறலாம். ஆக்கக் கற்றுக் கொடுத்து விட்டால் பெண்களை அழிவிலிருந்து காப்பாற்றி விடமுடியும். பெண்களைக் காப்பாற்றுவதன் மூலம் ஒரு சமூக அமைப்பை, நாட்டின் பாரம்பரியத்தைக் காப்பாற்றிவிட முடியும்.
பொருளாதாரத் தேவைகளுக்காக பெரும்பாலான பெண்கள் வேலைக்குப் போகத் தொடங்கினாலும், இன்றும் வசதியுள்ள பல பெண்களும் வேலைக்குச் செல்ல இவர்களோடு போட்டி போடுகின்றனர். அதாவது பணம் ஈட்டவேண்டிய கட்டாயமுள்ள பெண்கள் ஒருபுறம்; அந்தக் கட்டாயமில்லாத பெண்கள் மறுபுறம். பொதுவாக, இருபதிலிருந்து நாற்பது வயது வரையிலான பெண்கள் அனைவரும் பொருளாதார ரீதியில் தன்னைச் சுயமாக நிலைநிறுத்திக்கொள்ள விரும்புகிறார்கள். இது சமீப காலத்தில் ஏற்பட்டுள்ள மிக முக்கியமான சமூக மாற்றம்.
பொருளாதார சுதந்தரம் உள்ள பெண்கள் சில விஷயங்களை மனதில் கொள்ள வேண்டியது மிக அவசியம். பொருளாதார சுதந்தரத்துக்கும் பலத்துக்கும் அடிப்படையாக அமைவது பணம். அந்தப் பணத்தை சுயக் கட்டுப்பாடு இன்றி, திட்டமிடுதல் இன்றி செலவு செய்வது அறிவீனம். வேலைக்குச் செல்லும் மணமான பெண்கள் பலர் இதனை உணர்வதில்லை. கையில் பணம் புழங்கத் தொடங்கியதும், போதுமான சம்பளம்தான் வருகிறதே என்ற நினைப்பில் தாறுமாறாகச் செலவு செய்துவிடுகிறார்கள். சேமிக்கும் வழக்கத்தை மறந்துவிடுகிறார்கள். போதாதற்கு, கடனையும் வாங்கிவிடுகிறார்கள். எல்லாம் மாதச் சம்பளம் கொடுக்கும் துணிச்சல்! ஆக, வேலையில் தொடர்ந்து நீடிக்கவேண்டும் என்ற கட்டாயத்தைத் தம்மைச் சுற்றி உருவாக்கிக் கொள்கின்றனர்.
கற்பகம் திருமணமாகி கூட்டுக் குடும்பத்தில் வாழ்ந்து கொண்டிருப்பவர். தான் சம்பாதிப்பதில் அதீத பெருமையும் கர்வமும் கொண்டவர். மற்றவர்களைத் துச்சமாக எடை போடுபவர். பொருளாதார ரீதியாக தன்னுடைய பிறந்த வீட்டு மனிதர்களுக்கு, கணவருக்குத் தெரியாமல் பல உதவிகள் செய்தவர். ஆனால் அவருக்கே ஒரு தேவை என்று வந்தபோது செய்வதறியாது நின்றுவிட்டார்.
இத்தகைய பெண்களின் குணாதிசயங்களைப் பொருளாதாரப் பின்னணியில் அலசிப் பார்க்கும்போது சில விஷயங்கள் தெரியவருகின்றன. இவர்களுக்குப் பொருளாதார சுதந்தரம் இருக்கிறது. பணம் ஈட்டும் திறன் இருக்கிறது. தகுதி இருக்கிறது. ஆர்வம் இருக்கிறது. என்றாலும், சம்பாதித்த பணம் கையில் தங்கவில்லை. மன அமைதியைக் கொடுக்கவில்லை. இவர்களுக்கும் காலையில் எழுந்து கடமையைச் செய்து ஒன்பது மணிக்கு கையசைத்துக் கணவனை அலுவலகத்துக்கு அனுப்பிவிட்டு, ஒன்றாம் தேதியன்று கணவனின் சம்பளக் கவரை ஆவலுடன் எதிர்பார்க்கும் பெண்களுக்கும் பெரிய வித்தியாசமில்லை என்பதுதான் உண்மை.
வேலைக்குச் செல்லும் பெண்கள் கடன் இன்னி நிறைவான வாழ்க்கை வாழவேண்டும். அதற்கு சேமிப்பு அவசியம். உறுதியான முதலீடு அவசியம். இதையெல்லாம் செய்தால்தான் அவர்கள் ஓடியாடி பொருள் ஈட்டியதற்கு ஒரு மதிப்பு இருக்கும். பெண்கள் தங்களுடைய பொருளாதார சுதந்தரத்தை தங்கள் மகிழ்ச்சிக்கும் குடும்பத்தினரின் மகிழ்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் பயன்படுத்தவேண்டும்.
நமது திரைப்படங்கள் அன்று தொடங்கி இன்று வரை, பெண்களைச் சரியான கோணத்தில் சித்தரிக்கத் தவறிவிட்டது. படித்த, சம்பாதிக்கும் பெண்கள் திமிர் படைத்தவர்களாகவும், குடும்பத்துக்குக் கட்டுப்படாதவர்களாகவும் காண்பிக்கப்படுகிறார்கள். உண்மையில் பெண்கள் இப்படியா இருக்கிறார்கள்? படித்த, வேலைப் பார்க்கும், சுயத்தொழில் செய்யும் எத்தனையோ பெண்கள், வெற்றிகரமான குடும்பத் தலைவியாகத் திகழ்கிறார்கள். வீட்டில் இருக்கும் பெண்களைக் காட்டிலும் வீட்டுக்கு இவர்கள் அதிகம் பங்களிக்கிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக