ஞாயிறு, 28 அக்டோபர், 2012

தேமுதிகவிலிருந்து 12 எம்.எல்.ஏக்கள் அணி மாற முடிவு?

சென்னை: தேமுதிகவிலிருந்து 4 எம்.எல்.ஏக்கள் இதுவரை வெளியே வந்துள்ள நிலையில் மேலும் 8 எம்.எல்.ஏக்கள் அணி மாற தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எம்.எல்.ஏக்கள் விலகலால், தேமுதிக வட்டாரம் கலகலக்க ஆரம்பித்துள்ளது. ஆளுங்கட்சியின் அதி பயங்கர சக்திவாய்ந்த வலையில் சிக்கி
ஒவ்வொரு எம்.எல்.ஏவாக வெளியேற ஆரம்பித்துள்ளனர். இப்படி ஆளுங்கட்சியினரிடம் சிக்கி எதிர்க்கட்சிகள் சின்னாபின்னமாவது
தமிழகத்திற்குப் புதிதல்ல. கடந்த திமுக ஆட்சியிலும் கூட இப்படித்தான் அதிமுகவை கலைத்துப் பார்த்தார்கள். இந்த நிலையில் தற்போது தேமுதிக சிக்கியுள்ளது.

இதுவரை மதுரை வடக்கு சுந்தரராஜன், பேராவூரணி நடிகர் அருண் பாண்டியன், திட்டக்குடி தமிழழகன், ராதாபுரம் மைக்கேல் ராயப்பன்
ஆகியோர் முதல்வர் ஜெயலலிதாவைப் போய்ப் பார்த்து விட்டு வந்துள்ளனர். இதனால் விஜயகாந்த் கடும் கோபத்தில் உள்ளார். நிதானத்தை இழந்த நிலையில் படு ஆங்காரமாக காணப்படுகிறார்.
இந்த நிலையில், இன்று மேலும் 8 எம்.எல்.ஏக்கள் முதல்வரைப் பார்க்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் விருதுநகர் மாஃபா
பாண்டியராஜனும் ஒருவர் என்று கூறப்படுகிறது. மொத்தம் 12 பேர் தேமுதிகவிலிருந்து பிரியவும் தயாராகியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
தேமுதிகவிடம் தற்போது 29 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இவர்களில் குறைந்தது 10 பேராவது வெளியே வந்தால்தான் கட்சி உடையும், வெளியேறிய எம்.எல்.ஏக்களின் பதவியும் கட்சித் தாவல் தடைச் சட்டத்திலிருந்து தப்பிக்க முடியும்.எனவேதான் பலம் வாய்ந்த தரப்பானது, 10 எம்.எல்.ஏக்கள் வரை விலை பேசி விட்டதாக கூறபப்படுகிறது. அதேசமயம், மேலும் 2 எம்.எல்.ஏக்களும் கட்சியிலிருந்து விலகத் தயாராக இருப்பதாக அந்த பலம் வாய்ந்த தரப்புக்குத் தகவல் அனுப்பியுள்ளதாம்.
ஜெயலலிதாவை நாளை விருதுநகர் எம்.எல்.ஏ. மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்ட 5 பேர் சந்திக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. வெகு விரைவிலேயே மொத்தமாக 12 பேரும் தேமுதிகவை விட்டு வெளியேறி புதிய அணி அமைக்கலாம் என்றும் இந்த அணியானது, அதிமுகவுக்கு ஆதரவாக செயல்படும் என்றும் பரபரப்பாக பேசப்படுகிறது.
இவர்கள் வெளியேறி விட்டால் தேமுதிக உடைந்து விடும். மேலும் முரசு சின்னத்தை முடக்கும் நடவடிக்கைகளும் அடுத்து எடுக்கப்படும் என்று தெரிகிறது. மேலும் விஜயகாந்த்தின் எதிர்க்கட்சி்த் தலைவர் அந்தஸ்தையும் பறிக்கும் நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக