புதன், 19 செப்டம்பர், 2012

கர்ணன் படத்தில் N.T ராமாராவுக்கு குரல் கொடுத்த K.V. ஸ்ரீநிவாசன்

K.V. ஸ்ரீநிவாசன். http://rprajanayahem.blogspot.com/
கர்ணன் படம் சில மாதங்களுக்கு முன் தமிழகமெங்கும் திரையிடப்பட்ட போது அந்தப்படத்தில் நடித்தவர்களில் இருவர் மட்டுமே - வி.எஸ்.ராகவன் மற்றும்  சண்முகசுந்தரம்- இப்போது உயிரோடு இருப்பதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையில் எழுதியிருந்தார்கள். அது உண்மையல்ல. K.V.ஸ்ரீநிவாசனும் 91 வயதில் உயிரோடு இருக்கிறார் என்பது ஹிண்டு பத்திரிக்கையில் அவர் பேட்டி வந்தபோது தெரியவந்தது.
’தலையாட்டி’வி.எஸ்.ராகவன் அந்தப் படத்தில் விதுரனாக நடித்தார்.
’வயசாயிடுச்சில்ல’ சண்முகசுந்தரம் கர்ண்னுக்கு தேரோட்டிய சல்லியனாக நடித்திருந்தார்.
கே.வி.ஸ்ரீநிவாசன் கர்ணன் படத்தில் கர்ணன் குழந்தையாக தேரோட்டியால் கண்டுபிடிக்கப்படும்போது முனிவராக வந்து ’வா’ என்று குழந்தையை பார்த்து கை நீட்ட, குழந்தை தன் அணிகலனை அவ்ருக்கு தருவதைப் பார்த்து வியந்து, கர்ணன் என்று பெயரிடுவார்.

இந்த ரோல் செய்தது பெரிய விஷயமல்ல.ஆனால் இந்த படத்தில் கிருஷ்ண பரமாத்மாவாக நடித்த என்.டி.ராமாராவுக்கு இவர் தான் குரல் கொடுத்தார்!
 அப்போதெல்லாம் என்.டி.ஆருக்கு தமிழ் படங்களில் இவர் தான் டப்பிங் பேசினார்.

இது போல தெலுங்கு டப்பிங் படங்களில் வில்லன் ராஜநளாவுக்கு குரல் கொடுத்தவர் K.R.ராம்சிங் என்ற நடிகர்.”வெண்ணிலா காற்று வீசும் இந்த வேளையில் விவேகம் இல்லாமல் பேசி விட்டீர்கள் மன்னா!”


பல பழைய படங்களில் கே.வி.ஸ்ரீநிவாசன்  நடித்திருக்கிறார். வக்கீல் வேசம், டாக்டர் வேசம், அப்பா நடிகருக்கு  நண்பராக இப்படி..இப்படி... குரல் நல்ல அழுத்தமாக இருக்கும்.


கே.வி.ஸ்ரீநிவாசன்ஒரு தடவை ஒரு தியேட்டரில் சினிமா பார்த்தபோது அவருக்கு இரு பக்கமும் உட்கார்ந்திருந்தவர்கள் எம்.ஜி.ஆரும் சிவாஜி கணேசனும். இதை அந்தக்காலத்தில் பெருமையுடன் சொல்லிக்கொள்வார்.

இதை விட இவருக்கு விஷேச பெருமை இவர் பன்னிரெண்டு வயது சிறுவனாக  ’வைஷ்ணவ ஜனதோ’ பாடிய போது காந்தியார் இவரை கனிவோடு பார்த்து புன்னகைத்து “ அச்சா!” என்று பாராட்டியது தான்.

ஒரு ரேடியோ நாடகத்தில் இவர் நடித்தார். ரேடியோ ஸ்டேசனுக்கு பல கடிதங்கள் வந்தனவாம். ”ஏன் நடிகர்கள் பட்டியலில் என்.டி.ராமாராவும் நடிக்கிறார் என்பதை வாசிக்கையில் சொல்லவில்லை?”

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக