புதன், 19 செப்டம்பர், 2012

உயிரிழப்புகளை தடுக்க திட்டம் ஆரம்ப சுகாதார நிலையங்களில் புதிய முறை கருக்கலைப்பு வசதி

திருப்பூர்: தமிழகத்தில், பாதுகாப்பற்ற கருக்கலைப்பால் பெண்கள் உயிரிழப்பதைத் தடுக்க, முதல் கட்டமாக 8 மாவட்டங்களில், அரசு மருத்துவமனை டாக்டர்கள் மற்றும் செவிலியர்களுக்கு, புதிய முறையிலான கருக்கலைப்பு சிகிச்சை முறை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.  இந்தியாவில், 78 சதவீத கர்ப்பங்கள் திட்டமிடப்படாத, தற்செயலான கர்ப்பங்கள். இதனால், ஆண்டுதோறும் ஒரு கோடி பெண்களுக்கு கருக்கலைப்பு செய்யப்படுகிறது. இதில், 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட கருக்கலைப்புகள், பாதுகாப்பற்ற கருக்கலைப்புகள் என உலக சுகாதார நிறுவன ஆய்வு தெரிவிக்கிறது. பாதுகாப்பற்ற கருக்கலைப்புகளால், இந்தியாவில், ஆண்டுதோறும் 80 ஆயிரம் பெண்கள் இறக்கின்றனர்.  இதைக் கருத்தில் கொண்டு, எம்.வி.ஏ என்ற புதிய கருக்கலைப்பு முறையை பிரபலப்படுத்த, தமிழக சுகாதாரத் துறை முடிவு செய்து, இந்த புதிய முறை குறித்து, டாக்டர்கள் மற்றும் செவிலியர்களுக்கு பயிற்சி அளிக்கும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இது குறித்து, சுகாதாரத்துறை உயரதிகாரி கூறியதாவது: உலகில் நடக்கும் 6 கருக்கலைப்புகளில் ஒன்று இந்தியாவில் நடக்கிறது. இந்தியாவில், 5 கருக்கலைப்புகளில், 2 பாதுகாப்பற்றவை.  இதனால் பாதுகாப்பாகவும், எளிய முறையிலும் கருக்கலைப்பு செய்வதற்கான முறையாக எம்.வி.ஏ. கருக்கலைப்பு முறை இருக்கும். இந்த முறையில், 15 நிமிடங்களில் கருக்கலைப்பு செய்துவிடலாம். 2 மணி நேரத்தில், வீட்டுக்குச் சென்றுவிடலாம். அதிக ரத்தப் போக்கு இருக்காது. வலி இருக்காது. இந்த புதிய முறை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் அறிமுகப்படுத்துவதன் மூலம், கிராமப்புறங்களிலும் பாதுகாப்பான கருக்கலைப்பை உறுதி செய்யலாம். காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர், கோவை, மதுரை, திருநெல்வேலி மாவட்டங்களில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், தாலுகா மருத்துவமனைகளில் உள்ள டாக்டர்கள், செவிலியர்களுக்கு, இந்த சிகிச்சை முறை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 137 டாக்டர்கள், 208 செவிலியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக