செவ்வாய், 11 செப்டம்பர், 2012

மறைவிடத்தில் இருந்து வெளியே வந்தார் சுப. உதயகுமார்!

Viruvirupu
கூடங்குளத்தில் நேற்று நடைபெற்ற போலீஸ் தடியடி மற்றும் வீட்டுக்கு வீடு தேடுதலை அடுத்து, தலைமறைவாக இருந்த சுப. உதயகுமார், இன்று மதியத்துக்குப் பின், வெளிப்பட்டுள்ளார். இன்னமும் போராட்டம் நடைபெறும் இடிந்தகரை பகுதிக்கு அவர் திரும்பினார்.
இடிந்தகரையில் 48 மணி நேர தொடர் உண்ணாவிரதம் இருந்து வரும் பொதுமக்களோடு இணைந்து கொண்ட உதயகுமார், செய்தியாளர்களை சந்தித்தார்.
நேற்று நடைபெற்ற கலவரம் பற்றி கருத்து தெரிவித்த அவர், “கடற்கரையில் ஒன்று திரண்டிருந்த பொதுமக்கள், போலீசாரை தாக்கியதாகக் கூறுவது தவறு. போலீசார்தான் பொதுமக்களைக் கொடூரமாகத் தாக்கியுள்ளனர்” என்றார்.
போலீஸ் தம்மை தேடுவதை அறிந்திருப்பதாக கூறிய உதயகுமார், “பொதுமக்கள் மீதான வன்முறை தொடரக் கூடாது என்பதற்காக போராட்டக் குழுவின் முன்னணி நிர்வாகிகளாகிய நாங்கள் இன்று இரவு சரணடைகிறோம். கூடங்குளம் காவல்நிலையத்தில் சரணடைய இருக்கிறோம்” என்றும் தெரிவித்தார்.
“மக்களின் பாதுகாப்புக்காக இன்று இரவு 9 மணிக்கு முக்கிய அரசியல் தலைவர் ஒருவர் முன்னிலையில் கூடங்குளம் காவல்நிலையத்தில் சரணடைய, போராட்டக் குழுவினராகிய நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்றவர், குறிப்பிட்ட அரசியல் தலைவர் யார் என்பதை தெரிவிக்க மறுத்தார். “இரவு 9 மணிக்கு நீங்களே பார்த்துக் கொள்ளுங்களேன்” என்றார்.
இடிந்தகரை பகுதியில் அடிபடும் கதையின்படி, உதயக்குமார் குறிப்பிடும் முக்கிய அரசியல் தலைவர் வைகோ என்கிறார்கள்.
உதயக்குமார், வைகோ முன்னிலையில் போலீஸில் சரணடைந்தால், உதயக்குமார் மீது தொடரப்பட்டுள்ள வழக்குகளையும் வைகோவை கையாளக் கூடும் என்ற பெரும் எதிர்பார்ப்பும், போராட்டக்குழுவினரிடம் நிலவுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக