செவ்வாய், 11 செப்டம்பர், 2012

நிலக்கரி முறைகேடு: ப.சிதம்பரத்துக்கு கிடைத்த சலுகை வேறு இருவருக்கு இல்லை?

Viruvirupu
நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு விவகாரம் நாடளாவிய ரீதியில் காங்கிரஸ் கட்சிக்கு கெட்ட பெயரைச் சம்பாதித்து கொடுத்திருப்பதால், அதிலிருந்து தப்பித்துக் கொள்ள, சோனியா காந்தி, இரு மத்திய அமைச்சர்களை ‘காவு’ கொடுக்க முடிவு செய்திருப்பதாக டில்லி அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.
சேச்சே.. அவசரப் படாதீர்கள். நம் மண்ணின் மைந்தனான தி.மு.க. மந்திரி ஜெகத்ரட்சகனும் அதில் ஒருவர் அல்ல.
மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால், சுற்றுலாத்துறை அமைச்சர் சுபோத்காந்த் சகாய் ஆகிய இருவரையும்தான் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ராஜினாமா செய்ய உத்தரவிடுவார் என்று தெரிகிறது. எதிர்க்கட்சிகளால், இவர்கள் இருவரையும் மிகச் சுலபமாக நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு விவகாரத்தில் தொடர்பு படுத்த முடியும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு விவகாரத்தில் இதுவரை நடந்த விசாரணைகளின்படி, காங்கிரஸ் மத்திய அமைச்சர்கள் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால், சுபோத்காந்த் சகாய், காங்கிரஸ் எம்.பி.க்கள் நவீன் ஜின்டால், விஜய் தர்தா, ஆகியோருடன், முன்னாள் நிலக்கரித்துறை இணையமைச்சர் சந்தோஷ் பகோர்டியாவுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.
விதிகளை மீறி நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்ட விவகாரம் குறித்து நடைபெறும் சி.பி.ஐ. விசாரணையை அடுத்து, இதுவரை 5 தனியார் நிலக்கரி சுரங்க நிறுவனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக நிலக்கரி சுரங்கத்துக்கு அனுமதி கொடுத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப் போவதாக கூறப்படுகிறது.
“மற்றையவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள். அதற்குமுன், பிரதமர் மன்மோகன் சிங் ராஜினாமா செய்ய வேண்டும்” என்கிறது பா.ஜ.க.
காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கடி முற்றி வரும் நிலையில், இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா இன்று தீவிர ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனையில்தான், இரு மத்திய அமைச்சர்களை ‘காவு’ கொடுக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
கடந்த காலங்களில், ஸ்பெக்ட்ரம் முறைகேடு உட்பட பல்வேறு சிக்கல்களில் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் சிக்கிக் கொண்டபோது, காங்கிரஸ் கட்சி, “எக்காரணம் கொண்டும் ப.சிதம்பரத்தை காங்கிரஸ் கட்சி கைவிடாது” என காங்கிரஸ் பேச்சாளர் தெரிவித்திருந்தார்.
அந்த சலுகை அவருக்கு மட்டும்தான் போலிருக்கிறது!
மத்திய அமைச்சர்கள் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால், சுபோத்காந்த் சகாய் ஆகியோருக்கும், ப.சிதம்பரம் அளவுக்கு கட்சிக்குள் செல்வாக்கு உள்ளதா என்பது சீக்கிரம் தெரிந்து போகும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக