வெள்ளி, 28 செப்டம்பர், 2012

ஆர்த்தி ராவ்:என்னைக் கொல்ல முயற்சிக்கிறார் நித்தியானந்தா

என்னால் தனக்குப் பிரச்சினை வரலாம் என்பதால் என்னை ஆட்களை அனுப்பி கொலை செய்வதற்கு நித்தியானந்தா முயற்சிப்பதாக சந்தேகிக்கிறேன். இதுதொடர்பாக நடவடிக்கை எடுகக் வேண்டும் என்று சென்னை போலீ்ஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார் நித்தியானந்தாவின் முன்னாள் பெண் ஆதரவாளரான ஆர்த்தி ராவ். நித்தியானந்தாவின் ஆதரவாளராக முன்பு விளங்கியவர் ஆர்த்தி ராவ். சென்னையைச் சேர்ந்த இவர் முன்பு அமெரிக்காவில் கணவருடன் வசித்து வந்தார். அப்போதுதான் நித்தியானந்தாவால் ஈர்க்கப்பட்டு அவரிடம் போய்ச் சேர்ந்தார். ஆனால் அவரிடம் தான் இருந்தபோது பல்வேறு வகையில் பாலியல் தொல்லைகளுக்கு ஆனதாகவும், பலமுறை நித்தியானந்தா தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அசிங்கமான முறையில் நடந்து கொண்டதாகவும் சில மாதங்களுக்கு முன்பு பரபரப்பு குற்றம் சாட்டினார்.
மேலும் இவரும் லெனின் கருப்பனும் சேர்ந்துதான் நித்தியானந்தாவின் படுக்கை அறைக் காட்சிகளை ரகசியமாக வீடியோவில் எடுத்து வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர்கள். இதுதொடர்பாக நித்தியானந்தா இவர்கள் மீது வழக்கும் போட்டுள்ளார்.

இந்த நிலையில், இன்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்த ஆர்த்தி ராவ் அங்கு ஒரு புகார் கொடுத்தார். அந்தப் புகார் மனுவில்,
கடந்த 26-ந்தேதி மாலை 4 மணி அளவில் நாங்கள் வசிக்கும் வீட்டு காம்பவுண்டில் எனது தந்தையின் கார் நிறுத்தப்பட்டு இருந்தது. அப்போது ஒரு நபர் காரின் அருகில் வந்து சந்தேகப்படும் வகையில் ஏதோ செய்து கொண்டு இருந்தார். இதை கவனித்த எனது தாய் அவரிடம் வந்து என்ன செய்கிறாய்? உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார். அதற்கு அவர் வேறு ஒருவரை பார்க்க வந்தேன் என்று கூறியவாறு செல்போனில் பேசிக்கொண்டே சென்று விட்டார். அதன் பிறகு அன்று இரவு ஏழரை மணிக்கு ஒருவர் வந்து காலிங்பெல்லை அழுத்தினார்.
அம்மா கதவை திறந்து விசாரித்தபோது, செந்தில் இருக்கிறாரா? என்று கேட்டிருக்கிறார். அப்படி யாரும் இல்லையே என்று அம்மா சொன்னதால் தெரியாமல் வந்து விட்டேன் என்று அந்த நபர் சென்று விட்டார். பின்னர் அரை மணி நேரம் கழித்து இரவு 8 மணிக்கு மீண்டும் ஒருவர் வந்து காலிங்பெல்லை அழுத்தி சுஜாதா இருக்கிறாரா? என்று கேட்டார். அப்படி யாரும் இல்லை என்று சொன்னதும் தெரியாமல் வந்து விட்டேன் என்று கூறி போய் விட்டார்.
இவர்களது நடமாட்டம் எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. எனது குடும்பத்துக்கு இவர்களால் ஆபத்து நேருமோ என அஞ்சுகிறோம். நித்தியானந்தா வழக்கில் நான் முக்கிய சாட்சியாக இருக்கிறேன். நித்தியானந்தா தவிர வேறு யாரும் எனக்கு எதிரிகள் கிடையாது. அவர்தான் ஆட்களை அனுப்பி இதுபோன்ற செயலில் ஈடுபட்டு இருக்கலாம் என்று நினைக்கிறேன். எங்கள் குடும்பத்துக்கு பாதுகாப்பு அளிக்க கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ஆர்த்தி ராவ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக