வெள்ளி, 28 செப்டம்பர், 2012

"2ஜி வழக்கு தீர்ப்பு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டிற்கு மட்டுமே பொருந்தும்

புதுடில்லி: "2ஜி' வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டிற்கு மட்டுமே பொருந்தும். மற்ற இயற்கை வளங்கள் ஒதுக்கீட்டிற்கு பொருந்தாது' என, சுப்ரீம் கோர்ட் தெளிவுபடுத்தி உள்ளது.
"2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான வழக்கில், 120 ஸ்பெக்ட்ரம் உரிமங்களை ரத்து செய்த சுப்ரீம் கோர்ட், "ஸ்பெக்ட்ரம் போன்ற இயற்கை வளங்கள் ஒதுக்கீட்டில், ஏல நடைமுறையை பின்பற்ற வேண்டும்' என்று, கண்டிப்புடன் தெரிவித்தது.
சந்தேகம்:
சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த இந்த உத்தரவு, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டிற்கு மட்டும் பொருந்துமா அல்லது அனைத்து இயற்கை வளங்களின் ஒதுக்கீட்டுக்கும் பொருந்துமா என்ற சந்தேகம், மத்திய அரசுக்கு எழுந்தது. இதையடுத்து, ஜனாதிபதி மூலமாக, சுப்ரீம் கோர்ட்டிடம் கருத்து கேட்டது. ஜனாதிபதியின் கருத்து கேட்கும் மனுவை விசாரித்த, சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி கபாடியா தலைமையிலான, ஐந்து நீதிபதிகள் அடங்கிய, அரசியல் சட்ட, "பெஞ்ச்' நேற்று பிறப்பித்த உத்தரவு: "2ஜி' வழக்கில், சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவு, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டிற்கு மட்டுமே பொருந்தும்; மற்ற இயற்கை வளங்கள் ஒதுக்கீட்டிற்கு பொருந்தாது. இயற்கை வளங்கள் ஒதுக்கீட்டிற்கு, ஏல முறையை பின்பற்ற வேண்டும் என்பது, மிகவும் ஏற்றுக் கொள்ளத்தக்க முறையே. ஆனால், எல்லாவற்றுக்கும், அரசியல் சட்டப்படி, அது கட்டாயமல்ல. அதனால், ஏல முறை அல்லாத, இதர முறைகளில், இயற்கை வளங்களை ஒதுக்கீடு செய்வதை, சரியல்ல என, கூறி, ஒட்டு மொத்தமாக தள்ளுபடி செய்ய முடியாது. அரசின் வருமானத்தை அதிகரிக்க, இயற்கை வளங்களை ஏலம் விடுவது, சிறந்த வழி என்றாலும், வருவாயை அதிகரிக்க வேண்டும் என்பதே, அரசு கொள்கையாக இருக்கக் கூடாது. இவ்வாறு உத்தரவில் குறிப்பிடப் பட்டு இருந்தது.
சேவை நோக்கம்:

உத்தரவில் மேலும் குறிப்பிடப் பட்டு இருந்ததாவது: பொதுமக்களுக்கு சிறப்பான சேவை செய்யும் நோக்கத்துடன், ஏலம் அல்லாத இதர வழி முறைகளிலும், இயற்கை வளங்களை, தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யலாம். இயற்கை வளங்கள் ஒதுக்கீட்டில், மக்கள் நன்மை அடைய வேண்டும் என்பதையே, அரசியல் சட்டத்தின், 39 (பி) பிரிவு வலியுறுத்துகிறது. அதனால், எந்த முறைகளில், வளங்கள் ஒதுக்கீடு செய்யப் பட்டாலும், அது மக்களுக்கு, இறுதியாக நன்மை அளிக்க வேண்டும். இயற்கை வளங்களை, ஏல முறையில்தான், ஒதுக்கீடு செய்ய வேண்டும் என, அரசியல் சட்டத்தின், 14வது பிரிவு வலியுறுத்தவில்லை. அரசு பல நேரங்களில், ஏல நடைமுறைகளில் இருந்து மாறியிருந்தாலும், அந்த நடவடிக்கைகளை, சுப்ரீம் கோர்ட் அங்கீகரித்துள்ளது. வருவாயை உத்தேசித்து, அரசு எடுக்கும் நல்ல முடிவுகளுக்கு, கோர்ட் ஒப்புதல் அளித்துள்ளது. இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக