சனி, 15 செப்டம்பர், 2012

கட் அவுட்டுக்கு' பதில் கிராமத்தை தத்தெடுக்கலாம்: வெளிநாடு வாழ் மாணவிகள்

காரைக்குடி:""தமிழ்நாட்டில் வைக்கும் பிளக்ஸ், "கட் அவுட்டுக்கு' பதில், கிராமத்தை தத்தெடுக்கலாம்,'' என தமிழகத்தை சுற்றி பார்க்க வந்த மாணவர்கள் கருத்து தெரிவித்தனர்.
மத்திய வெளியுறவுத்துறை சார்பில், இந்திய வம்சாவளி மாணவர்களுக்கு, இந்திய கலாச்சாரம், உணவு பழக்க வழக்கங்கள், மக்களின் வாழ்க்கை முறை, இந்திய அரசியல் அமைப்பு, கோயில்கள், தொழில் குறித்து அறிந்து கொள்ள, ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யப்படுகிறது. இஸ்ரேல், மலேசியா, தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட 7 நாடுகளை சேர்ந்த 36 மாணவர்கள், இந்திய வெளியுறவுத்துறை அலுவலர் அஸ்வானி குமார் தலைமையில், ஆக.,28 ல் இந்தியா வந்தனர். டில்லியில் உள்ள பார்லிமென்ட் வளாகம் மற்றும் வரலாற்று சின்னங்களை பார்வையிட்டு, தமிழகத்திற்கு செப்., 8 ல் வந்தனர். நேற்று முன்தினம் காரைக்குடி வந்தனர். கானாடு காத்தான் அரண்மனை, அரியக்குடியில் உள்ள, "தாபா கார்டன்' நிர்வாக இயக்குனர் நாராயணனின் பழங்கால வீட்டை சுற்றி பார்த்தனர்.அவர்களின் டூரிசம் மேலாளர் சுவாதி கூறியதாவது: ஒவ்வொரு ஆண்டும் ஒரு மாநிலத்தை தேர்ந்தெடுப்போம். இந்த ஆண்டு தமிழகத்தை தேர்ந்தெடுத்தோம். இந்தியாவில் மல்டிமீடியா வளர்ச்சி, கிராம பழக்க வழக்கங்கள், இந்திய ஆட்சி முறை, கட்டடக்கலை, ஆயுர்வேதிக் முறைகள் குறித்து விளக்கப்பட்டது, என்றார்.
மாணவி ஒருவர் கூறியதாவது: ஸ்ரீரங்கம் கோயிலுக்கு சென்றோம். தமிழக முதல்வர் வருவதால், எங்களை போலீசார் அனுமதிக்கவில்லை. அங்கு "கட் அவுட்டுகளுக்கு' செலவு செய்வதற்கு பதில், ஒரு கிராமத்தை தத்தெடுத்து, மாணவர்களை படிக்க வைக்கலாம். ரோட்டை மறித்து, பொதுமக்களுக்கு இடையூறு செய்கின்றனர். இது மனதுக்கு வேதனையாக உள்ளது, என்றார்.

தென் அமெரிக்காவை சேர்ந்த தனிஷா: எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாக உள்ளனர். எங்கள் நாட்டில் இப்படி இல்லை. தமிழக மக்களின் பழக்க வழக்கங்கள் எளிமையாக உள்ளது. எங்கள் குடும்பத்தில், நான் மூன்றாவது தலைமுறை. செட்டிநாட்டு உணவு, கட்டடக்கலை பிடித்துள்ளது, என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக