வெள்ளி, 14 செப்டம்பர், 2012

ரோஜாதேவி, குஷ்பூ, த்ரிஷா 'JUST FOR WOMEN

JUST FOR WOMEN' என்ற பெண்களுக்கான பிரபல மாத இதழ், தனது 5-வது ஆண்டு விழாவை சிறப்பாக கொண்டாடும் வகையில் தமிழ் சினிமாவின் மூன்று தலைமுறை நடிகைகளான சரோஜாதேவி, குஷ்பூ, த்ரிஷா ஆகிய மூவரின் ஃபோட்டோக்களை அட்டைப்படத்தில் இடம்பெறச்செய்து இம்மாத இதழை வெளியிட்டது. நடிகைகள் சரோஜா தேவி, குஷ்பூ, த்ரிஷா ஆகிய மூவரும் கலந்து கொண்டு 'JUST FOR WOMEN' சிறப்பிதழை வெளியிட்டும், இதற்கான ஃபோட்டோஷூட்டில் கலந்துகொண்ட அனுபவத்தையும் பகிர்ந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய நடிகை சரோஜா தேவி “எனக்கு இந்த ஃபோட்டோஷூட் எல்லாம் புதிதாக இருக்கிறது. நான் நடித்துக்கொண்டிருக்கும் போதெல்லாம் ஷூட்டிங் சென்று நடிப்போம், டையலாக் பேசுவோம், நடனமாடுவோம் வந்துவிடுவோம். ஆனால் இது புதிதாகவும், ஆச்சர்யமாகவும் இருக்கிறது.
 ஃபோட்டோஷூட் எடுத்த கேமராமேன் சுந்தரம் என்னை எந்த தொந்தரவும் செய்யவில்லை. நான் எப்படி இருக்கிறேனோ அப்படியே எடுத்தார். எனக்கு குஷ்பூ, த்ரிஷாவுடன் அவ்வளவாக பழக்கம் இல்லை.  இருந்தாலும் பல வருடங்கள் பழகி ஒன்றாக நடித்தது போன்ற உணர்வு. குஷ்பு நம்ம தமிழ்நாட்டுக்கு கிடைத்த ஒரு நல்ல நடிகை. அதைவிட முக்கியம் அவர் குடும்பத்தை பார்த்துக்கொள்ளும் திறமை. என் மகள்களிடமும் குஷ்புவை பார்த்து குடும்பம் எப்படி நடத்த வேண்டும் என கற்றுக்கொள்ளுங்கள் என்று சொல்வேன். பல நடிகைகள் வருகிறார்கள் ஓரிரு வருடங்கள் நடித்துவிட்டு சென்றுவிடுகிறார்கள். ஆனால் த்ரிஷா ரொம்ப வருடங்களாக நடிக்கிறார்” என்று கூறினார்.


மேடையில் பேசிய நடிகை குஷ்பூ “ வேறு மாநிலத்திலிருந்து வந்து தமிழ் சினிமாவில் நீங்காத இடத்தை பிடித்த நடிகைகளில் முதல் இடத்தில் இருப்பவர் சரோஜாதேவி அம்மா. அவங்க வாயில் இருந்து என்னை புகழ்ந்து இப்படி ஒரு வார்த்தை வந்துவிட்டதால் நான் பேச வார்த்தைகளை தேடிக்கொண்டிருக்கிறேன் அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். சரோஜா தேவி அம்மாவுடன் நல்ல பழக்கம் இருந்து வந்தாலும் நான் இதுவரை அவருடன் இணைந்து நடித்ததில்லை. நான் இனி நடிப்பேனா எனத் தெரியவில்லை, சரோஜாதேவி அம்மா நடிப்பார்களா எனத் தெரியவில்லை, ஆனால் ஒரே ஃப்ரேமில் அவர்களுடன் இணைந்து நிற்பது மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கிறது. சரோஜாதேவி அம்மாவின் முகத்தை பார்க்கும் போதெ கையெடுத்து கும்பிட வேண்டும் எனத் தோன்றுகிறது ” என்று கூறினார்.

கடைசியாக பேசிய நடிகை த்ரிஷா “ நான் இவர்கள் இருவருடனும் ஒரே ஃப்ரேமில் நிற்கும் அளவிற்கு தகுதி உடையவளா எனத் தெரியவில்லை. ஏனென்றால் இவர்கள் இருவரும் திரையில் சாதித்த சாதனையாளர்கள். இது எனக்கு பெருமையாகவும் மகிழ்ச்சியாகவ்யும் இருக்கிறது. குஷ்பூ எனக்கு நல்ல தோழி. குஷ்பூ எவ்வளவு பெரிய நடிகை நம்முடன் இவ்வளவு சாதாரணமாக பழகுகிறார்களே என ஆச்சர்யமாக இருக்கும்” என்று மகிழ்ச்சி பொங்க கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக