சனி, 15 செப்டம்பர், 2012

மந்திரவாதி, சூனியக்காரர் போதிதர்மர் / அத்தியாயம் 8

மன்னன் வே சினத்துடன் வெளியேற, புன்னகையுடன் போதிதர்மர் மேற்கு திசை நோக்கிப் புறப்பட்டார். யாங்ஸி நதியைக் கடந்து புத்த பிக்குகளுக்கு திருப்தியாகத் திகழ்ந்த லியோயாங் என்ற இடத்துக்குச் செல்வதுதான் அவரது நோக்கம்.
யாங்ஸி நதி தென் சீனாவையே செழிப்பாக வைத்திருக்க உதவும் பெரும் நதி. இன்றும் கூட அது அப்படித்தான்.
அந்த நதியைக் கடக்க பல படகுகள் இருந்தன. அப்படி ஒரு படகில் ஏற போதிதர்மர் காலடி எடுத்து வைத்தார்.  அதற்குள் அங்கிருந்தவர்கள் கிண்டலடிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.   இறுதியில், போதிதர்மர் அப்படகில் ஏறவில்லை என்று சொல்லப்படுகிறது.
மக்கள் பேசியதனைத்தும் போதிதர்மர் காதிலும் விழுந்தது. படகில் ஏறப்போனவர் படகிலிருந்து தன் காலை கீழிறக்கினார். நேராகச் சென்று அங்கிருந்த புல் ஒன்றை முறித்தார். புல் என்றால் நம்மூர் அருகம்புல் இல்லை. அது சீனப் புல். சோளத்தட்டை அளவில் இருக்கும். அதனை ஆற்றில் மிதக்கவிட்டார். பிறகு, அந்தப் புல்லின் உதவியுடன் யாங்ஸி ஆற்றை மின்னல் வேகத்தில் கடந்தார். படகில் இருந்தவர்கள் அனைவரும் அந்தக் காட்சியை வாய்பிளந்து பார்த்தனர்.www.tamilpaper.com

காம்பே போன்றவர்கள் உண்மையில் அது புல் இல்லை என்றும், புல் போல் ஒடுக்கமான படகு என்றும் கூறுகின்றனர். தான்லின் போன்ற சீன ஆசிரியர்கள் ‘புல் போன்ற படகைத்தான் ’புல் என உருவகப்படுத்திக் கூறியிருக்கலாம் என்று கருதுகிறார்கள்.
அதுநாள்வரை பைத்தியக்காரராகவும் முரடராகவும் சீனர்களால் கருதப்பட்ட போதிதர்மர், இந்த நிகழ்வுக்குப் பின்னர் மந்திரவாதியாகவும் சூனியக்காரராகவும் பார்க்கப்பட்டார். இப்படியாக, லியோயாங் சென்றடைந்த போதிதர்மர் அங்கும் அழையா விருந்தாளியாகவே பார்க்கப்பட்டார். இனவெறி அங்கும் தலைவிரித்தாடியது.
இதன்பிறகு, தீவிரமாக யோசித்த போதிதர்மர் அங்கிருந்து சாங் மலை வழியே ஹெனான் மாநிலத்தில் இருந்த ஷாவோலின் மடத்துக்குச் செல்ல முடிவு கட்டினார். ஏனென்றால் ஷாவோலினில்தான் இந்தியாவிலிருந்து சீனா செல்லும் புத்தபிக்குகள் பெரும்பாலும் தங்குவர். அதனால் அங்கு இனத்துவேஷம் இருக்காது என போதிதர்மர் எண்ணியிருக்கலாம்.
சுற்றிலும் மலைகள், அடர்ந்த காடுகளுக்கு மத்தியில் ஷாவொலின் மடம் கம்பீரமாக அமைந்திருந்தது. போதிதர்மர் அதன் கதவுகளையும் தட்டினார். ஆனால் இவருக்கு முன்பாக இவரது புகழ் அங்கும் பரவியிருந்தது. குதர்க்கவாதியான அவரை உள்ளே விட்டால் மற்ற பிக்குகளின் தியானநிலை பாதிப்படையும் என்றும் கூறி போதிதர்மரை மடத்துக்கு உள்ளேவிட மறுத்துவிட்டனர்.
போதிதர்மர் எள்ளளவும் கலங்கவில்லை. ஷாவோலின் மடம் மலைப் பிரதேசத்தில் இருந்ததால் பல்வேறு மலைக் குகைகள் இருந்தன. அவர் கண்ணில் அங்கிருந்த குகையொன்று பட்டது. இறைவன் படைத்த இப்பரந்த உலகில் எனக்கா இடமில்லை எனக் கருதி அதே குகையில் தஞ்சமடைந்தார். உள்ளே சென்றவர் குகையின் ஒரு பக்கச் சுவற்றை வெறித்துப் பார்த்தவண்ணம் அமர்ந்தார்.
மகான்கள் வாழ்க்கையில் இதுபோன்ற தொடர் துன்பங்கள் என்பது இயல்பே. அத்துன்பத்திலும் அவர்கள் தம் கொள்கைகளை விட்டுக்கொடுக்காமல் இருக்கின்றனரா என்பதை இறைவன் சோதிப்பான் என்பர். சமணர் நெறியை விட்டொதுங்கிய புத்தரும், ரோமானியர்களால் துரத்தப்பட்ட ஏசுவும், விண் ஏற்றத்துக்கு முன் முஹம்மது நபியும், சார்புநிலைக் கோட்பாட்டை வெளிப்படுத்திய நிலையில் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனும், கம்யூனிச சித்தாந்தத்தை முன்வைத்த நிலையில் கார்ல் மார்க்ஸும் இவ்வகையான தொடர் சோதனைக்கு உள்ளாகி இருக்கிறார்கள். ஆனால், இச்சோதனைகளின் இறுதியில் அவர்களுக்கு கிடைத்தது என்னவோ மகத்தான வெற்றிதான். போதிதர்மருக்கும் வெற்றி கிட்டியது. அதுவும் மாபெரும் வெற்றி.
குகைக்குள் சென்றமர்ந்த போதிதர்மர் அதன் சுவற்றை வெறித்துப் பார்த்தபடி, நாட்கள், வாரங்கள், மாதங்களாக இடத்தை விட்டு நகராமல் அங்குமிங்கும் அசையாமல் அப்படியே வீற்றிருந்தார்.
போதிதர்மரை மடத்துக்குள் வரவிடாமல் விரட்டிய தினத்தன்று பார்த்ததுதான்; அதன்பிறகு பிக்குகள் யாரும் அவரைப் பார்க்கவில்லை. மற்றபடி மக்களின் கண்களிலும் அவர் தென்படவில்லை என்பதால் சீனா முழுவதும் போதிதர்மர் இறந்துவிட்டதாகவும், இந்தியாவுக்கே திரும்பிவிட்டதாகவும், பித்துப் பிடித்து வடக்கு மாகாணங்களில் அலைவதாகவும் விதவிதமான வதந்திகள் பரவின.
ஷாவோலின் மடத்தில் பாலுக்காக சில ஆடுகள் வளர்க்கப்பட்டன. ஒருநாள் மடத்திலிருந்து ஆடுகளை ஓட்டிக்கொண்டு ஒரு மாணவன் கிளம்பினான். ஒவ்வொரு பகுதியாக மேய்ந்து கொண்டே வருகையில், தற்செயலாக அந்த ஆடுகள் போதிதர்மர் இருந்த குகை நோக்கி வந்தன. மாணவன் வெளியில் நின்றிருக்க ஒரு சில ஆடுகள் மட்டும் நீர் தேடி அந்தக் குகைக்குள் சென்றன. சில குகைகளுக்குள் சுனை இருப்பது வழக்கம். உள்ளே சென்ற ஆடுகள் மிரண்டு போய் வெளியே ஓடிவந்தன.
ஆடுகள் மிரளும் அளவுக்கு குகையினுள் அப்படி என்னதான் இருக்கிறது என்று அறிய உள்ளே நுழைந்த மாணவனுக்கு தூக்கிவாரிப் போட்டது. உள்ளே சுவற்றை வெறித்த நிலையில் போதிதர்மர் அசைவின்றி அமர்ந்திருந்தார்.
மடத்துக்குச் சென்றபிறகும் போதிதர்மர் நினைவாகவே கிடந்த மாணவன் ஷாவோலினில் இருந்து கொஞ்சம் உணவும் நீரும் எடுத்துக்கொண்டு குகைக்குச்சென்றான். போதிதர்மர் முன் அதனை வைத்துவிட்டு சிறிது நேரம் அவரையே பார்த்துக்கொண்டிருந்தான். அவர் அசைவின்றி இருந்தார்.
ஷாவோலின் பிக்குகளிடம் இந்தச் செய்தியைச் சொன்னபோது அவர்கள் நம்பவில்லை. மாணவன் எதையோ கண்டு மிரண்டுபோய் இருக்கிறான் என்றும் போதிதர்மர் இறந்துவிட்டிருப்பார் என்றும் சொன்னார்கள். ஆனாலும் மாணவன் விடாப்பிடியாகக் கூறியதால், சென்று பார்த்துவிட்டுத்தான் வருவோமே என்று மாணவனுடன் புறப்பட்டு குகைக்குச் சென்றார்கள்.
அனைவரும் போதிதர்மரைப் பார்த்தார்கள். வியந்தார்கள். ஒரு மனிதன் இப்படி மாதக்கணக்கில், உணவு தண்ணீர் இல்லாமல் தவமிருக்க முடியுமா என்று எண்ணி அவர் மேல் மதிப்பு கொண்டார்கள். அன்றிலிருந்து ஷாவோலின் மடத்தில் வசித்த பிக்குக்கள் அவர் தவத்துக்கு இடையூறோ அபாயமோ ஏதும் நேராமல் காவல் புரிய ஆரம்பித்தனர்.
போதிதர்மர் குகையில் இருந்ததை எப்படி கண்டுபிடித்தனர் என்பதை விளக்கும் வேறு பல கதைகளும் உண்டு. ஆனால், மேற்கூறிய இக்கதையைதான் ஷாவோலின் பிக்குகள் நம்புகின்றனர்.
‘போதிதர்மர் ஒரே இடத்தில் பல மாதங்களாக அசைவேதும் இன்றி தவம் கிடக்கிறார்’ என்ற செய்தி மளமளவெனப் பரவியது. பைத்தியக்காரர், சூனியக்காரர், முரடர் எனக் கூறி அவரை ஒதுக்கிய மக்களுக்கு அவர் ஊண், உறக்கம் இன்றி தவமிருப்பது அதிசயமாகத் தெரிந்தது. ஒரு பிக்குக்கு இது சாத்தியமான செயலா என்று எண்ணி வியப்பில் ஆழ்ந்தனர். அவர் புகழ் சீனதேசம் முழுவதும் வெகுவிரைவில் பரவியது.
இந்நிலையில் போதிதர்மரின் புகழ் பரவக் காரணமாக இருந்த ஒரு நிகழ்வு ஷாவோலினில் இன்றும் நினைவு கூரப்படுகிறது.
போதிதர்மர் இப்படி அசாத்தியத் தவமிருக்கும் செய்தி, அவரை விரட்டியடித்த ‘வே’ மன்னனையும் சென்றடைந்தது. அடடா இத்தகைய தவசீலரை நாம் அறியாமையால் தவறவிட்டு விட்டோமே என மனம் நொந்தான். எப்படியாவது போதிதர்மரை அரண்மனைக்குக் கவர்ந்து வந்துவிட வேண்டும் என எண்ணினான்.
அவரது தளபதி தன் சேனையை அழைத்துக்கொண்டு ஷாவோலின் வந்தான். போதிதர்மர் குகைக்கு காவலாக இருந்த பிக்குகளையும் மக்களையும் அங்கிருந்து விரட்டிவிட்டு, தன் படைகளுடன் உள்ளே புகுந்தான் . மக்களும் பிக்குகளும் என்ன நிகழப்போகிறதோ என்றெண்ணி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.
உள்ளே நுழைந்த தளபதி தியானத்தில் அசையாதிருந்த போதிதர்மரை அழைத்துப் பார்த்தான், பதிலில்லை. தவத்தைக் கலைக்க எண்ணி அசைத்துப் பார்த்தான். முடியவில்லை. வேறுவழியில்லாமல் போதிதர்மரை குண்டுக்கட்டாகத் தூக்க முயற்சித்தான். போதிதர்மர் யானைக்கனம் கனத்தார். ஓர் அங்குலம்கூட அசைக்கமுடியவில்லை. பின்னர், குதிரையில் கயிற்றைக் கட்டி இழுத்துப் பார்த்தான். கயிறு அறுபட்டு குதிரைகளும் அவனும் விழுந்தனரே தவிர, போதிதர்மரை நகர்த்த முடியவில்லை. இன்னும் என்னென்னமோ செய்து பார்த்தான். எதுவும் பலன் அளித்ததாகத் தெரியவில்லை. தொங்கிய முகத்துடன் அரண்மனைக்கே திரும்பினான். அனைத்தையும் கேட்ட மன்னனுக்கு முகம் தொங்கிப்போனது.
இந்த நிகழ்வு சீனாவின் மூலை முடுக்கெல்லாம் பேசப்பட்டு போதிதர்மர் புகழை எங்கெங்கும் எதிரொலித்தது. போதிதர்மர் இருந்த ஷாவோலின் குகைப் பிரதேசம் சுற்றுலாத் தலம்போல் நிரம்பி வழிந்தது. பிக்குகளுக்கு விழி பிதுங்கியது. எப்பொழுதுதான் போதிதர்மர் எழுந்திருப்பார் என்ற ஆர்வம் அனைவருக்கும் இருந்தது.
இந்த நிகழ்வு போதிதர்மரை ஏதோ மாயாவி போல் காண்பிக்கிறது, இது நடந்திருக்க வாய்ப்பில்லை என்று நவீன வரலாற்றாசிரியர்கள் கருதுகிறார்கள். ஆனால், சீனர்கள் விடுவதாக இல்லை. பௌத்தத்தின் ‘சீ’ எனப்படும் சக்தியால் இது சாத்தியமே என்கின்றனர்.
காலம் அதன் போக்கில் ஓடிக்கொண்டிருந்தது. போதிதர்மர் அவர் போக்கில் அசைவின்றி அமர்ந்திருந்தார். குகைக்குள் புகுந்த போதிதர்மர், சுவற்றை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்து ஓர் ஆண்டு இரு ஆண்டல்ல ஒன்பது ஆண்டுகள் நிறைவடைந்து இருந்தன.
ஒன்பது ஆண்டுகள் போதிதர்மர் அசையாமல் அமர்ந்திருந்தார் என்பது சீனர்களின் கருத்து. ஆனால், இன்றைய நவீன வரலாற்று அறிஞர்கள் இதனை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர். இது சீனர்களின் கட்டுக்கதை என்கின்றனர். போதிதர்மர் அவ்வப்போது உணவுக்காகவும் பிற கடமைகளுக்காகவும் நிச்சயம் எழுந்திருக்கவேண்டும், ஒரே இடத்தில் ஒன்பது வருடம் அமர்வதெல்லாம் இயலாத காரியம் என்கின்றனர். ஆனால் சீனர்களின் போதிதர்ம புராணம் இப்படித்தான் என்கின்றது. சரி கதைக்கு வருவோம்.
இந்த நேரத்தில்தான் சீன கிராமம் ஒன்றில் வாழ்ந்து வந்த டாஸூ ஹூய்கீ (Dazu Huike) என்பவனுக்கு போதிதர்மர் பற்றித் தெரியவந்தது.  சிறு வயதில் இருந்தே தானும் புத்தபிக்குவாகி விழிப்படைய வேண்டும் என்று அவனுக்கு ஆசையிருந்தது. ஆனால், அவன் ஏழையாகவும், தீண்டத்தகாதவனாகவும் இருந்ததால் அவனது ஆசை நிறைவேறவில்லை. பிக்குகளும் பௌத்தப் பள்ளிகளும் அவனை ஏறெடுத்துக்கூட பார்க்கவில்லை. இப்போது அவனுக்கு, ‘நாம் ஏன் போதிதர்மரிடம் சென்று சீடனாகக் கூடாது’ என்று யோசனை எழுந்தது. அதன்படியே புறப்பட்டான். அவன் கிளம்பும் பொழுதே சீனாவில் பனிக்காலமும் ஆரம்பமாகியிருந்தது.
சில மாதப் பயணத்துக்குப் பிறகு ஹூய்கீ ஷாவோலினில் போதிதர்மர் இருந்த குகையை அடைந்தான். அவனுக்கு முன்பே அங்கு பலர் தாங்களும் போதிதர்மரின் சீடனாக வேண்டும் எனும் ஆசையில் அலைமோதினர். அவர்களுடன் சேர்ந்து ஹூய்கீயும் தன்னை சீடனாக ஏற்றுக்கொள்ளுமாறு போதிதர்மரிடம் வேண்டினான். மன்றாடினான். வழக்கம்போல் போதிதர்மரிடமிருந்து பதில் ஏதும் இல்லை. சுவற்றை வெறித்த நிலைதான். இதனால் கோபம்கொண்ட ஹூய்கீ போதிதர்மர் தன்னைச் சீடனாக ஏற்றுக்கொள்ளும்வரை அந்த இடத்தை விட்டு நகரப்போவதில்லை எனும் சூளுரையுடன் அக்குகை வாசலிலேயே அமர்ந்தான்.
சீனத்தில் வடதுருவப் பனி அதிகமாக வீசும் காலமும் தொடங்கியது. இந்த வட துருவப்பனி ஆர்டிக்கிலிருந்து ரஷ்யா, சைபீரியா ஊடாக சீனத்தை வந்தடையும். டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி ஆகிய மாதங்களில் அங்கே பனி கூரையைப் பிய்த்துக்கொண்டு கொட்டத் தொடங்கிவிடும்.
குகை வாசலிலேயே காத்திருந்த ஹூய்கீ அவ்வாறு வீசிய பனியில் விரைத்துக் கட்டையானான். உயிருக்கு போராடிக்கொண்டிருந்த நிலையில் ஷாவோலின் மடத்து பிக்குக்கள் அவனைக் காப்பாற்றினர். அந்த நிலையிலும்கூட போதிதர்மர் எழவில்லை. இதனால், பொறுமை இழந்த ஹூய்கீ எழுந்தான். குருவுக்கு எனது காணிக்கை என்று ஓங்கிச் சொன்னபடி, தனது வலக்கையை வெட்டி இடக்கையில் ஏந்தியவனாக போதிதர்மர் முன் சென்று மண்டியிட்டான்.
பாறையிலும் ஈரம் கசிந்தது. போதிதர்மர் தன் ஒன்பது வருட தவத்தை முடித்துக்கொண்டு கண்விழித்தார். ஹூய்கீயைத் தன் மாணவனாக ஏற்றுக்கொண்டார். அதன் பின்னர், ஷாவோலின் மடத்துக்குள் பிக்குகளால் வலியவந்து அழைத்துச் செல்லப்பட்டார். ‘தாங்கள் சொல்வதையே இனி நாங்கள் செய்வோம். எங்களுக்கு பௌத்தத்தை பெரிய மனது வைத்து உபதேசியுங்கள். தியானத்தை கற்றுத்தாருங்கள்’ என அவர்கள் போதிதர்மரிடம் மன்றாடினர்.
ஷாவோலின் மடத்துக்குள் காலடி வைத்ததும் போதிதர்மர் தனது முதல் ஆணையை பிறப்பித்தார். சம்பிரதாயங்களும் சடங்குகளும் புத்த மதத்துக்கு விரோதமானவை. விட்டொழியுங்கள்.
மேலும், கௌதமர் கண்ட பௌத்தம் புனித நூல்களைத் தாண்டியது என்றும் தேடலாலும் தியானத்தாலும் மெய்யறிதலாலும் அறியப்பட வேண்டியது என்றும் பிக்குகளுக்கு அவர் புரியவைத்தார். பிறகு, பௌதத்தின் தீபமாக, உயிராகக் கருதப்பட்ட தியானத்தை சீனர்களுக்கு அறிமுகப்படுத்த ஆயத்தமானார். அதற்கு முதல் தடையாக சீனர்களின் உடல் இருந்ததைக் கவனித்தார். நோஞ்சான்களாகக் காணப்பட்ட ஷாவோலின் பிக்குகளுக்கு தேகப்பயிற்சியிலிருந்து தன் பாடத்தைத் தொடங்கினார்.
போதிதர்மர் அறிமுகப்படுத்திய இந்த தேகப் பயிற்சிக்கு யிங் ஜிங் (Yijin Jing) என்று பெயர். இதுதான் இன்றைய யிங் ஜிங் குங்ஃபூவுக்கு முன்னோடி என ஷாவோலின் மடத்தில் கூறப்படுகிறது.
இப்படி சீனாவுக்குள் தேகப்பயிற்சியாக அறிமுகமாகி தற்காப்புக் கலையாக வளர்ந்தது தமிழகத்துக் களரி என்னும் கருத்தும் உள்ளது. அதேபோல், ஹூய்கீயின் வெட்டுப்பட்ட கையை போதிதர்மர் தான் கற்ற மருத்துவமுறையை வைத்து மீண்டும் பொருத்தினார் என்றும் குறிப்பிடப்படுகிறது. அதாவது பழந்தமிழர் மருத்துவ முறையை போதிதர்மர் பயன்படுத்தி சீனாவில் அதைப் பிரபலப்படுத்தினார் என்கிறார்கள். இதன் மூலம் வர்மப்புள்ளிகளை வைத்து மருத்துவம் பார்க்கும் பழந்தமிழர்முறைதான் சீனத்தில் அக்குபஞ்சர் என பரிணாம வளர்ச்சி அடைந்திருக்கும் என்ற கருத்தும் உருவாகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக