வெள்ளி, 21 செப்டம்பர், 2012

முகமது நபிகளின் கார்டூனை வெளியிட்ட பிரஞ்சு பத்திரிகை, தூதரகங்கள் மூடப்பட்டது

பாரீஸ்: நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தி எடுக்கப்பட்டுள்ள அமெரி்க்க திரைப்படத்தைக் கண்டித்து உலக முஸ்லிம்கள் போராட்டம் நடித்திக் கொண்டிருக்கையில் பிரான்ஸ் பத்திரிக்கை ஒன்று நபிகள் பற்றிய கேலிச் சி்த்திரங்களை வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்லாம் மதத்தையும், நபிகள் நாயகத்தையும் இழிவுபடுத்தி எடுக்கப்பட்ட அமெரிக்க திரைப்படத்தைக் கண்டித்து உலக முஸ்லிம்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பிரான்ஸ் பத்திரிக்கை ஒன்று நபிகள் நாயகத்தின் கேலிச் சித்தரங்களை வெளியிட்டுள்ளது. இது முஸ்லிம்களை கொதிப்படையச் செய்துள்ளது.
இந்த கேலிச் சித்திரங்கள் வெளியானதையடுத்து பிரான்ஸ் உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள தனது தூதரகங்கள், பள்ளிகளை இன்று மூடியுள்ளது. இந்நிலையில் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் கேலிச் சித்திரங்களைக் கண்டித்து போராட்டம் நடந்தது. பிரான்ஸிலும் முஸ்லிம்கள் போராட்டம் நடத்தக்கூடும் என்பதால் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தானில் உள்ள தூரகத்தை மூடிய ஆஸ்திரேலியா:
நபிகள் நாயகத்திற்கு எதிரான படத்தைக் கண்டித்து நடந்து வரும் போராட்டங்களையடுத்து பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள ஆஸ்திரேலிய தூதரகம் மூடப்பட்டுள்ளது. அங்கு பணியாற்றுபவர்கள் இன்று வெளியே எங்கும் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
நபிகள் நாயகத்தை இழிவுபடுத்திய இன்னசன்ஸ் ஆப் முஸ்லிம்ஸ் படம், பிரான்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள நபிகளைப் பற்றிய கேலிச் சித்திரங்களைக் கண்டித்து இன்று பாகிஸ்தானில் ஆயிரக்கணக்கானவர்கள் போராட்டம் நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாகிஸ்தானில் இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மக்கள் அமைதியான வழியில் போராட வேண்டும் என்று அந்நாட்டு அரசு வலியுறுத்தியுள்ளது.
பாகிஸ்தானில் உள்ள அனைத்து முக்கிய அரசியல் கட்சிகள், மத அமைப்புகள், வர்த்தக அமைப்புகள் ஆகியவை போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. இந்நிலையில் அங்குள்ள அமெரிக்க தூதரகத்திற்கு செல்ல முயன்ற 5,000 போராட்டக்காரர்களை நோக்கி போலீசார் கண்ணீர்ப் புகைகுண்டுகள் வீசினர். இதில் 50 பேர் காயமடைந்தனர். 12க்கும் மேற்பட்ட போலீஸ் அதிகாரிகளும் காயம் அடைந்தனர். போராட்டக்காரர்கள் போலீஸ் சோதனைச்சாவடிக்கு தீ வைத்தனர். இதையடுத்து ராணுவம் வந்து அவர்களை கலைந்து போகச் செய்தது.
இன்னசன்ஸ் ஆப் முஸ்லிம்ஸ் படத்தைக் கண்டித்து இதுவரை 20 நாடுகளில் நடந்த போராட்டங்களில் 30க்கும் மேற்பட்டோர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில் அமெரிக்கர்கள் யாரும் பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டாம் என்று அமெரிக்க அரசு அறிவுறுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக