ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2012

ஆதாமிண்ட மகன் அபு.. Oscar கிடைக்காமல் போனதால்


 இந்தப் படத்துக்கு ஆஸ்கர் விருது கிடைக்காமல் போனதால் இழப்பு இந்தப் படத்தை இயக்கியவருக்கு அல்ல.
அபு (நடிகர் சலீம் குமார்) ஒரு அத்தர் வியாபாரி. வயது அறுபது எழுபதுக்கு மேல் இருக்கும். துபாயில் இருந்து செண்ட்களும் பர்ஃப்யூம்களும் வந்து அத்தர் வியாபாரம் நசிவடைய ஆரம்பித்த பிறகும் அதிலேயே ஈடுபட்டு வருபவர்.அவருடைய மனைவி ஐசும்மா. வீட்டில் பசு வளர்த்து அதில் கிடைக்கும் பாலை விற்று சம்பாதிப்பவர். பசுவை உயிருள்ள மனிதரைப் போல் மதித்து நடத்தக்கூடியவர். அவர்களுக்கு சத்தார் என்று ஒரு மகன். அவன் துபாயில் மனைவி குழந்தைகளுடன் இருக்கிறான். ஆனால், ஏழைமையில் வாடும் பெற்றோரை ஒதுக்கித் தள்ளிவிட்டான். பேரக் குழந்தைகளைக் கூட அழைத்து வந்து காட்டியிருக்கவில்லை. முன் வாசலில் பலா மரம் நிற்கும் வீடொன்றில் வசித்து வருகிறார்கள் அபுவும் ஐசும். www.tamilpaper.net

அபுவுக்கு ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ளவேண்டும் என்பதுதான் வாழ்க்கையின் லட்சியமே. பணமுள்ளவர்களும் பலமுள்ளவர்களும் மட்டுமே ஹஜ் பயணம் செய்தால் போதும் என்று நபிகள் சொல்லியிருக்கிறார். என்றாலும் ஏழை அபுவுக்கு அந்தப் புனித மண்ணில் ஒரு தடவையாவது காலடி எடுத்துவைத்துவிடவேண்டும் என்று ஆசை.
அந்த வருட ஹஜ் யாத்திரைக்கான விண்ணப்பங்கள் கேட்டு ஹஜ் கமிட்டியினரின் விளம்பரம் வருகிறது. அந்த கமிட்டியின் மூலமாகப் போவதென்றால் இலவசமாகவே போய் வந்துவிடலாம். ஆனால், ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பிப்பார்கள். எல்லாரையும் அனுப்ப முடியாது. குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்துத்தான் அனுப்புவார்கள். எனவே, போக வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகமே. நாலைந்து தடவை ஹஜ் பயணம் மேற்கொண்டிருக்கும் செல்வந்தரான ஹாஜியார், தனக்குத் தெரிந்த அக்பர் டிராவல்ஸில் இருக்கும் அஸ்ரஃப் என்பவரைப் பார்க்கச் சொல்கிறார்.
அபு அந்த டிராவல்ஸில் போய்க் கேட்கும்போது, பாஸ்போர்ட் இருக்கிறதா என்று அஷ்ரஃப் கேட்கிறார். அபு திரு திருவென முழிக்கிறார். முதலில் அதை ஏற்பாடு செய்வோம் என்று சொல்லி தேவையான போட்டோக்கள், வோட்டர் ஐடி, வயதுக்கான சான்றிதழ் போன்றவற்றைக் கொண்டுவரச் சொல்கிறார். அபு எல்லாவற்றையும் எடுத்துக்கொடுக்கிறார். அதுவரை உண்டியலில் ஐம்பதும் நூறுமாகச் சேர்த்த பணத்தையும்கொண்டு கொடுக்கிறார். மீதிப்பணத்தை விமானத்தில் ஏறுவதற்கு முன்பாகக் கொடுத்தால் போதும் என்று அஷ்ரஃப் சொல்கிறார். சரி என்று சொல்லிவிட்டு அபு வீடு திரும்புகிறார்.
சில நாட்களுக்குப் பிறகு அபு பக்கத்து ஊருக்குப் போயிருக்கும் நேரத்தில் இரண்டு பெண் காவலர்கள் வந்து அபுவைப் பற்றிய தகவல்களை விசாரிக்கிறார்கள். அவருடைய மனைவி என்னமோ ஏதோ என்று பயந்துவிடுகிறார். அபு வீட்டுக்கு வந்ததும் முதல் வேலையாக அவரை காவல் நிலையத்துக்குப் போகச் சொல்கிறார். அபூவுக்கும் பயம் வருகிறது. துபாயில் இருக்கும் தன்னுடைய மகன் ஏதாவது குற்றம் செய்து மாட்டிக்கொண்டுவிட்டானோ என்று பதறுகிறார். நேராக பள்ளிக்கூடம் சென்று தன் நண்பரும் ஆசிரியருமான கோவிந்தனிடம் ஆலோசனை கேட்கிறார். பிரச்னை எதுவும் இருக்காது, பயப்படவேண்டாம் என்று அவர் ஆறுதல் சொல்கிறார். காவல் நிலையம் வரை துணைக்கு வாருங்கள் என்று அபு அவரை அழைத்துச் செல்கிறார். அங்கு காவலர் அபுவை நிற்க வைத்து விசாரிக்கிறார். என்ன வேலை பார்க்கிறீர்கள்? வீட்டில் யாரெல்லாம் இருக்கிறார்கள்? இதற்கு முன் துபாய் போயிருக்கிறீர்களா? போலீஸ் கேஸ் எதிலாவது சிக்கியிருக்கிறீர்களா? என்று சரமாரியாக விசாரிக்கிறார். அபு பயந்தபடியே எல்லாவற்றையும் சொல்கிறார்.
விஷயம் என்னவென்றால், பாஸ்போர்ட் கேட்டு அபு விண்ணப்பித்திருந்தால் அது தொடர்பாக காவலர்கள் விசாரிக்க வந்திருக்கிறார்கள். அது தெரியாமல் ஐசும் அபுவும் பயந்துபோய்விட்டிருக்கிறார்கள். ஒருவழியாக, உண்மை தெரிந்ததும் அபுவுக்கு நிம்மதி பிறக்கிறது. பணத்துக்கான ஏற்பாடுகளை ஆரம்பிக்கிறார். அந்த ஊரில் பெரிய மர ஆலை வைத்திருக்கும் ஜான்சனிடம் சென்று ஹஜ் யாத்திரை செய்யப்போகும் விவரத்தைச் சொல்லி அதற்குப் பணம் தேவைப்படுவதால் தன்னுடைய வீட்டில் இருக்கும் பலா மரத்தை அறுத்து எடுத்துக்கொள்ளும்படிச் சொல்கிறார்.
ஓரிரு வருடங்களுக்கு முன்பாக ஜான்சன் அந்த மரத்தை அறுத்து எடுத்துக் கொள்ளவா என்று கேட்டிருப்பார். அவசியம் ஏற்படும்போது நானே சொல்கிறேனென்று அபு சொல்லியிருப்பார். அந்த அவசியம் ஹஜ் பயணம்தான். ஜான்சன் அந்த மரத்தை ஏற்கெனவே பார்த்திருக்கிறார் என்பதால் 60,000 ரூபாய் தர சம்மதித்து பத்தாயிரம் அட்வான்ஸ் கொடுப்பார். ஹஜ் பயணத்துக்குப் புறப்படுவதற்கு இரண்டு நாட்கள் முன்பாக வந்து மீதிப் பணத்தை வாங்கிக் கொள்ளச் சொல்வார். அபுவும் நான் நினைத்ததைவிட அதிக பணம் தர முன்வந்திருக்கிறீர்கள் நன்றி என்று சொல்லிப் புறப்படுவார்.
தன் மனைவியிடம் எஞ்சியிருக்கும் நகைகளை விற்று முப்பதாயிரம் ரூபாய் தேற்றுவார். அதன் பிறகும் பத்து – பதினைந்தாயிரம் ரூபாய் தேவைப்படும். என்ன செய்யலாம் என்று யோசிக்கும்போது பசுமாட்டின் ஞாபகம் வரும். உயிருக்கு உயிராக நேசித்த மாட்டையும் கன்றையும் விற்பார். ஐசும்மாவுக்கு அவற்றை விற்க நேர்ந்ததில் பெரும் துயரம். வேறு வழியில்லாமல் கண்ணீர் மல்க பசுவையும் கன்றையும் வண்டியில் ஏற்றி அனுப்புவார்கள். ஒருவழியாக பணப் பிரச்னை தீர்ந்துவிடும்.
இன்று போக்குவரத்து அதிகரித்திருக்கும் நிலையில் புனிதப் பயணங்களுக்குப் போய்விட்டு எளிதில் திரும்பிவிட முடிகிறது. முன்பெல்லாம் அது முடிந்திருக்காது. எனவே, ஹஜ் பயணம் செய்பவர்கள், திரும்பி வருவது என்பது உறுதியில்லை. எனவே, யாருக்காவது ஏதாவது தவறு செய்திருந்தால் அவர்களிடம் மன்னிப்புக் கேட்டு அவர்களுடைய அனுமதி பெற்றுத்தான் ஹஜ் பயணத்தை மேற்கொள்ளவேண்டும் என்று ஒரு நியதி இருக்கிறது. அதன்படி அபு கடந்த காலத்தில் யாருக்காவது ஏதேனும் கெடுதல் செய்திருக்கிறோமா என்று யோசித்துப் பார்ப்பார்.
ஏழெட்டு வருடங்கள் முன்பாக பக்கத்து வீட்டில் இருந்த சுலைமான் என்பவருடன் வேலிப் பிரச்னை தொடர்பாக சண்டை ஏற்பட்டிருக்கும். அது வெட்டு குத்து வரை போயிருந்திருக்கும். அந்த சுலைமான் இப்போது வேறு ஊரில் வசித்துவந்திருப்பார். அவருடைய முகவரியை விசாரித்துக் கொண்டு அவருடைய அனுமதி பெற்றுவர அபுவும் ஐசும்மாவும் புறப்படுவார்கள். வீட்டுக்குப் போவதற்கு முன் ஒரு கிலோ பழமும் பிஸ்கட் பொட்டலமும் வாங்கிக் கொள்வார்கள். சுலைமான் இப்போது தன்னைஎப்படி வரவேற்பாரோ என்ற பயத்திலேயே போவார்கள்.
அங்கு போய்ப் பார்த்தால் அவர்களுக்கு பெரிய அதிர்ச்சி காத்திருக்கும். சுலைமான் ஒரு விபத்தில் சிக்கி படுத்த படுக்கையாகக் கிடப்பார். சாலையில் நடந்து செல்லும்போது, கார் சக்கரத்தில் சிக்கிய கல் ஒன்று தெறித்து இவருடைய தலையில் பட்டு இரண்டு மாதம் ஆளை முடக்கிப் போட்டிருக்கும். அந்த விபத்தில் இருந்து மீண்ட பிறகும் எந்த வேலையும் செய்ய முடியாமல் படுத்த படுக்கையாகக் கிடப்பார். அபு ஹஜ் பயணம் போகவிருப்பதையும் தான் ஏதாவது பிழையாகப் பேசியிருந்தால் மன்னித்துவிடும்படியும் கேட்பார்.
சுலைமானோ அழுதபடியே, நீங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை. உங்களுடைய நிலத்தில்அரை செண்ட் பகுதியை நான்தான் வம்படியாகக் சண்டைபோட்டு பறித்துவிட்டிருக்கிறேன். நான் எத்தனையோ இதுபோல் பல தவறுகள் செய்திருக்கிறேன். கடவுள் எனக்கு தக்க தண்டனை கொடுத்துவிட்டிருக்கிறார். ஒருவகையில் என்னைஅந்த விபத்தில் சாகாமல் அல்லா காப்பாற்றியதே உங்களிடம் மன்னிப்பு கேட்கத்தான் போலிருக்கிறது. நான் அன்று இறந்து போயிருந்தால் நீங்கள் என்னிடம் மன்னிப்பு கேட்க முடியாமல் போய்விட்டதே என்ற கவலையிலேயே அல்லவா ஹஜ் போயிருப்பீர்கள். கடவுள் உங்களுக்காகத்தான் என்னை இதுவரை காப்பாற்றியிருக்கிறார் என்று கண் கலங்குவார். விடைபெறும் முன் தனக்காகவும் அல்லாவிடம் பிரார்த்திக்கும்படிக் கேட்டுக்கொள்வார். எழுந்து நடக்க வேண்டும் என்ற ஆசையெல்லாம் இல்லை. யாருக்கும் இனியும் பாரமாக இருக்க வேண்டாம். என்னை சீக்கிரம் தன்னிடம் அழைத்துக் கொள்ளும்படி வேண்டிக் கொள்ளுங்கள் என்று கேட்டுக்கொள்வார். அப்படியெல்லாம் சொல்லக்கூடாதுஎன்று கண் கலங்கியபடியே அபு அவரைக் கட்டித்தழுவி ஆறுதல் சொல்வார்.
அபு ஒவ்வொருவரிடமாக விடை பெற்றுக் கொண்டு ஹஜ் பயணத்துக்கு தயாராவார். தனது நண்பர் கோவிந்தனிடம் சென்று விடைபெறுவார். நீங்கள் யாருக்கும் எந்த கெடுதலும் செய்ததே இல்லையே… என்று சொல்லும் கோவிந்தன், ஒரு மனிதன் தெய்வத்தின் சன்னதியில்தான் மிகவும் சுயநலம் மிகுந்தவனாக இருப்பான். தனக்கான தேவைகளைப் பட்டியலிட்டபடி இருக்கும் அந்த நேரத்தில் எனக்காகவும் பிரார்த்தித்துக் கொள்ளுங்கள் என்று நெகிழ்ச்சியுடன் கேட்பார். அபுவும் அவரைக் கட்டித் தழுவியபடி அப்படியே வேண்டிக் கொள்வதாகச் சொல்லி விடைபெறுவார்.
ஹஜ் பயணத்துக்கான நாள் நெருங்கும். டிராவல்ஸில் என்னென்ன கொண்டு செல்லலாம்… எங்கு எப்படி வரவேண்டும் என்பதையெல்லாம் சொல்வார்கள். அபுவும் ஐசும்மாவும் தேவையானவற்றையெல்லாம் வாங்கிக் கொண்டு வீடு திரும்புவார்கள். வழியில் ஒருவர் ஜான்சன் உங்களைச் சந்திக்க வரும்படி சொன்னார் என்று அபுவிடம் சொல்லிவிட்டுச் செல்வார். அபுவும் நேராக ஜான்சனைப் பார்க்கச் செல்வார்.அங்கு அவருக்கு ஒரு அதிர்ச்சி காத்திருக்கும்.
அந்தப் பலா மரம் நன்கு பெரிதாக வளர்ந்திருந்தாலும் உள்ளூர பொக்காக இருந்திருக்கிறது. அதை வெறும் விறகுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும். அறுபதாயிரம் ரூபாய் கொடுத்து வாங்கத் தகுந்தது அல்ல. ஜான்சன் இந்த விஷயத்தை அபுவிடம் சொல்வார். அபு ஒரு நல்ல காரியத்துக்காகத்தான் மரத்தை விற்றிருக்கிறார் என்பதால், ஜான்சன் சொன்ன தொகையைக் கொடுத்துவிடுவார். ஆனால், அபுவுக்கு அது தவறு என்று தோன்றுகிறது. வெறும் விறகாக மட்டும் பயன்படப்போகும் மரத்துக்கு பத்தாயிரமே அதிகம் என்று சொல்லி அட்வான்ஸ் பணமே போதும். இந்தப் பணம் வேண்டாமென்று ஜான்சன் கொடுத்த ஐம்பதாயிரத்தைத் திருப்பிக் கொடுத்துவிடுவார்.
நான் பெரிய மர வியாபாரி. இந்த மரத்தை வாங்கியதில் வரும் நஷ்டத்தை என்னால் சமாளித்துக் கொள்ளமுடியும். நீங்கள் நல்லபடியாக ஹஜ் போய்விட்டு வாருங்கள். மற்றதைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று ஜான்சன் சொல்வார். ஆனால், அபுவோ கடன் வாங்கி ஹஜ் யாத்திரை போகக்கூடாது என்று சொல்லி மறுத்துவிடுவார்.
அந்தப் பணம் இல்லையென்றால் ஹஜ் யாத்திரை போக முடியாது என்பது அபுவுக்குப் புரிந்துவிடுகிறது. மிகுந்த வருத்தத்துடன் டிராவல்ஸில் சென்று விஷயத்தைச் சொல்வார். டிராவல்ஸின் நிர்வாகி அஷ்ரஃப், பணம் இல்லை என்பதால் புனித யாத்திரை போகாமல் முடங்க வேண்டாம். நாங்கள் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானோரை அனுப்புகிறோம். ஐம்பதாயிரம் ரூபாயென்பது எங்களுக்குப் பெரிய தொகை அல்ல. பயணத்துக்கான ஏற்பாடுகளைச் செய்யுங்கள் என்று சொல்வார். அபுவோ நாங்கள் கஷ்டப் பட்டுச் சேர்த்த பணத்தில் போகவேண்டும். அதுதான் எங்களுக்கு நல்லது என்று சொல்லி அந்த உதவியையும் மறுத்துவிடுவார்.
என் அப்பா அம்மா மிகவும் ஏழையாக இருந்தனர். அவர்களுக்கு ஹஜ் போக வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால், அப்போது எங்களிடம் பணம் இருந்திருக்கவில்லை. இப்போது என்னிடம் ஏராளமான பணம் இருக்கிறது. ஆனால், என் அப்பா அம்மா உயிருடன் இல்லை. உங்களை என் அப்பா அம்மாவாக நினைத்துக் கேட்டுக் கொள்கிறேன். புனிதப் பயணத்தை நிறுத்த வேண்டாம் என்று அஷ்ரஃப் கேட்டுக் கொள்வார்.
உங்கள் அப்பா, அம்மாவின் இடத்தில் நாங்கள் சென்றால் அது எங்களுடைய ஹஜ் பயணம் ஆகாது. உங்கள் அப்பா அம்மாவிம் ஹஜ் பயணமாகத்தான் ஆகும். எனவே, அது வேண்டாம். உங்க அப்பா அம்மா ஹஜ் பயணம் போகவில்லையே என்று கலங்க வேண்டாம். உங்களை மாதிரி ஒரு நல்ல மகனைப் பெற்றெடுத்தது 100 ஹஜ் பயணம் செய்ததற்குச் சமம் என்று சொல்லி அந்தப் பணத்தை மறுத்துவிடுவார். அஷ்ரஃபும் வேறு என்ன செய்வது என்று தெரியாமல் அவர் சொல்வதை ஏற்றுக் கொள்வார். அல்லாவின் அனுமதி இருந்தால்தான் ஹஜ் பயணம் செய்ய முடியும். எங்களுக்கு இந்த வருடம் அந்தக் கொடுப்பினை இல்லை போலிருக்கிறது என்று சொல்லிவிட்டு சோகமாக வீடு திரும்புவார் அபு.
அபு-ஐசும்மாவின் ஹஜ் பயணம் முடங்கிய செய்தி கேள்விப்பட்டதும் பள்ளி ஆசிரியரான கோவிந்தன் அன்று இரவு அபுவின் வீட்டுக்கு வருவார். தன்னிடம் இருக்கும் ஐம்பதினாயிரம் ரூபாயை எடுத்துக் கொடுத்து, இதை வைத்துக் கொண்டு புனித யாத்திரை செய்து வாருங்கள் என்று சொல்வார். அபுவோ அவருடைய உதவியைப் பார்த்து கண்கலங்குவார். சொந்த மகன் கூட ஒதுக்கித் தள்ளிய எங்களுக்கு ஒரு சகோதரனைப் போல் வந்து நீங்கள் செய்யும் இந்த உதவி மிகவும் பெரியது. ஆனால், ரத்த பந்தங்களிடமிருந்து மட்டுமே பண உதவி பெற்றுக் கொள்ளலாம். மற்றவர்களிடம் வாங்கிய பணத்தில் ஹஜ் பயணம் செய்யக்கூடாது. எனவே, இந்தப் பணத்தை நான் பெற்றுக்கொள்ளமுடியாது என்று மறுத்துவிடுவார்.
இப்போதுதானே என்னை சகோதரன் என்று அழைத்தீர்கள். ஒரு சகோதரன் கொடுத்த பணமாக இதை வாங்கிக் கொள்ளுங்கள் என்று கோவிந்தன் சொல்வார். நான் இந்தப் பணத்தை வாங்கிக் கொள்ளவில்லையென்றால் உங்கள் மனம் புண்படும். அதற்காக நான் இதை வாங்கிக் கொள்ளலாம். ஆனால், அல்லாவின் விதிகள் இதை ஏற்றுக் கொள்ளாது. தவறாக நினைக்காதீர்கள் என்று அபு சொல்லிவிடுவார்.
ஐசும்மாவும் பயணத்தை முடக்காமல் இருக்க பல வழிகள் சொல்வார். வீட்டையும் நிலத்தையும் விற்றுவிட்டு போய்வரலாம் என்று சொல்வார். மெக்காவில் வைத்து ஒருவேளை என் உயிர் பிரிந்தாலும் பிரிந்துவிடலாம். அதன் பிறகு நீ தனியாக வீடு வாசல் இல்லாமல் கஷ்டப்படவேண்டியிருக்கும். அது வேண்டாம் என்று அபு சொல்வார். நம் மகனிடம் பணம் கேட்டுப் பார்ப்போமே என்று ஐசும்மா சொல்வார். பெற்றெடுப்பதால் மட்டுமே அப்பா மகன் உறவு உருவாகிவிடுவதில்லை என்று சொல்லி சோகத்தை முழுங்கிக் கொள்வார். அப்படியானால், நீங்கள் மட்டுமாவது போய் வாருங்கள். உங்களுடைய வாழ்நாள் கனவு அல்லவா இது என்று ஐசும்மா சொல்வார். உன் கையைப் பிடித்தபடி புனித மண்ணில் காலடி எடுத்து வைப்பதாகத்தான் கனவு கண்டிருக்கிறேன். நீ இல்லாமல் போகமாட்டேன். நம்மை அல்லா எப்போது அழைக்கிறாரோ அப்போது போய்க்கொள்வோம் என்று பெருமூச்சுவிட்டபடியே சொல்வார் அபு.
அப்படியாக, அபு-ஐசும்மாவின் புனிதப் பயணம் தடைப்பட்டுவிடும். ஹஜ் பெருநாளின் இறுதி நாளின்போது அபுவும் ஐசும்மாவும் அதிகாலையில் படுக்கையில் படுத்தபடி நினைத்துப் பார்ப்பார்கள். இப்போது மெக்கா மைதானம் மக்கள் கடல்போல் குழுமியிருப்பார்கள். நிறத்தாலும் மொழியலும் தேசத்தாலும் பிரிக்கப்பட்ட லட்சக்கணக்கான மக்கள் ஒரே நிற உடை அணிந்து ஒரே சிந்தனையுடன் கூடித் தொழுது கொண்டிருப்பார்கள். நாமும் அந்தக் கூட்டத்தில் இருந்திருக்க வேண்டியவர்கள்தான் என்று மனக் கண்ணில் அந்த சித்திரத்தைத்தீட்டிக் கொள்வார்கள். நாம் ஏதோ ஒரு தவறு செய்துவிட்டிருக்கிறோம். அதனால்தான் புனிதப் பயணம் மேற்கொள்ள முடியாமல் போயிருக்கிறது. ஒருவேளை நாம் பலா மரத்தை வெட்டியது அல்லாவுக்குப் பிடிக்கவில்லை போலிருக்கிறது. அதனால்தான் இப்படி நடந்துவிட்டது என்று மனத்தைத் தேற்றிக் கொள்வார் அபு.
அதிகாலை பாங்கு ஒலி பக்கத்து மசூதியில் இருந்து கேட்கும். எழுந்து குளிப்பவர், செய்த தவறுக்குப் பிராயச்சித்தமாக ஒரு பலா மரக் கன்றை நட்டு நீர் ஊற்றிவிட்டு மசூதிக்குச் செல்வார்.
அதோடு படம் முடியும்.
***
இந்தப் படத்தில் வரும் மனிதர்கள் அனைவரும் மிகவும் நல்லவர்கள். படத்தில் இடம்பெறும் ஒரே ஒரு கெட்ட நபர், கதாநாயகன் அபுவின் மகன் சத்தார் மட்டுமே. முழுக்கவும் லட்சியவாத நோக்கில் படைக்கப்பட்ட கதாபாத்திரங்கள்போல் தோன்றினாலும் இத்தகைய நல்லவர்கள் இந்த உலகில் வாழத்தான் செய்கிறார்கள். இப்படியான மனிதர்கள் பழங்காலத்தில் வேண்டுமானால் இருந்திருக்கலாம். இப்போது அனைவரும் சுய நலம் மிகுந்தவர்களாக மாறிவிட்டனர் என்று ஒருவர் சொல்லக்கூடும். என்றாலும் எக்காலத்திலும் வாழ வேண்டியவர்கள் அவர்கள் என்ற வகையில் அவர்களை வைத்து திரைக்கதை எழுதிய சலீம் அஹமது உண்மையிலேயே பாராட்டத் தகுந்தவர்தான். படத்தின் வசனம், இயக்கம் தயாரிப்பும் கூட அவர்தான்.
இந்தப் படத்தில் இருக்கும் நல்ல அம்சங்களைப் பட்டியலிடுவதென்றால், அது முன் வைக்கும் மத ஒற்றுமையில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். கதாநாயகனான அபு ஹஜ் யாத்திரை செல்லவேண்டும் என்று நினைக்கிறார். அவருக்குப் பண நெருக்கடி வரும்போது உதவி செய்ய முன்வருபவர்கள் கிறிஸ்தவரான ஜான்சன், இந்துவான கோவிந்தன். இன்றும் எளிய மனிதர்கள் இப்படியான நட்புறவுடன்தான் இருக்கிறார்கள். ஊடகங்களும் அறிவுஜீவிகளும் உருவாக்கிக் காட்டும் கெட்ட இந்தியாவுக்கு மாற்றாக ஒரு கலைஞன் முன்வைத்திருக்கும் எளிமையான, உண்மையான, அழுத்தமான சித்திரம்தான் இந்தப் படம். பெரும்பாலான நதிகளில் சாக்கடை கலந்துவிட்டிருக்கின்றன. என்றாலும் தூய நீரோடைகளும் பாய்ந்து கொண்டுதானே இருக்கின்றன.
சமய நல்லிணக்கம் மட்டுமே முன்னிறுத்தப்படாமல் பிற உயிர்கள் மீதான அன்பும் படத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. ஹஜ் பயணத்துக்காக பலா மரத்தை வெட்டுகிறார். பசுவையும் கன்றையும் விற்கிறார். கடைசியில் தன் தவறை உணர்ந்து பசுவை வாங்க முடிவு செய்கிறார். பலா மரக்கன்றை நடுகிறார். ஒரு கவிதையைப் போல் படம் முடிகிறது.
பொதுவாக, மலையாளப் படங்களில் நிலவியல் சித்திரமானது அற்புதமாகக் காட்சிப்படுத்தப்படும். டிபிக்கல் மலையாளத்தன்மை கொண்ட இடங்களைத் தேடித் தேடி படம் பிடிப்பார்கள். தமிழில் கிராமங்கள் என்று காட்டப்படுவதில் துளியும் தமிழ் தன்மையே இருக்காது. போதாதற்கு, மதுரை கிராமத்தை சென்னையில் உருவாக்குகிறேன் என்ற அசட்டு வீறாப்புகள் வேறு இடம்பெறும். இந்தப் படத்தில் தோப்பும் துரவுமான நாயகனின் வீடு, அதில் சமையலறைக்கு அருகில் இருக்கும் கிணறு, மரத்தால் கட்டப்பட்ட டீக்கடை, தபால் அலுவலகம் (ஒவ்வொரு பலகையாக எடுத்து வைத்துத் திறக்கப்படும் சிறிய அலுவலகம்) என ஒவ்வொன்றும் நூறு சதவிகிதம் மலையாளத் தன்மையைக் கொண்டவையாக இடம்பெற்றிருக்கின்றன.
கேரளாவின் தனித்தன்மையான மழையும் மழை சார்ந்த காலத்தையும் கொண்ட க்ளைமேட்டிலேயே படம்முழுவதும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
அபு, கையில் கிடைக்கும் நயா பைசாவைக் கூட வீணடிக்காமல் ஹஜ் பயணத்துக்காகச் சேர்த்துவருகிறார் என்பது போகிற போக்கில் இரண்டு மூன்று காட்சிகளில் காட்டப்படுகிறது. மதிய நேரத்தில் பக்கத்தில் அமர்ந்திருப்பவர்கள் இலை போட்டு சாப்பாடு சாப்பிட்டுக் கொண்டிருக்க அபுவோ ஒரு வடையும் கறுப்புத் தேநீரும் அருந்துகிறார். இன்னொரு காட்சியில் மிகுந்த தாகம் எடுக்கிறது. கூல் டிரிங்க்ஸ் கடைக்கு அருகில் செல்பவர் சட்டென்று மனதை மாற்றிக் கொண்டு அருகில் இருக்கும் கிணற்றில் இருந்து நீர் இறைத்துக் குடித்து தாகத்தைப் போக்கிக் கொள்கிறார். இப்படியாக வசனங்களே இல்லாமல் விஷயங்கள் மிக எளிமையான காட்சிகளின் மூலம் விவரிக்கப்படுகின்றன.
சிலருக்கு பயணங்கள் ஒத்துக்கொள்ளாது. வாந்தி வந்துவிடும். படத்தில் வரும் ஐசும்மாவுக்கும் அப்படியான உடல்வாகுதான். அவர் பிரயாணம் செய்யும்போதெல்லாம் கையில் எலுமிச்சம்பழத்தை வைத்துக் கொண்டு முகர்ந்து பார்த்தபடியே வருவார். இதுபோன்ற சித்திரிப்புகள் கதாபாத்திரங்களை நமக்கு நெருக்கமாகக் கொண்டுவந்து படத்தோடு நம்மைஒன்றச் செய்துவிடுகின்றன.
ஒரு ஃபிரேமில் ஓரிரு விநாடிகளில் கடந்து போகும் நபர்கள் கூட கேரளத்தின் தனித்தன்மையைப் பிரதிபலிப்பவர்களாக இருக்கிறார்கள். மரத்தடியில் உட்கார்ந்து குடை ரிப்பேர் செய்பவர், அவரைக் கடந்து செல்லும் பூச்சி மருந்து அடிப்பவர், வாழைக் குலையைத் தோளில் போட்டுக் கொண்டு செல்பவர், முஸ்லீம் ஹோட்டலில் இருந்து காவி வேஷ்டிகட்டியபடி வெளியே செல்லும் இளைஞர் (கேரளாவில் காவி வேஷ்டி சட்டை என்பது இந்து அடையாளம் அல்ல. அது கேரள தேசிய உடை), வெட்டிப் போடப்பட்டிருக்கும் மரத்தைச் சுற்றி ஒரு சிறிய வழியை உருவாக்கிக் கொண்டு செல்லும் மீன் வியாபாரி என அனைத்துமே மலையாள வாசம் கமழும் ஒன்றாகவே இடம்பெற்றிருக்கிறது.
மரத்தடியில் நாயகன் தன் பால்ய கால நண்பரோடு பேசும் சாதாரணப் பேச்சு ஒரு மாபெரும் கால மாற்றத்தை நாலே வார்த்தைகளில் வெளிப்படுத்திவிடுகிறது. அபுவும் குடை ரிப்பேர் செய்யும் அவருடைய பள்ளி நண்பரும் பழங்காலத்திலேயே தங்கிவிட்டவர்களாக இருக்கிறார்கள். அவர்களுடன் படித்த இன்னொருவர் சைக்கிளில் பிஸ்கெட் எடுத்துக் கொண்டு கடை கடையாகப் போட்டவர், இப்போது டவுனில் எட்டு பேக்கரிகள் ஆரம்பித்து பெரும் செல்வந்தராகிவிட்டிருக்கிறார். அவருடைய கார் சேற்றை வாரி இறைத்தபடி தன் முன்பாகக் கடந்து சென்றதை வியந்து பார்த்திருக்கிறேன் என்று எந்தவித கசப்பும் இல்லாமல் காலத்தின் மாற்றத்தைப் பதிவு செய்கிறார் அபுவின் நண்பர்.
அதுபோல் படத்துக்கு மிகப் பெரிய பலம் வசனங்கள்தான். மிகவும் எளிய வரிகளில் மிகப் பெரிய விஷயங்களைத் தெரிவித்துவிடுகின்றன.
செல்வந்தரான ஹாஜியார் துபாயில் இருக்கும் காசிம் என்பவரிடம் தொலைபேசியில் பேசுவதாக ஒரு காட்சி வரும். இங்கு வேலைகள் எல்லாம் நாம் நினைப்பதுபோல் நடக்காது. தொழிலாளிகள் என்ன நினைக்கிறார்களோ அதுபோல்தான் நடக்கும் என்று சொல்வார். கேரளத்தின் சமூக யதார்த்தம் இந்த ஒரு வசனத்தில் போகிற போக்கில் தொட்டுக்காட்டப்படுவிடும்.
இன்னொரு காட்சியில் டீக்கடை வைத்திருக்கும் ஹைதர், காவல்துறை அதிகாரி ஒருவரின் வீட்டுக்கு வழி சொல்லும்போது, நம்ம ரத்த சாட்சி சுதாரனின் வீட்டுக்கு பக்கத்தில்தான் காவலரின் வீடு என்று சொல்வார். வெடிகுண்டு தயாரிக்கும் நேரத்தில் அது வெடித்து இறந்து உயிர் தியாகம் செய்தவராக அந்த சுதாகரன் குறிப்பிடப்படுவார். படத்தின் துணைக்கதாபாத்திரம் வழியாகப் பேசப்படும் ஒரு வசனம் கூட அந்த மண்ணின் நிஜ ரூபத்தை தொட்டுக்காட்டிவிடுகிறது.
ஒரு வசனம் விஷயத்தின் பல்வேறு அம்சங்களைத் தொட்டுக்காட்டும்போதுதான் அது வாழ்க்கைக்கு நெருக்கமானதாக ஆகும். இல்லையென்றால் அது வெறும் கோட்பாட்டு வாந்தியாக முடிந்துவிடும். குடை ரிப்பேர் செய்பவர் ஒரு காட்சியில் தன் மகளுக்கு புகுந்த வீட்டில் நடக்கும் சில கொடுமைகள் பற்றிச் சொல்வார். திருமணத்துக்கு போடுவதாகச் சொல்லியிருந்த நகையில் கொஞ்சம் பாக்கி இருக்கிறது. வரதட்சணைப் பணத்திலும் கொஞ்சம் தரவேண்டியிருக்கிறது. அதைக் கேட்டு துன்புறுத்துகிறார்கள் போலிருக்கிறது என்று சொல்வார். இதோடு நிறுத்தியிருந்தால் இது வெறும் ஆணாதிக்க கோட்பாட்டு வசனமாக முடிந்துவிட்டிருக்கும். என் மகளே பணத்தைக் கறப்பதற்காகச் செய்யும் தந்திரமாகக் கூட இருக்கலாம் என்று இன்னொரு கோணத்தையும் சேர்த்துச் சொல்வார். இது போன்றவையே படத்தை வாழ்க்கைக்கு நெருக்கமாகக் கொண்டுவந்து நிறுத்தும்.
அதுபோல் படத்தில் இடம்பெறும் உஸ்தாத் என்ற கதாபாத்திரம். ஒருவகையான சூஃபித்தன்மையுடன் மத அதிகார மையத்தை எதிர்க்கும் ஒருவராக படத்தில் சித்திரிக்கப்பட்டிருக்கிறார். தினமும் ஐந்து நேரம் தொழுவது உண்டு என்றாலும் அவர் மசூதிக்கு வந்து தொழமாட்டார். பரந்த வெளியில் இறைவனை நேரடியாகத் தொழுவார். இறைவன் அவருடன் நேரடியாகப் பேசுவார். மக்கள் அவரைத் தேடி வந்து தங்கள் குறைகளைச் சொல்லி பரிகாரம் கேட்டுச் செல்வார்கள். மன நோய் பிடித்தவர்களை குணப்படுத்துவார். காணாமல் போனவர்களைக் கண்டுபிடித்துக் கொடுப்பார். ஐம்பது அடி ஆழத்தில் கிணற்றில் போடப்பட்டுக் கிடந்த ஓர் விக்கிரகத்தைக்கூட கண்டுபிடித்துச் சொல்லியிருப்பார். அவருடைய கையால் பணம் வாங்கி தொழிலை ஆரம்பித்த ஜான்சன் மிகப் பெரும் செல்வந்தராக ஆகியிருப்பார். இப்படியாக அந்த உஸ்தாத் ஒரு சித்தர் போன்ற சக்தி கொண்டவராக படத்தில் இடம்பெறுகிறார்.
ஆனால், அவர் இறந்ததும் எந்த மத அதிகார மையத்தை அவர் எதிர்த்து தன் வாழ்க்கையை வாழ்ந்தாரோ அந்த அதிகாரமையம் அவரைத் தனது அதிகார விரிவாக்கத்துக்குப் பயன்படுத்திக் கொண்டுவிடுகிறது. இறந்தவரை அடக்கம் செய்து அவர் பெயரில் ஒரு தர்காவைக் கட்டி அவரை வைத்து வியாபாரத்தை ஆரம்பித்துவிடுகிறது.இந்த சமூக நிகழ்வானது படத்தில் மிகவும் நுட்பமாக விவரிக்கப்பட்டிருக்கிறது.
படத்தின் இன்னொரு பெரிய பிளஸ் பாயிண்ட் மது அம்பர்ட்டின் ஒளிப்பதிவு. வெறும் வாழ்த்து அட்டைப் புகைப்படங்கள் போல் தேங்கிவிடும் பாணியிலான ஒளிப்பதிவுதான் என்றாலும் கதையின் பலத்தினாலும் ஃப்ரேமில் இடம்பெறும் உயிர்த்துடிப்பான கதாபாத்திரங்களினாலும் கதையினாலும் இன்னொரு தளத்துக்குச் சென்றுவிடுகிறது. இருட்டின் பின்னணியில், பலா மரக் கன்றின் தளிர் இலைகள், ஊற்றிச் சென்ற நீரைச் சொட்டியபடி நிற்கும் படத்தின் கடைசிக் காட்சி திரை மொழியின் உச்சத்தில் இருக்கும் ஒன்று. வேறென்ன… ஒரு கவிதையில் இருப்பதும் 247 எழுத்துகள்தான். அது கவிதையாவது கவிஞன் அவற்றைப் பயன்படுத்தும்விதத்தில்தானே இருக்கிறது.
உஸ்தாத் கதாபாத்திரம் பரந்து விரிந்த படுகை ஒன்றில் பின் அந்தி நேர பின்னணியில் ஒற்றை மரத்தினடியில் அமர்ந்துகொண்டிருக்கும். அதிகாலை சூரிய ஒளியில் தொழுகை நடத்திக் கொண்டிருக்கும். இந்தக் காட்சிகளில் காட்டப்படும் பின்னணி அழகுகள் எல்லாம் அந்தக் கதாபாத்திரத்தின் குணாம்சத்தோடு ஒருவித குறியீட்டுத் தன்மையுடன் ஒத்திசைந்து இடம்பெறுவதால் அவை வெறும் காட்சி அழகுக்காக படத்தில் இடம்பெறுவதாக அல்லாமல் வேறொரு தளத்துக்கு இயல்பாக நகர்ந்துவிடுகின்றன.
நுட்பமான காட்சி மொழி என்பது படத்தின் இன்னொரு பலம்.
ஜான்சன் பலா மரத்துக்கு 60,000 தருவதாகச் சொல்லிவிட்டார். கைவசம் இருந்த சொற்ப நகைகளையும் விற்று 30 ஆயிரம் தேற்றியாகிவிட்டது. இன்னும் பத்து பதினைந்தாயிரம் வேண்டுமே. அதற்கு என்ன செய்ய என்று நாயகன் அபு தன் மனைவியிடம் கேட்கிறான். பின்னணியில் மாடு அம்மா என்று கத்தும் சத்தம் கேட்கிறது. அடுத்த காட்சியில் மாடுகள் இரண்டும் விற்கப்பட்டு வண்டியில் ஏற்றப்பட்டிருக்கும்.
மலையாளத்தில் இருந்து தமிழுக்கு எத்தனையோ படங்கள் ரீ மேக் செய்யப்பட்டுள்ளன. ஆதாமிண்ட மகன் அபு கட்டாயம் தமிழுக்கு வரவேண்டிய ஒரு படம். கேரளத்தைப் போல் இஸ்லாமியத்தாக்கம் தமிழகத்தில் குறைவு என்றாலும் இந்தப் படத்தின் அனைத்து உணர்வுகளோடும் தமிழர்களால் தங்களை அடையாளம் கண்டுகொள்ளமுடியும்.
இந்திய திரைப்படங்களில் மிகச் சிறந்த படமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பல பரிசுகளை வென்ற படம். சில நேரங்களில் சரியான நபர்களுக்கும் விருது கொடுக்கப்பட்டுவிடுவது உண்டு அல்லவா? ஆஸ்கர் பரிசுக்கும் இந்தியா சார்பில் சிபாரிசு செய்யப்பட்ட படம். மேற்கத்தியர்கள் எதிர்பார்க்கும் இந்தியாவை இது காட்டவில்லை என்பதாலோ என்னவோ பரிசு கிடைக்கவில்லை. அதோடு இதில் காட்டப்படும் உணர்வுகள் மேற்கத்திய மனதுக்கு புரிந்துகொள்ள முடியாத ஒன்றும் கூட. இந்த வருஷம் போகலைன்னா என்ன? அடுத்த வருஷம் போக வேண்டியதுதான என்று அது எளிதில் படத்தைக் காலி செய்துவிடும். பிரதிபலன் எதிர்பார்க்காமல் உதவும் மனிதர்களையும் லாப நோக்கம் பார்க்காமல் வர்த்தகம் செய்யும் ஒருவரையும் அவர்களால் புரிந்துகொள்ளவே முடிந்திருக்காதுதான். அந்தவகையில் இந்தப் படத்துக்கு ஆஸ்கர் விருது கிடைக்காமல் போனதால் இழப்பு இந்தப் படத்தை இயக்கியவருக்கு அல்ல.
0
B.R.M.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக