ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2012

கிரானைட் ஊழல்: கட்சிகள் மவுனம் ஏன்?

தமிழகத்தையே உலுக்கியுள்ள, மதுரை கிரானைட் ஊழல் குறித்து, அரசியல் கட்சிகள் பெரிய அளவில் கருத்துகளையோ, போராட்டங்களையோ நடத்தாமல், வாய்மூடி மவுனிகளாகவே உள்ளன. கட்சி பாகுபாடு இல்லாமல், அரசியல் கட்சிகளும், இந்த ஊழலுக்கு துணையாய் இருந்ததுதான் அமைதிக்கு காரணமா என்ற சந்தேகம் மக்களிடம் எழுந்துள்ளது.
பணம் கொழிக்கும் கிரானைட் தொழிலில் தொடரும் முறைகேடுகளுக்கு அதிகாரிகள் உடந்தையாக இருந்தது தற்போது வெளிவரத் துவங்கியுள்ளது. துணைபோன அதிகாரிகள் பட்டியல் எடுக்கப்பட்டு நடவடிக்கை தூள் பறக்கிறது. இவ்வளவு பெரிய தொகை தொடர்புடைய விவகாரத்தில் அரசியல்வாதிகள் நுழையாமல் எப்படி இருக்க முடியும் என்ற சந்தேகம் எழுவது இயற்கை. தேர்தல் நிதி, மாநாடு போன்ற கட்சி நிகழ்ச்சிகளுக்கு நிதி என கிரானைட் அதிபர்கள் பெரும்தொகையை வழங்கியதால்தான், அரசியல் கட்சிகள் இந்த முறைகேட்டை அம்பலப்படுத்தாமல் இருந்து வந்துள்ளதாக கூறுகின்றனர் விவரமறிந்தவர்கள். இன்னும் சில அரசியல்வாதிகளோ, நேரடியாக தாங்களே குவாரிகளை நடத்தி கொள்ளை லாபம் பார்த்து வந்துள்ளனர்.

கிரானைட் தொழிலில் ஈடுபட்டவர்கள், அரசியலை கடந்து நட்போடு பழகியதால், இதுநாள்வரை இந்த முறைகேடு வெளியே தெரியாமல் மறைக்கப்பட்டுள்ளது. தற்போது, முறைகேடு விவரம் வெளியில் தெரிந்தும், பெரும்பாலான அரசியல் கட்சிகள் தங்களுக்கும், இதற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லாதது போல் ஒதுங்கி நிற்கின்றன.அரசியல் கட்சிகளைப் போலவே, போலீஸ் மற்றும் வருவாய்துறை, கனிமத் துறை அதிகாரிகளும் குவாரி முதலாளிகளின் கைப்பாவைகளாகவே இருகின்றனர். கிரானைட் குவாரி ஊழல் குறித்து, மாவட்ட ஆட்சியராக இருந்த சகாயம், அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்து சில மாதங்கள் ஆன பின்பும் கூட, நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

அறிக்கை ஊடகங்களில் வெளியானதால் வேறு வழியின்றி நடவடிக்கைய எடுத்து வருவதாகக் கூறுகின்றனர். சகாயம் தனது அறிக்கையில், மூன்று நிறுவனங்களின் முறைகேடுகளைத் தான் சுட்டிக்காட்டி உள்ளார். மதுரை மாவட்டத்தில்175 குவாரிகள் உள்ளன. இவற்றில் நடந்துள்ள அத்துமீறல்களால், அரசுக்கு 35 ஆயிரம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது என, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.இந்த குவாரிகளின் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர். ஆனால், இதற்கெல்லாம் அரசியல் கட்சிகள் முன்வராது. அவை, பெற்றுக்கொண்ட அன்பளிப்புகளும், கட்சிக்கான நிதியும் அவர்களை வாய் திறக்க விடாது என்று குற்றஞ்சாட்டுகின்றனர் சுற்றுச்சூழல்வாதிகள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக