ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2012

மருத்துவர்களுக்கு கவனிப்பு: மருந்து நிறுவனங்களுக்கு கிடுக்கிப்பிடி

மருத்துவர்களுக்கு மருந்து நிறுவனங்கள் தரும் பரிசுப் பொருட்கள், வெளிநாட்டு சுற்றுலாக்களுக்கு வருமான வரி விதிக்க மத்திய நிதியமைச்சகம் முடிவு செய்திருப்பது, பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
தங்களது தயாரிப்புகளை பரிந்துரைப்பதற்காக மருத்துவர்களைக் கவனிப்பதில் மருந்து நிறுவனங்களுக்கிடையே பெரும் போட்டா போட்டி நடக்கிறது. முன்பெல்லாம், மருத்துவர்களுக்கு "மாதிரி மருந்து'கள் தருவதும், சிறுசிறு பரிசுப் பொருட்கள் தருவதுமே அதிகபட்ச கவனிப்பாக இருந்தது.
பரிந்துரை:சமீபகாலமாக, வெளிநாட்டு சுற்றுலா, விலையுயர்ந்த பரிசுப் பொருட்கள் தருவது என்று இதன் எல்லை நீண்டு கொண்டே இருக்கிறது. இதனால், விலை குறைந்த, தரமுள்ள, பக்கவிளைவுகள் இல்லாத மருந்துகளை பரிந்துரைப்பதற்குப் பதிலாக, தங்களை "சிறப்பாக' கவனிக்கும் மருந்து நிறுவனங்களின் தயாரிப்புகளைப் பரிந்துரைக்கும் மனநிலைக்கு பெரும்பாலான மருத்துவர்கள் மாறியுள்ளனர்.
கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்பே, இது தொடர்பான புகார்கள் பரவலாக வந்ததன் எதிரொலியாக, மருத்துவர்களுக்கான புதிய விதிமுறைகளை 2009 டிச.,10ல் இந்திய மருத்துவக் கவுன்சில் வெளியிட்டது. குறிப்பாக, பரிசுப் பொருட்கள் வாங்குவது, வெளிநாட்டு சுற்றுலா, பிற வழிகளிலான விருந்தோம்பல்களை ஏற்பதை முற்றிலும் தடை செய்தது.

இதனை, 30 சதவீதம் டாக்டர்கள் கடை பிடிப்பதாகத் தெரியவில்லை. மாறாக, வெளிநாட்டு சுற்றுலா அழைத்துச் செல்வது உள்ளிட்ட "காஸ்ட்லி கவனிப்பு'கள் அதிகமாகியுள்ளன. மருந்து நிறுவனங்கள் தங்கள் வருவாயில் ஐந்து சதவீதத்தை ஒதுக்கி, அதனை "புரமோஷன் செலவு' என்று கணக்குக் காட்டுகின்றன.

உத்தரவு:மருத்துவக் கவுன்சிலாலும் முடிவு கட்ட முடியாத இந்த விவகாரத்துக்கு, மத்திய நிதியமைச்சகம் இப்போது "கிடுக்கிப்பிடி' போட்டுள்ளது. டாக்டர்களுக்கு வழங்கப்படும் மாதிரி மருந்துகள், பரிசுப் பொருட்கள், வெளிநாட்டு சுற்றுலா உள்ளிட்ட அனைத்துக்கும் வரி செலுத்த வேண்டுமென்று நிதியமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.மருந்து நிறுவனங்களுக்கு மட்டுமன்றி, மருத்துவர்களின் வருவாயிலும் இவற்றைச் சேர்த்து, அதற்கும் வரி விதிக்க முடிவு செய்துள்ளது. பிரதமர் அலுவலக அறிவுறுத்தலின்பேரில், நிதியமைச்சகம் எடுத்துள்ள இந்த நடவடிக்கையை நாடு முழுவதும் உள்ள நுகர்வோர் மற்றும் சமூகநல அமைப்புகள் வரவேற்றுள்ளன.

இந்த நடவடிக்கையை வரவேற்றுள்ள கோயம்புத்தூர் கன்ஸ்யூமர் காஸ் அமைப்பு, இத்தகைய வருவாய்க்கு வரி செலுத்தப்பட்டாலும், அதனை பட்டியல் எடுத்து இந்திய மருத்துவக் கவுன்சில் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சகத்துக்கு நிதித்துறை அனுப்ப வேண்டுமென்ற கோரிக்கையையும் முன் வைத்துள்ளது.மத்திய நிதியமைச்சர், சுகாதாரத்துறை அமைச்சர் ஆகியோருக்கு கன்ஸ்யூமர் காஸ் செயலர் கதிர்மதியோன் கடிதம் எழுதியுள்ளார்.

அவர் கூறுகையில், "இந்த விவகாரத்தில், தீவிரமான கண்காணிப்பை மேற்கொள்வதோடு, மருத்துவக் கவுன்சில் விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கையும் எடுக்க வேண்டியது அவசியம்' என்றார்.அதேநேரத்தில், "மாதிரி மருந்து'களுக்கு விலக்கு அளிக்க வேண்டுமென்று இவ்வமைப்பு வலியுறுத்தியுள்ளது.

- நமது சிறப்பு நிருபர் -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக