வியாழன், 2 ஆகஸ்ட், 2012

விஜயகாந்துக்கு குடைச்சல் கொடுக்கும் சங்கீதா சீனிவாசன்!


Viru News



விஜயகாந்தால் கட்சியில் இருந்து ‘தூக்கப்பட்ட’ சங்கீதா சீனிவாசன், தே.மு.தி.க.-வுக்குள் சில குளறுபடிகளை ஏற்படுத்துவார் என அக்கட்சி வட்டாரங்களில் கூறப்படுகிறது. 
ஆளும் கட்சி பிரமுகர் ஒருவரின் மறைமுக ஆசியுடன், தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் சிலருடன் இவர் பேசிக்கொண்டு இருக்கிறார் என்றே எமக்கு கிடைத்த தகவல்கள் சொல்கின்றன.
தே.மு.தி.க-வில் பெண்கள் வரிசையில் விஜயகாந்த் மனைவி பிரேமலதாவுக்கு அடுத்த பெரும்புள்ளியாகச் சொல்லப்பட்ட சங்கீதா திடீரெனக் கட்சியை விட்டே கட்டம் கட்டப்பட்டிருப்பது தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் சிலரை நெளிய வைத்திருக்கிறது. காரணம், அவர்கள் சங்கீதாவுடன் சமீபகாலமாக சில ‘பேச்சுவார்த்தைகளில்’ ஈடுபட்டிருந்ததுதான் என்கிறார்கள்.

பேச்சுவார்த்தை, ஆளும்கட்சிக்கு போவது பற்றி என்பதே தகவல். எட்டு எம்.எல்.ஏ.க்கள் இந்தப் பேச்சுக்களில் ஈடுபட்டிருக்கலாம், ஆனால் நிச்சயமாக 3 எம்.எல்.ஏ.க்கள் சீரியசாக கட்சி மாறுவது பற்றி யோசித்துக் கொண்டிருந்தார்கள் என்று ஒரு கணக்கு சொல்கிறார்கள்.
திருவள்ளூர் மாவட்ட தே.மு.தி.க. மகளிர் அணித் தலைவியாக இருந்த சங்கீதா, விஜயகாந்த் மனைவி பிரேமலதாவின் உறவினர். வேலூர் மாவட்டம் தோட்டாலம் கிராமத்தைச் சேர்ந்த இவரது அப்பாவின் மாமா பொண்ணு பிரேமலதா.
பிரேமலதாவின் உறவினர் என்று சொல்லியே கட்சிக்குள் சங்கீதா கொஞ்சம் ஆட்டம் காட்டியது நிஜம்தான் என்று சொல்லும் கட்சி முக்கியஸ்தர் ஒருவர், “ஆனால், சங்கீதா கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டதன் காரணம் அதுவல்ல. நம்ம கட்சியில் அதெல்லாம் சகஜம். இது வேறு காரணம்” என்கிறார்.
“பூந்தமல்லி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. மணிமாறன் மூலமாக சங்கீதா, அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துடன் பரிச்சயமானார். தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்களை கட்சிமாற வைக்கும் ப்ராஜெக்டில் ஓ.பி.எஸ். நேரடியாக இவருடன் டீல் பண்ணவில்லை. மற்றொரு முக்கியஸ்தர் மூலமாகவே அந்த பேச்சுகள் நடைபெற்றன.
ஆனால், அந்த அ.தி.மு.க. பிரமுகர் சமீபத்தில் அம்மாவின் கோபத்துக்கு ஆளானதை அடுத்து, இந்த கட்சி மாறும் திட்டமே இழுபறியில் உள்ளது. அம்மாவின் கோபத்துக்கு ஆளான பிரமுகர், தமது சொந்த விவகாரத்தில் மூழ்கியுள்ளார். இழந்ததை பிடிக்க வேண்டிய நிலை அவருக்கு!
இந்த கேப்பில்தான், கேப்டனின் காதுகளுக்கு விஷயம் போய், சங்கீதாவை கட்சியில் இருந்தே தூக்கிவிட்டார்” என்றார் நமக்கு தகவல் கொடுத்த தே.மு.தி.க. பிரமுகர்.
சங்கீதாவோ, “நான் அமைச்சர் ஓ.பி.எஸ்.ஸை நேரில் கண்டதுகூட இல்லை. எம்.எல்.ஏ. மணிமாறனுக்கு எதிராக அரசியல் செய்யும் நான், அவரிடம் பேசுவேனா?” என்கிறார்.
அ.தி.மு.க வட்டாரங்களில் விசாரித்தோம். “சங்கீதா கட்சியில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார். அந்த ஆத்திரத்தில் ‘தனி ஆளாக’ இந்தப் பக்கமாக வந்தால், இங்கே எந்த முக்கியத்துவமும் கிடைக்காது” என்றார் கார்டனுடன் நெருங்கிய தொடர்பில் உள்ள பிரமுகர் ஒருவர் மர்மச் சிரிப்புடன்!
‘தனி ஆளாக’ என்பதற்கு அழுத்தம் கொடுத்து சொன்னார் அவர்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக