ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2012

பௌத்தத்தில் கடவுள் உண்டா? போதிதர்மர் ஏன் துறவறம் மேற்கொள்ள முடிவெடுத்தார்?


போதி தர்மர் / அத்தியாயம் 3
போதிதர்மர் தனது பிற்கால வாழ்க்கையை பௌத்தத்துக்கே அர்ப்பணித்தவர் என்பதால் நாம் அதைப் பற்றி அறிந்துகொள்வதும் கொஞ்சம் அவசியமாகிறது. ஒரு மதத்தை அறிய அதன் கடவுள் கோட்பாட்டை முதலில் அறிய வேண்டும். ஏனென்றால் மதங்கள் அனைத்தும் கடவுளில் இருந்துதான் தங்கள் கொள்கைகளை விரிக்கின்றன. ‘புத்த மதத்தில் யார் கடவுள்? கௌதம புத்தரா? இல்லை வேறு யாருமா?’
அதர்மம் மலிந்திருக்கும்போது, அறத்தை நிலைநாட்ட ஒரு விழிப்படைந்த மனிதர் அவ்வப்போது வரலாற்றில் தோன்றுவது வழக்கம். அவ்வாறு தோன்றுபவர் தன் சமூகத்தாரை நேர்வழியில் கொண்டு செல்வார். புத்தர் அவர்களில் ஒருவர். கௌதமருக்கு முன்னும் பின்னும் பல்வேறு நாடுகளில் பல்வேறு சமூகத்தில் பல புத்தர்கள் தோன்றியுள்ளனர். கௌதமருக்கு பின் ‘மைத்ரேயர்’ எனும் புத்தர் தோன்றுவார் என்றும் அவர் தன் சமூகத்தினரை மட்டுமின்றி உலகமக்கள் அனைவரையும் செம்மைப்படுத்தி உலகத்துக்கே ஒரு வரமாவார் என்றும் புத்தர் முன்னறிவிப்பு செய்தது இங்கே குறிப்பிடத்தக்கது. இதுவே புத்த மதத்தின் புத்தர்கள் பற்றிய நம்பிக்கை. அப்படியென்றால் கடவுள்? www.tamilpaper.net

எதா எதாஹி தர்மஸ்ய கிலானிர் பவதி பாரத; அப்யுத்தானம் அதர்மஸ்ய ததாத்மானம் ஸ்ர்ஜான்ம் அஹம் (பொருள்: பாரத நாட்டில் எப்பொழுதெல்லாம் தர்மம் அழிந்து அதர்மம் தலைதூக்குகிறதோ; அப்பொழுதெல்லாம் தர்மத்தை நிலைநாட்ட நான் (கிருஷ்ணன்) அவதரிப்பேன்.
மேற்படி பகவத் கீதை உபதேசத்தை எடுத்துக்கொண்டு ஹிந்துக்கள் இன்று புத்தரை கிருஷ்ணரின் அவதாரமாகக் கொண்டாடுகின்றனர். புத்தரைக் கடவுளாக பாவிக்கின்றனர்.
பௌத்த மதத்தில், புத்தர் கடவுளின் அவதாரம் எனும் கருத்துக்கு மட்டுமல்ல புத்தர் கடவுள் எனும் கருத்துக்கே இடமில்லை. புத்தர் கடவுளுமில்லை, கடவுளின் அவதாரமும் இல்லை. ஜஸ்ட் நம்மைப்போல் ஒரு மனிதர் அவ்வளவே. நமக்கும் அவருக்கும் ஒரே ஒரு வேறுபாடு. நாம் தூங்கிக் கொண்டிருக்கிறோம்; அவர் விழிப்படைந்துவிட்டார். அவ்வளவே. விழிப்படைந்தால் நாமும் புத்தரே.
அப்படியானால் புத்த மதத்தில் கடவுள் நம்பிக்கை இல்லையா?
புத்தர் ஒருபோதும் கடவுளைப் பற்றி நேரடியாக விவாதித்ததில்லை. தன் சீடர்களுடனும் அதுபற்றிக் கலந்துகொண்டதாகக் குறிப்புமில்லை. இறைவன் இருக்கிறார் என்றும் அவர் கூறியதில்லை. இல்லை என்றும் சொன்னதில்லை. கடவுள் விஷயத்தில் புத்தர் நடுநிலைமை காத்துள்ளார் என்பது மட்டும் புலனாகிறது. ஆக மொத்தத்தில் நமக்கு தெரியவருவது என்னவென்றால் ‘புத்த மதம் கடவுள் விமரிசனமற்ற மதம்’ . ‘இருந்தால் நல்லா இருக்கும்’ என்று கூறும் அக்னாஸ்டிக் வகையறா.
ஓஷோ ரஜ்னீஷ் போன்ற பல பௌத்தர்கள் மறைமுகமாகக் கடவுளை ஏற்றுக்கொண்டாலும் சிலர் இல்லவே இல்லை என்று ஆணித்தரமாகச் சொல்கிறார்கள். ஆக, இன்றுவரை புத்தமதத்தில் ‘கடவுள் இருக்கிறாரா?’ என்கிற கேள்விக்கு தெளிவான பதில் மட்டும் இல்லை.
சித்தார்தர் புத்தராகி விழிப்பு நிலை அடைந்த பிறகு (புத்தர் என்பதற்கு ‘விழிப்படைந்தவர்’ என்று பொருள்.) தேடலின் முடிவில் தான் கண்டடைந்த உண்மைகளை ஒரு சூத்திர வடிவில் அறிவித்தார்.
1. இது இருந்தால் அதுவும் இருக்கும்.
2. இதனுடைய எழுச்சியினால் அதுவும் எழும்.
3. இது இல்லை என்றால் அதுவும் இல்லை.
4. எனவே, இதை நிறுத்தினால் அதுவும் தானாக நின்றுவிடும்.
அது எது? இது எது?
இது=ஆசை; அது=துன்பம்.
புத்தர் சொல்ல வருவது என்னவென்றால்,
1. துன்பம் இருக்கும் இடத்தில் ஆசையும் இருக்கும்.
2. ஏனென்றால் துன்பம் எழக் காரணம் ஆசை.
3. ஆகவே, ஆசை இல்லையேல் துன்பம் இல்லை.
4. எனவே, ஆசைப்படுவதை நிறுத்திக்கொண்டால் துன்பமும் நின்றுவிடும்.
இவையே புத்தர் கண்ட நான்கு பேருண்மைகள்.
இவற்றை அடைய புத்தர் ஒரு நிபந்தனையும் முன்வைக்கிறார். நிபந்தனை என்னவென்றால், இவற்றை அடைய ஒருவர் ‘உலகம் ஒரு மாயை’ என்று முதலில் உணர்ந்திருக்க வேண்டுமாம்.
ஆம், நேற்றிருந்தது இன்றில்லை. இன்றிருப்பது நாளை இல்லை. எனவே இந்த மாய உலக வாழ்வில் வெற்றி பெறுவது ஒரு மனிதனின் பிறவி நோக்கம் அன்று என்று மொழிந்தார் புத்தர்.
ஆசைப்படுவதை அடக்கி ஒழுக்க நெறியில் செல்ல, தனது தொண்டர்களுக்கு சில வழிமுறைகளையும் நெறிமுறைகளையும் வகுத்தளித்தார் புத்தர்.
ஆசைப்படுவதை நிறுத்த அவர் மூன்று வழிகளைப் போதித்தார். இதனை எட்டு மடிவழிகள் என்றும் கூறுவர்
1. ஒழுக்கம்
2. ஞானம்
3. தியானம்
ஒழுக்கம்
நன்மொழி: உண்மை, பிறர் மனம் புண்படாதபடி பேசுதல், தேவையற்ற வீண்பேச்சைத் தவிர்த்தல், மௌனம் காத்தல்.
நற்செய்கை: செய்கையால் பிறரை புண்படுத்தாதிருத்தல், அஹிம்சையான செயல்களை மட்டும் செய்தல்.
நல்வாழ்க்கை: பிற உயிர்களுக்குத் தீங்கு செய்யா வாழ்க்கை. (அஹிம்சை)
ஞானம்
நற்காட்சி: காணும் காட்சியை அது தோன்றும் விதத்தை வைத்து அணுகாமல், அதனுடைய உண்மை நிலையை மதிப்பிடுவது.
நல்லெண்ணம்: வாழ்க்கைச் சுழற்சியிலிருந்து விடுபட எண்ணுவது, பிற உயிர்களுக்கு தீங்கு செய்யா எண்ணம், பிறர் நலம் விரும்புவது.
தியானம்
நன்முயற்சி: தன்னை செம்மைப்படுத்தும் முயற்சிகளை மேற்கொள்ளல்.
நற்கடைப்பிடி: உலகின் மெய்ஞானத்தை முன்னுணர்ந்த விழிப்பு நிலையைக் கடைப்பிடித்தல்.
நல்லமைதி: அமைதியை நிலைநாட்ட தியானம் மேற்கொள்ளல்.
இவையே எட்டு நல்வழிகள் எனப்படும்.
இவையே புத்த மதத்தின் அடிப்படைத் தத்துவங்கள் என்று கூறினாலும் இதனுள் வராத, புத்தரால் போதிக்கப்பட்ட பல அறநெறிகளும் ஒழுக்கநெறிகளும் உள்ளன. புத்தரின் அத்தகைய உபதேசங்களை அவர் மறைந்து சில மாதங்களுப்பின் புத்த பிக்குகள் தொகுத்து ‘திரிபிடகம்’ என்று வழங்கினர்.
திரிபிடகம் மூன்று நூல்களை உள்ளடக்கியது. ஒழுக்கத்தை போதிக்கும், ‘விநயபிடகம்’, அறநெறியைப் போதிக்கும், ‘தம்மபிடகம்’, மனத்தில் உருவேற்ற வல்ல ‘சூத்திரபிடகம்’.
திரிபிடகம் பாலி மொழி நூலாகும். புத்தர் தனது போதனைகளை பாலி மொழியிலேயே நிகழ்த்தினார். புதிய வழக்கங்களை, சடங்குகளை புத்த மதத்தில் புகுத்தும் வேலை புத்தர் மறைந்து சுமார் நூறு ஆண்டுகள் கழித்து சில பிக்குகளால் மேற்கொள்ளப்பட்டது. ஏனென்று கேட்டால் ‘பழையன கழிந்து புதியன புகுந்தால் மட்டுமே புத்தமதம் தழைக்கும்’ என்றனர். இதற்காக ‘வைசாலி’ நகரத்துக்கு அருகில் எட்டு மாதம் தங்கி பிக்குகள் ஆலோசித்தனர்.
முடிவாக, ‘புத்த மதத்தில் புதுமைகளைப் புகுத்துவதற்கு இடமில்லை’ என்று திட்டவட்டமாக அறிவித்தனர். இவர்களை எதிர்த்து புதுமையை விரும்பி வெளியேறியவர்களே இன்றைய மஹாயான அதாவது, ‘பெருஞ்சுழற் பௌத்தர்கள்’ (அவர்களாகவே வைத்துக்கொண்ட பெயர் இது).
இந்தப் புதுமை விரும்பிகள், ‘புதுமை மதத்தை பாழ்படுத்தி விடும்’ என்றவர்களை ஹினயான அதாவது சிறுஞ்சுழற் பௌத்தர்கள் என்றழைத்தனர்.
இதனை எதிர்த்து தங்களுக்கு தேரவாத (மூத்தோர் வழி) பௌத்தர்கள் என்று பெயர் சூடிக்கொண்டார்கள் மூத்தவர்கள்.
தேராவதத்துக்கும் மஹாயானத்துக்கும் வித்தியாசங்கள் அநேகமிருந்தாலும் மஹாயானம் இல்லையென்றால் பௌத்தம் இவ்வளவு தூரம் பரவி இராது; அதேபோல, தேராவதம் இல்லையென்றால் பௌத்தம் என்றால் என்னவென்றே தெரிந்திருக்காது என்பார்கள் பொது பௌத்தர்கள்.
புத்தர் புலால் உண்பதை தடை செய்ததைக்கூட அறியாமல் இருக்கும் இன்றைய சீனர்களை பார்த்தால் உங்களுக்கு மஹாயானம் நன்கு விளங்கும்.
0
போதிதர்மர் மஹாயானப் பிரிவைச் சார்ந்தவர். இவர் மஹாயான பௌத்த பிரிவின் வலது பக்கம் புகுந்து இடதுபுறம் புதிதாக ஜென் (தியான) புத்த மதத்துடன் வெளியேறியவர். இந்த பௌத்தம்தான் அவரை துறவு மேற்கொள்ள வைத்தது. சீனா செல்லத் தூண்டியது. ஜென்னைத் தோற்றுவிக்க உதவியது.
இனி தொடர்ந்து போதிதர்மர் வரலாற்றைப் பார்ப்போம். போதி தர்மர், பிறந்தார் வளர்ந்தார். தன் அரச பதவியை உதறித் துறவியானார். ப்ரஜ்னதாராவின் சீடரானார். சீனா சென்றார். இது தான் போதிதர்மரது முற்பாதி வரலாறு.
முதலில் வளர்ப்பிலிருந்து தொடங்குவோம். போதிதர்மர் ஒரு இளவரசர். ஆகையால் அவர் மற்ற அரச பரம்பரை குழந்தைகளைப் போல்தான் வளர்க்கப்பட்டிருப்பார். அதாவது வாள்வீச்சு, குதிரையேற்றம், மருத்துவம், தற்காப்புக்கலை, ராஜதந்திரம் என ஆயகலைகள் அனைத்தும் கற்றுக்கொடுக்கப்பட்டுதான் வளர்க்கப்பட்டிருப்பார். மதம் சார்ந்த கல்வி என்பது ஊறுகாயாயைப் போலத்தான் இருந்திருக்கும். தவிர அவரது கல்வி முறையும் கண்டிப்பாக அவருக்கு அரசாட்சியின்மீதும் அதிகாரத்தின்மீதும் ஆர்வம் வளர்க்கும்படியாகத்தான் அமைந்திருக்கும். அப்படி இருக்கும்போது எப்படி பௌதத்தின் மீது அவருக்கு துறவு மேற்கொள்ளும் அளவுக்கு ஆர்வம் ஏற்பட்டது? தன் வாழ்நாளின் பிற்பகுதி முழுவதையும் பௌத்தத்துக்கே அர்ப்பணிக்க வேண்டும் என்ற எண்ணம் எப்படி அவருள் எழுந்தது? அவரது துறவு முடிவுக்குப் பின்னால் வேறுசில நிகழ்வுகளும் நடந்திருக்கலாம் அல்லவா?
போதிதர்மரின் துறவறம் பற்றி படிக்கும் எவரது மனதிலும் இந்தக் கேள்விகள் பிறப்பது இயற்கை.
போதிதர்மர் ஏன் துறவறம் மேற்கொள்ள முடிவெடுத்தார்?
பௌத்த மதத்தை அறிய அறிய போதிமர்தருக்கு பௌதத்தின் மீதும் புத்தரின் மீதும் காதல் அதிகமாகிவிட்டது. அதனால் தான் துறவறம் மேற்கொண்டார். அவர் திடீரென்று மனம் மாறும் அளவிற்கு எந்த நிகழ்வும் நடக்கவில்லை. இது ஒரு சாரரின் கருத்து.
போதிதர்மருக்கு அவரைவிட வயதில் மூத்த இரண்டு சகோதரர்கள் இருந்தார்கள். ஆனால் போதிதர்மர் தன் இரு சகோதரர்களைக் காட்டிலும் திறமை வாய்ந்தவர். எனவே சகோதரர்கள் இருவரும் பயந்தனர். போதிதர்மர் தங்கள் இருவரையும் வீழ்த்திவிட்டு ஆட்சியைக் கைப்பற்றிக் கொள்வாரோ என்று கலங்கி போதிதர்மரைத் தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டினர்.
(தொடரும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக