திங்கள், 6 ஆகஸ்ட், 2012

சில நாள்களுக்குப்பிறகு இளையராஜாவுக்கு தாவிவிடுகிறார்கள்


எண்பதுகளில் இருந்த தமிழ்த்திரை இசை பற்றி அந்தக்கால யுவன்/யுவதிகள் சிலாகித்துப்பேசுவது போல  90களிலிருந்து இப்போதைய 2010 வரையிலான இசை பற்றி இக்கால இளைஞர்கள் பேசுகிறார்களா? 
இப்போதைய இசை அவர்களுடைய அன்றாட வாழ்க்கையோடு இணைந்து பயணம் செய்கிறதா? எண்பதுகளில் கோலோச்சிய இளையராஜாவையும் , கூடவே பயணித்த சக இசைக்கலைஞர்களின் இசையையும் தங்கள் வாழ்வோடு இணைத்துப் பார்த்த பார்வை இப்போதுள்ள இளைஞர்களுக்கு இருக்கிறதா?
எனக்குத்தெரிந்து ரஹ்மானையும் யுவனையும் சிலாகித்து வெகு சிலரே இணையத்தில் விவாதிக்கிறார்கள். அவர்கள் கூட சில நாள்களுக்குப்பிறகு இளையராஜாவுக்கு தாவிவிடுகிறார்கள். அப்படியானால் அவர்களுக்கு ஒரிஜினாலிட்டி தேடிப் போகும் இயல்பு இருக்கிறது என்றுதானே அர்த்தம்?
இப்போதைய இசையமைப்பாளர்கள் பூர்த்தி செய்யத் தவறும் இடம் இதுதான். அன்றைய ரசிகர்கள் பாடலின் இடைஇசையைக்கூட (interlude) ரசித்தனர். இப்போது? இப்போதைய இசை பற்றியோ இசையமைப்பாளர்கள் பற்றியோ அவர்கள் நம்மீது செலுத்தும் தாக்கம் பற்றியோ ஏதேனும் விவாதங்கள் நடைபெறுகின்றவா?
இசை இன்று மலிந்துவிட்டது என்பதுதான் உண்மை. எதை கேட்டாலும் இதன் ஒரிஜினல் வடிவம் என்ன என்றுதான் யோசிக்க தோன்றுகிறது. எதிலிருந்து இதை லிஃப்ட் செய்திருப்பார்கள் என்றுதான் மனம் கணக்கிடுகிறது. Casio, Roland என்று கீபோர்டுகள் சுலபமாக கிடைக்கும் இன்றைய காலகட்டத்தில், இசையை ப்ரோகிராம் செய்துவிட முடிகிறது. என்ன மாதிரியான பீட், எப்படிப்பட்ட வாத்தியக் கருவிகள் என்பதையெல்லாம் சொல்லிவிட்டால், ரெடிமேட் இசை ரெடி!
இப்படி இசை பற்றிய எந்தவித ஞானமும் இல்லாமல், அடிப்படைப்புரிதல்கள்கூட இல்லாமல், இவ்வாறு உருவாக்கப்படும் இசை எப்படி நெஞ்சைத் தொடும்?
இன்னொரு முக்கிய வித்தியாசம், அப்போதெல்லாம் இசை என்பது கேட்பதற்கானது. இன்றோ காட்சிகளோடு சேர்ந்து ரசிப்பதற்கானதாக மாறிவிட்டது. எனவே பார்வையாளர்களைக் கவர்வதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சிகள் அனைத்தும் இசையைக் கொல்வதில் சென்று முடிகின்றன.
ஐ பாட், ஐ ஃபோன், எம்பி3 போன்றவற்றில் இசையை நிரப்பி தொடர்ந்து கேட்டு சலிப்படைந்துவிடுகிறார்கள் இன்றைய ஆர்வலர்கள்.
இன்றைய இசையமைப்பாளர்கள் சர்வதேச ஆடியன்ஸை மனத்தில் வைத்தே இசையமைக்கிறார்கள். சமூக வலைத்தளங்களில் பாடல்களை பகிர்ந்துகொண்டு பல்லாயிரக்காணவர்களை ஈர்க்கத் துடிக்கிறார்கள். இந்நிலையில், சர்வதேச ரசிகர்களுக்காகவே இசையை உருவாக்கவேண்டியது அவர்களுக்கு அவசியமாகிவிடுகிறது. தனித்தும் முக்கியமில்லாமல் போய்விட்டது. நாம் உருவாக்கும் இசை உள்ளத்தைத் தொடுகிறதா என்று பார்ப்பதில்லை. இப்படி உருவாகும் இசையை போகிற போக்கில் ரசிக்க மட்டுமே முடியும்.
எண்பதுகளில் உருவான இசை வேறு ரகம். ஒரு பாடலைச் சொன்னால் இசையமைத்தவர் யார் என்பதை அவர்களால் சொல்லிவிடமுடியும். இப்போதைய பாடல்களை எப்படி வேறுபடுத்திப் பார்ப்பது என்றே தெரியவில்லை.
இன்றைய தொலைக்காட்சி சானல்களின் பெயர்களை நீக்கிவிட்டுப் பார்த்தால் எல்லாம் ஒன்றுபோல் இருப்பது போல், போஸ்டர்களில் உள்ள இசையமைப்பாளர்களின் பெயர்களை நீக்கிவிட்டால் எல்லாப் பாடல்களும் ஒன்றுபோலவே இசைக்கும். எது விற்கிறதோ அதைக் கொடுக்கிறேன் என்னும் மனோநிலையே இதற்குக் காரணம்.
இசையின் தரம் இப்படி இருக்கும்போது, ஏற்கெனவே அவசர யுகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் மக்களால் எப்படி நின்று நிதானமாக இன்றைய இசையை ரசிக்கமுடியும்? எப்படி ஒரு பாடல் அவர்கள் மனத்தில் தங்கும்? எப்படி வாழ்வோடு பிணைந்து நிற்கும்? எப்படி ஆத்மாவோடு ஒன்று கலக்கும்?
இசை மட்டுமல்ல, கலை, இலக்கியம் போன்றவற்றின்மீதும் மக்கள் ஆர்வமிழந்து வருகிறார்கள். நம் மண்ணுக்கான இசை, மண்ணின் மொழி போன்றவற்றின்மீது அவர்களுக்குப் பிடிப்பில்லை. உலகமயமாக்கலும் தாராளமயமாக்கலும் நம் ரசனை போக்கை வெகுமாக மாற்றிவிட்டது.
ஒருவர் இளமையில் கேட்டு, பார்த்து, ரசித்த விஷயங்கள்தான் அவர்களுடைய வாழ்க்கை முழுவதும் நிறைந்திருக்கும். எனில், இப்போதைய தலைமுறை யாருடைய இசையை எதிர்காலத்தில் சிலாகிப்பார்கள்?
0
சின்னப்பயல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக