சனி, 4 ஆகஸ்ட், 2012

போதிதர்மரின் பெயர் என்ன? அத்தியாயம் 2



ஐந்தாம் நூற்றாண்டு, ஆறாம் நூற்றாண்டு, ஏழாம் நூற்றாண்டு, எட்டாம் நுற்றாண்டு என்று பல்வேறு நூற்றாண்டுகளில் போதிதர்மர் வாழ்ந்தார் என்பதற்கான பதிவுகள் சரித்திரத்தில் பரவலாகக் காணப்படுகின்றன. ஒரு மனிதன் ஐந்நூறு ஆண்டுகளா வாழ்வான்? ஆகையால், அவர் வாழ்ந்த நூற்றாண்டு ஐந்து மற்றும் ஆறாம் நூற்றாண்டு என்பது ஜான் மிக் ரே போன்ற வரலாற்றாசிரியர்களின் கருத்து. எப்படி ஆறாம் நூற்றாண்டு என்று சொல்கிறார்கள்?
அதற்கு முன் ஒரு விஷயத்தை தெளிவாக்கிக்கொள்ளவேண்டும். போதிதர்மர் சீனாவுக்கு எதற்குச் சென்றார்? தமிழர் தற்காப்புக் கலையையும் மருத்துவக் கலையையும் சீனாவில் பரப்புவதற்கா? சத்தியமாக இல்லை. அசோக சக்கரவர்த்தியின் மகளும் மகனும் போலவே, போதிதர்மரும் பௌத்தம் பரப்புவதற்காகவும், பௌத்த மதம் சம்பந்தப்பட்ட பிற பணிகளுக்காகவுமே சென்றிருக்கிறார்.

தமிழகத்தில் நான்காம் நூற்றாண்டு வாக்கில் பௌத்தமும் சமணமும் படரத்தொடங்கியது என்று பார்த்தோம் அல்லவா! அதன் பிறகு, பௌத்தத்துக்கும் சமணத்துக்கும் இடையே சொற்போர், விவாதம் என ஆரம்பித்த சண்டை சமயப் போர் ஆனது. சொற்போரில் சமணர்களிடம் தோற்ற பௌத்தர்கள் அவமரியாதை செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டனர். இதுமட்டும் இந்தியாவில் பௌத்தம் அழிந்ததற்கான காரணம் இல்லை. பௌத்த மதத்துக்குள் உண்டான பிளவுகளும்கூட அதற்கு காரணம். அதுதான் முதன்மைக் காரணமும் கூட. மஹாயானம், தேராவாதம், வஜ்ராயானம் என்று கிட்டத்தட்ட ஆறு பிரிவுகள் பௌத்த சமயத்துக்குள் அன்றே இருந்தனவாம். இதனால் புத்தர் கண்ட பௌத்த கொள்கைகள் திரியத் தொடங்கின.
இது போக, புத்த பிக்குகளால் செல்வ போகத்தைத் துறக்க இயலவில்லை. தான, தர்மம் செய்யப்பட்ட பொருள்களே மடங்களை நிரப்பும் அளவுக்கு இருந்தது. அந்த செல்வத்தின் காரணமாக மடங்களுக்குள் பூசல்கள் ஏற்பட்டன. இந்த உட்கட்சிப் பூசல் மன்னர்களையும் மக்களையும் விரக்தி கொள்ளவைத்து புறக்கணிப்புக்கு காரணமாக அமைந்தது.
இவ்வாறு பௌத்த அஸ்திவாரம் சமணத்தாலும் மடங்களின் உட்கட்சிப் பூசலாலும் ஆட்டம் கண்டது. புத்த மடங்கள், புத்த குகைகள் சமண மயமாக்கப்பட்டன. புத்த பிக்குகள் விரட்டியடிக்கப்பட்டனர். ஆனாலும் புத்த மதம் தமிழகத்தில் இன்றிருப்பதைப் போல் முழுமையாக துடைத்து எறியப்படவில்லை.
பக்தி இயக்கம் வடநாட்டில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்திக்கொண்டிருந்த வேளை அது. தமிழகத்திலும் அதன் அதிர்வலைகள் வீசத் தொடங்கியிருந்தன. சமணர்கள் விளைவித்தவை அவர்கள் அடிமடியிலேயே இடியென வந்து விழுந்தன. பிற்பகுதி பல்லவர்களும், அதன் பின் வந்த சோழர்களும் இந்துமதக் கோட்பாடுகளை ஏற்றனர். பௌத்த, சமண சித்தாந்தங்கள் பலவற்றை உள்வாங்கிக்கொண்டு இந்து மதம் வளர்ந்தது. மக்களிடம் மிகுந்த வரவேற்பும் பெற்றது.
இப்படியாக, பௌத்தர்களிடம் பிடுங்கிய இடங்களுடன் சேர்த்து தங்கள் இடங்களையும் இந்து மதத்திடம் இழந்தனர் சமணர்கள். இந்து மதத்தை ஏற்காத சமணர்கள் கழுவிலேற்றப்பட்டனர். இன்னும் பல விதங்களில் சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டனர். இந்நிகழ்வுகளை கலைநயத்துடன் விவரிக்கும் செய்யுள்களையும் கோவில் சிற்பங்களையும் சுவர் ஓவியங்களையும் இன்றும் காணலாம். இதன் விளைவால் தமிழகத்தில் கொஞ்ச நஞ்சம் மிச்சமிருந்த புத்த மதமும் பிறரை இம்சிக்காமல் சமணத்தை அணைத்துக்கொண்டு சாந்தத்துடன் மரணத்தை தழுவியது. இப்படியாக, பௌத்தம் ஏழாம் நூற்றாண்டு வாக்கில் அழியத் தொடங்கி ஒன்பதாம் நூற்றாண்டில் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது.
இந்த நிலையில் போதிதர்மர் நிச்சயமாக ஆறாம் நூற்றாண்டுக்கு மேல் பிறந்திருக்க வாய்ப்பில்லை. பிறந்திருந்தால் அவர் பௌத்த மதத்தை பின்பற்றியிருக்க முடியாது. மேற்கண்ட காரணங்களுடன் இன்னும் சில காரணங்களை வைத்துத்தான் போதிதர்மர் ஐந்தாம் நூற்றாண்டில் பிறந்து ஆறாம் நூற்றாண்டு வரைக்கும் வாழ்ந்திருக்க வேண்டும் என்று நவீன சரித்திர ஆசிரியர்கள் முடிவு செய்தனர்.
அடுத்து வருவது, போதிதர்மரின் பெயர். போதிதர்மரின் இயர் பெயர் என்ன?
போதிதாராவா? தெரியவில்லை. போதிதர்மரின் இயற்பெயர் யாருக்கும் தெரியாது. ஆனால் அவர் இளம்வயதில் போதிதாரா என அழைக்கப்பட்டார் எனும் குறிப்புகள் மட்டும் தான்லின் (Tánlín) என்பவரின் நூலில் உள்ளன. அதேவேளையில், போதிதர்மரின் ஆசிரியரின் பெயர் ப்ரஜ்னதாரா. ஒருவேளை அவர் ஆசிரியரின் பெயரில் இருந்து போதிதாரா என்ற பெயர் வந்திருக்கக் கூடும் என்னும் வாதமும் உண்டு.
மேலும் போதிதர்மரின் தோற்றம் குறித்து இன்னும் பல கருத்துகள் நிலவுகின்றன. அவர் பாரசீக நாட்டைச் சார்ந்தவர் என்றும், தென் இந்தியாவின் பிராமணகுல மன்னனின் புதல்வர் என்றும் அவரது சமகாலத்தில் வாழ்ந்த சீன சரித்திர ஆசிரியர்கள் பதிவு செய்துள்ளனர். இந்த முரண்பாடுகளில் இருந்து இன்றைய சரித்திர ஆசிரியர்கள் ஓர் உண்மையை நிறுவுகின்றனர். ‘போதிதர்மர் பல்லவரே’, என்று!
எப்படி? மூவேந்தர்களின் வரலாற்றைப்போல் பல்லவர்களின் வரலாறு எளிமையானதல்ல. மிக மிகச் சிக்கலானது. பல்வேறு ஆராய்ச்சிகளுக்குப் பின் இன்று சரித்திர வல்லுனர்கள் பல்லவர் தமிழர் இல்லை எனும் முடிவுக்கு வந்துள்ளனர். ஆனால், பல்லவர் எங்கிருந்து வந்தனர் என்ற குழப்பம் மட்டும் இன்னும் தீர்ந்தபாடில்லை.
வேங்கி நாடு, ஈழம், பாரசீகம், கோதாவரி, கிருஷ்ணா நதிகளுக்கிடையிலான வேங்கி நாட்டில் வாழ்ந்த தெலுங்கு பேசும் பிராமண குடிகளே பல்லவர் என்பது ஒரு கருத்து.
சோழ மன்னனுக்கும் ஈழத்தீவில் வாழ்ந்த நாகர் இனப்பெண் ஒருவருக்கும் பிறந்த வம்சம் பல்லவர்களுடையது. தற்போது, ஈழத்தில் உள்ள மணித்தீவே (மணிபல்லவத் தீவு, நயினா தீவு, நாகத்தீவு போன்றவை இத்தீவின் பிற பெயர்கள்) பல்லவர்களின் பூர்வீகம். ஆகவே அவர்கள் தமிழ் மரபினர் என்றும் ஒரு சிலர் நம்புகின்றனர்.
இது எதுவுமே உண்மை இல்லை. பல்லவர்கள் பாரசீக ‘பஹல்வர்’ மரபினர். நாடோடிகளாகத் திரிந்த அவர்கள் பாரசீகத்திலும், வடஇந்தியாவிலும் வலுவான அரசுகள் செயல்பட்டதால் தென் இந்தியாவுக்குள் புகுந்தனர். பஹல்வரின் எரிதழல் சின்னத்தை பல்லவர்கள் தங்கள் சின்னமாகக் கொண்டிருந்தததையும் பிராகிருதம், சமஸ்கிருதம் போன்ற இந்தோ-ஆரிய மொழிகளை ஆட்சி மொழியாகக் கொண்டிருந்ததையும் இதற்குத் தக்க சான்றாய் காண்பிக்கிறார்கள். இவை போக இவர்களிடத்தில் இன்னும் பல சான்றுகள் வேறு உள்ளனவாம்.
பல்லவர் தோற்றம் குறித்த நிலையற்ற தன்மை போதிதர்மரின் தோற்றதிலும் எதிரொலிப்பதை உணரலாம். வேற்றுமையில் ஒரு விசித்திர ஒற்றுமை இது. இதனை வைத்துக்கொண்டு தான் போதிதர்மர் பல்லவரே என்று கற்பூரம் அடிக்காத குறையாக சத்தியம் செய்கிறார் பிரபல வரலாற்று ஆராய்ச்சியாளர் ஜெஃப்ரி பிராடன்.
போதிதர்மர் பல்லவர்தான் என்பதை நிரூபிப்பதற்கு மற்றொரு சான்றும் உள்ளது. போதிதர்மர் காலத்திய சீன ஆசிரியர்கள், போதிதர்மர் காங்சீ (Kang-Chi) எனும் ஊரைச் சார்ந்தவர் என்று குறிபிட்டுள்ளனர். இந்தப் பெயர் காஞ்சி என்பதன் சீன திரிபுபோல் தென்படுவதைக் காணலாம்.
மொத்தத்தில் போதிதர்மர் காஞ்சிபுரத்தில் ஐந்து அல்லது ஆறாம் நூற்றாண்டில் அரசாண்ட பல்லவ மன்னனின் மூன்றாம் மகன். இதுவே கம்பே (Tsutomu  Kambe), ஸ்வெலிபில் (Zvelebil), டுமோலின் (Dumoulin), மெக் ரே (McRae) ஆகிய பெரும்பான்மை ஆசிரியர்கள் ஒப்புக்கொள்ளும் போதிதர்மர் பற்றிய பொதுவான ஒற்றை வரி அறிமுகம்.
இவை அனைத்துக்கும் சிகரமாக பிரபல கிறிஸ்தவ இறையியல்வாதியான ஹென்ரிச் டுமோலின் (Heinrich Dumoulin, S.J) போன்ற தற்கால ஆய்வாளர்கள் ஒரே வரியில் போதிதர்மர் எனும் நபரே கற்பனை என கூறிவருகின்றனர். ஆனால், இவர்களது கருத்து கிறிஸ்தவ மதத்துக்கு ஆதரவாக இருப்பதைப்போல் தெரிவதால், இவர்கள் கூறுவனவற்றை நம்ப யாரும் தயாராக இல்லை என்பதே உண்மை.
இவை தவிர போதிதர்மரின் தெளிவான இளம்பருவ வரலாறு என்று எதுவும் கிடைக்கவே இல்லை. ஆனால் எவ்வாறு அவருடைய வாழ்க்கையின் பிற்பகுதிக்கேற்ப அவர் இளம்பருவத்தைச் சிலர் கட்டமைத்தார்கள் என்பதை சில ஆசிரியர்களின் குறிப்புகளின் மூலம் அரிய வருகிறோம்.
இளவரசனாக இருந்த போதிதர்மர் தனது இளம்பருவத்தை பௌத்த மதத்தை கற்றுக்கொள்வதில் செலவழித்திருக்கிறார். பௌத்தத்தின்மீது ஈர்ப்பு ஏற்பட்டு, பின்னர் காதலாக முற்றி துறவறம் வரை அதுவே அவரை இட்டுச் சென்றுள்ளது என்பதை மட்டும் இங்கு தெளிவாகக் கூறலாம். எப்படி அவருக்கு பௌத்தத்தில் ஈர்ப்பு வந்தது என்பது தெரியவில்லை. ஆனால் ஏன் துறவறம் மேற்கொண்டார் என்பதற்கு வெவ்வேறு வகையான கருத்துகள் உள்ளன. அதற்கு முன் பௌத்த மதம் பற்றி சில விஷயங்களைத் தெரிந்துகொள்ளலாம்.
(தொடரும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக