வியாழன், 23 ஆகஸ்ட், 2012

1.40 லட்சத்துக்கு குழந்தை விற்பனை: 5 பேர் கைது

சென்னை: கூலித் தொழிலாளியிடம் ஆசை வார்த்தை கூறி, அவரது குழந்தையை, 1.40 லட்சம் ரூபாய்க்கு விற்ற ஐந்து பேரை, போலீசார் கைது செய்தனர்.
அம்பத்தூர் பானு நகரைச் சேர்ந்தவர் சுகுணா சரஸ்வதி, 70. தற்போது, திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டில் வசிக்கிறார். இவர் மகன், கோபாலகிருஷ்ணனுக்கு திருமணமாகி, 10 ஆண்டுகளாகியும், குழந்தை இல்லை. இதையடுத்து, குழந்தையை தத்தெடுக்க விரும்பினார். இது குறித்து, அம்பத்தூர் ஞானமூர்த்தி நகரைச் சேர்ந்த, ஆனந்தன் மனைவி சித்ராவிடம், 28, சுகுணா சரஸ்வதி கூறியுள்ளார். சித்ரா, தனக்கு தெரிந்த நபர் ஒருவர், சேலத்தில் இருப்பதாகவும், அவர் மூலம் குழந்தைக்கு ஏற்பாடு செய்வதாகவும் கூறியுள் ளார். கடந்த மார்ச், 17ம் தேதி, சுகுணாவிடம், 1.40 லட்சம் ரூபாய் பணம் வாங்கி, குறை பிரசவத்தில் பிறந்து, 25 நாட்களே ஆன, ஒரு கிலோ எடையுள்ள ஆண் குழந்தையை, சித்ரா கொடுத்துள்ளார். இந்த குழந்தையை, மருத்துவரிடம் காண்பித்தபோது, மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து, மார்ச் 20ம் தேதி, குழந்தையை சித்ராவிடம் ஒப்படைத்து விட்டு, தான் கொடுத்த பணத்தை, சுகுணா திரும்ப கேட்டுள்ளார்.
இதில், ஐந்து பேர் சம்பந்தப் பட்டுள்ளதாகவும், பணத்தை எல்லாருக்கும் பிரித்து கொடுத்து விட்டதாகவும், சில நாட்களில் பணத்தை திருப்பித் தருவதாகவும் சித்ரா கூறியுள்ளார். ஐந்து மாதமாகியும் பணத்தை திருப்பி தரவில்லை. கடந்த சில தினங்களுக்கு முன், தற்செயலாக சித்ராவை சந்தித்த சுகுணா, பணம் கேட்டுள்ளார். அப்போது, சித்ரா, சுகுணாவை திட்டியதுடன், கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இதுகுறித்த புகாரை அடுத்து, அம்பத்தூர் எஸ்டேட் போலீசார், சித்ராவை கைது செய்து விசாரித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சேலம் மாவட்டம் தீவட்டி பட்டியைச் சேர்ந்தவர்கள் பழனிச்சாமி-கோமதி தம்பதி. பழனிச்சாமி கூலி வேலை செய்து வந்தார். இந்த தம்பதிக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்நிலையில், கடந்த பிப்ரவரி இறுதியில், கோமதிக்கு சுகப்பிரவசத்தில் வீட்டிலேயே இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளன. இரண்டும் எடை குறைவாக இருந்ததால், சேலம் அரசு மருத்துவமனையில் கோமதி மற்றும் குழந்தைகள் சேர்க்கப்பட்டனர். அப்போது, ஒரு குழந்தைக்கு இதயத்தில் ஓட்டை இருந்தது தெரிந்தது. இந்நிலையில், சேலம் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் தனியார் பாதுகாவலர் தீவட்டிப்பட்டியைச் சேர்ந்த குமார், 44, மருத்துவமனை துப்புரவாளர் ஓமலூர் பழனிவேல், 42, ஆகியோர், பழனிச்சாமியை அணுகி, அவருக்கு ஆறுதல் கூறியுள்ளனர். எங்களுக்கு தெரிந்த, குழந்தை இல்லாத தம்பதிக்கு ஒரு குழந்தையை கொடுத்து விடலாம். அவர்கள் கொடுக்கும் பணத்தை வைத்து இதய நோயால் பாதிக்கப்பட்ட குழந்தையை காப்பாற்றலாம் என ஆசை வார்த்தை கூறி, பழனிச்சாமியிடம், 25 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளனர். பின் இருவரும், குழந்தையை வாங்கி, சேலத்தை சேர்ந்த தனியார் மருத்துவமனை செவிலியர், ஷீபா ராஜகுமாரி, 32, மூலம் சித்ராவிடம் கொடுத்துள்ளனர். இதற்கு சேலத்தைச் சேர்ந்த புகழாதேவி, 48, என்பவரும் உடந்தையாக இருந்துள்ளார். இதையடுத்து, ஐந்து பேரையும் போலீசார் கைது செய்தனர். குழந்தை விற்பனையில் வேறு யாருக்கும் தொடர்புள்ளதா, இது போல் எத்தனை பேரிடம் குழந்தைகளை விற்றுள்ளனர் எனவும், விசாரணை நடத்தி வருகின்றனர்.

இரண்டு குழந்தைகளும் சாவு: இரட்டை குழந்தைகளில், இதய நோயால் பாதிக்கப்பட்ட குழந்தை, பிறந்த இரண்டு வாரத்திலேயே இறந்து விட்டது. சுகுணா சரஸ்வதி, சித்ராவிடம் திரும்ப கொடுத்த குழந்தையும், சில தினங்களிலேயே இறந்து விட்டது. இதையடுத்து, பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலை அருகே உள்ள ஒரு முட்புதரில், அந்த குழந்தையை வீசியதாக, சித்ரா தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக