புதன், 22 ஆகஸ்ட், 2012

இட ஒதுக்கீடும் தினமணி வைத்தி மாமாவின் மனுதர்ம விஷமும்!

இட ஒதுக்கீடு தொடர்பான ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் ஆகிய இரு மாநில வழக்குகளில் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம், பதவி உயர்வில் இட ஒதுக்கீடு என்பது அரசியல் சட்டத்துக்கு முரணானது என்று அறிவித்திருக்கிறது. இதைத் தொடர்ந்து அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டப்பட்டு தாழ்த்தப்பட்டோர்-பழங்குடியினருக்கு பதவி உயர்வில் சலுகைகள், விதித்தளர்வுகள் செய்யலாம் என்று 82வது சட்டதிருத்தம் கொண்டு வந்ததை மன்மோகன்சிங் சுட்டிக்காட்டினாராம்.
தற்போது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பிறகு மீண்டும் ஒரு சட்டதிருத்தம் தேவை என்ற கோரிக்கை எழுந்திருப்பதைக் கண்டுதான் தினமணிக்கு கவலை. வைத்தி மாமா சாராமாகக் கூறுவதனைப் பார்க்கலாம்.

அதாவது கல்வி, வேலை வாய்ப்பில் மட்டும் இட ஒதுக்கீடு இருக்கலாமாம். ஆனால் பதவி உயர்வு என்று வரும் போது இட ஒதுக்கீடு தருவது முறையற்றது என்கிறார் வைத்தி. அரசு ஊழியர் என்பவர் சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டவர் என்பதால் அவரை அப்படி சாதி ரீதியான ஊழியராகக் கருதி பதவி உயர்வு தருவது அறமல்ல என்றும் கூறுகிறார். இதன்படி ஆதிதிராவிடர் நலத்துறைக்கு எந்த சாதி அதிகாரியும் வரலாமாம். இந்து அறநிலையத்துறைக்கு ஒரு நாத்திகரோ, இசுலாமியரோ கூட வரலாம் – ஆனால் நடைமுறை சங்கடங்களை கருத்தில் கொண்டு அப்படி இல்லை என்பதையும் வைத்தி ஒத்துக் கொள்கிறார்.
அடையார் போட் கிளப்பில் வசிக்கும் ஒரு பார்ப்பனரோ இல்லை சைவ வேளாளரோ, கோவையில் தொழில் குடும்பத்தில் பிறந்த ஒரு நாயுடுவோ இல்லை கொங்கு வேளாளக் கவுண்டரோ ஆதி திராவிடர் நலத்துறைக்கு வந்தால் என்ன நடக்கும்? முதலில் சாதி ரீதியான கொடுமைகளையும், அவற்றின் பரிணாமங்களையும் இத்தகைய ஆதிக்க சாதி அதிகாரிகள் அறியாத போது, அத்தகைய ஆதிக்கத்தையெல்லாம் இயற்கை நீதி என்பதாக நம்பிக் கொண்டு வாழும் இவர்கள் எங்கனம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நலத்திட்டங்களை கொண்டு போவார்கள்?
அவ்வளவு ஏன்? பரமக்குடி துப்பாக்கி சூட்டில் தலித் மக்களின் உயிரை பறித்தவர்கள் எல்லாரும் ஆதிக்க சாதி போலீஸ் அதிகாரிகள்தானே? அந்த அதிகாரிகள் அனைவரும் தாழ்த்தப்பட்ட சாதிகளாய் இருந்திருந்தால் அப்படி ஒரு துப்பாக்கி சூடு நடந்திருக்குமா? இங்கு சாதி மட்டுமல்ல வர்க்கமும் கூட இணைந்திருக்கிறது. குக்கிராமத்தின் ஏழை ஒருவர் அரசு மருத்துவராக பணியாற்றுவதற்கும், அமெரிக்கா போவதற்காக அரசு மருத்துவராக பயிற்சி எடுக்கும் ஒரு பணக்காரரும் எப்படி வேலை செய்வார்கள்? இதில் ஏழைகளின் பால் இயல்பாகவே நாட்டம் கொள்வது யாரிடம் இருக்கும்?
சரி அரசு ஊழியர்கள் அனைவரும் சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டவர்கள்தானே? எனில் இந்திய அரசின் உளவுத் துறை ரா, ஐ.பி, இந்திய இராணுவம், சி.பி.ஐ போன்றவற்றுக்கு இதுவரை முசுலீம்கள் யாராவது பதவி வகித்திருக்கிறார்களா? என் இல்லை? குறைந்த பட்சம் தீண்டாமையை கடைபிடிப்பவர்களுக்கு அரசு பதவி இல்லை என்று கொண்டு வந்தாலே முக்கால்வாசி அதிகாரிகளை நீக்க வேண்டியிருக்கும். இதெல்லாம் மாலை நேர விழாக்களில் மொக்கை போடும் வைத்தி மாமா அறியமாட்டார்.
தாழ்த்தப்பட்ட மாணவனுக்கு கல்வியில் இட ஒதுக்கீடு கொடுப்பதைத் தாண்டி தேர்வு, மதிப்பெண்ணில் அவனுக்கு சலுகை கொடுப்பது நியாயமில்லை என்கிறார் வைத்தி. அதன்படி தற்போது பொறியியல், மருத்துவ படிப்புகளுக்காக குறைவாக இருக்கும் கட்ஆப் மதிப்பெண்ணை பொதுப்பிரிவோடு சேர்க்க வேண்டும் என்பதுதான் அவரது உட்கிடை.
இட ஒதுக்கீடு இல்லாத துறைகளில் ஊழல் நடந்திருக்கிறதே, அதன் காரணம் என்ன? அர்ஷத் மேத்தா ஊழல் முதல் ஆதர்ஷ், நிலக்கரி ஊழல் வரை குற்றவாளிகள் அனைவரும் ‘மேல்’ சாதி, மேட்டுக்குடியினரைச் சார்ந்தவர்கள்தானே? ‘திறமை’ மூலம் முன்னுக்கு வந்தவர்கள் ஏன் ஊழல் செய்ய வேண்டும்?
அரசுத் துறைகளில் எஸ்.எஸ்டி ஊழியர்கள் சங்கத்தை உருவாக்கி அரசு இயந்திரத்தில் தேவையற்ற பாகுபாட்டை உருவாக்குபவர்கள் அரசியல்வாதிகள் என்று சாடுகிறார் வைத்தி. இதன்படி வன்னியர்கள் சங்கம், கிறித்தவ, முசுலீம்கள் ஊழியர் சங்கம் என்று பிளவுண்டு போனால் அரசு இயந்திரம் எப்படி இயங்கும் என்றும் கவலைப்படுகிறார்.
முதலில் தாழ்த்தப்பட்டவர்களது சங்கங்கள் அரசு அலுவலங்களில் இருக்கும் தீண்டாமை காரணமாகவே தோன்றுகின்றன. என்றாலும் அவற்றை அப்படி உருவாக்கி வளர்த்து விடுவதை எல்லா நிர்வாகங்களும் தனிக் கவனம் கொடுத்து செய்கின்றன. ஊழியர்கள், தொழிலாளர்கள் வர்க்க ரீதியில் ஒன்று சேரக்கூடாது என்ற காரணத்திற்காகவே தாழ்த்தப்பட்டோருக்கான சங்கங்கள் ஆளும் வர்க்கங்களால் ஆதரவுடன் பராமரிக்கப்படுகின்றன.
ஆனால் பார்ப்பனர்கள், வேளாளர்கள், தேவர்கள், நாயுடுக்கள் போன்றோருக்கு சங்கங்கள் இல்லை என்றாலும் அவர்களெல்லாம் சாதி ரீதியாகத்தான் செயல்படுகின்றனர். ஒரு அரசு அலுவலகத்தின்  தேநீர் கடையில் பேசினாலே அந்த சாதி அரசியலை கண்டு பிடிக்க முடியும்.
ஆக இட ஒதுக்கீட்டை தகுதி, திறமை என்ற பெயரில் எதிர்க்கும் ஆதிக்க சாதியினரின் வாதங்களைத்தான் வைத்தியும் முன்வைக்கிறார். ஆனாலும் பூணூலை மறைக்க முடியவில்லையே?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக