வெள்ளி, 20 ஜூலை, 2012

kamal Hassan:ராஜேஷ் கன்னாவைப் போல வாழ்ந்தவர் யாருமில்லை..

Rajesh Khanna Was World S Star Hai
ராஜேஷ் கன்னாவைப் போல புகழுடன் வாழ்ந்து மறைந்தவர்கள் யாருமில்லை. அவருக்குக் கிடைத்ததைப் போன்ற திரை வாழ்க்கை சில நடிகர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்று நடிகர் கமல்ஹாசன் புகழாரம் சூட்டியுள்ளார்.
கமல்ஹாசனுக்கும், ராஜேஷ் கன்னாவுக்கும் இடையிலான உறவு திரையுலகில் மிகப் பிரபலமானது. கமல்ஹாசன் நடித்துப் பிரபலமான படங்கள் சிலவற்றின் ரீமேக்கில் ராஜேஷ் கன்னா நடித்துள்ளார். அதை விட முக்கியமானது கமல்ஹாசனின் முதல் இந்தித் திரைப்படத்தில் ராஜேஷ் கன்னா கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார்.
தமிழில் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் அரங்கேற்றம். கமல்ஹாசன் விடலைப் பையன் நிலையிலிருந்து உருமாறி நின்றபோது நடித்த முதல் பெரிய படம் இதுதான். இந்தப் படம் பின்னர் ஆய்னா என்ற பெயரில் இந்திக்குப் போனது. அதிலும் கமல்ஹாசன் நடித்திருந்தார். அதில் ராஜேஷ் கன்னா - மும்தாஜ் இணைந்து நடித்திருந்தனர்.
ஆய்னா படத்தில் கமல்ஹாசன் நடன வடிவமைப்பாளராகவும் பணியாற்றியிருந்தார்.
அந்த அனுபவத்தை கமல் கூறும்போது, ஆய்னாவில் நான் நடித்தபோது வளரும் நடிகன் என்ற நிலையில் இருந்தவன் நான். ஆனால் அப்போதே பெரிய சூப்பர் ஸ்டாராக விளங்கியவர் ராஜேஷ் கன்னா. அவர் அப்போது இந்திய அளவில் மிகப் பெரிய நடிகராக, ஏன் உலக நடிகராக விளங்கினார்.
ஆய்னாவில் நான் நடித்தபோது எனக்கு நிறைய டிப்ஸ் கொடுத்தார். தட்டிக் கொடுத்தார். ஊக்கப்படுத்திப் பேசினார். நட்புடன் பழகினார். என்னிடம் உள்ள திறமை, அது மிகச் சிறிதாக இருந்தாலும் அதை புகழ்ந்து பேசினார். எனது படங்கள் சிலவற்றில் பின்னர் இந்தி ரீமேக்கில் அவர் நடித்தபோது எனக்குப் பெருமையாக இருந்தது என்றார் கமல்.
கமல் மேலும் கூறுகையில், ராஜேஷ் கன்னாவைப் போல புகழும், பெருமையும், செல்வாக்கும் மிக்க நடிகர்கள் வெகு சிலர்தான் உள்ளனர். இப்போதும் சரி, எப்போதும் சரி ராஜேஷ் கன்னாவைப் போன்ற வாழ்க்கை வெகு சிலருக்குத்தான் கிடைக்கும் என்றார் கமல்.
கமல்ஹாசனின் அரங்கேற்றம் தவிர சிகப்பு ரோஜாக்கள் உள்ளிட்ட படங்களின் ரீமேக்கிலும் ராஜேஷ் கன்னா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக