கர்நாடக மாநிலம் மட்டூர் அருகே சென்று
கொண்டிருந்த யஷ்வந்த்பூர்-மைசூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த 19 வயது
அனாதைப் பெண்ணை 4 வாலிபர் ரயிலில் இருந்து கீழே தள்ளியுள்ளனர்.
கர்நாடக
மாநிலம் மைசூரில் உள்ள வித்யாரன்யபுரத்தைச் சேர்ந்தவர் 19 வயது
திவ்யா(பெயர் மாற்றப்பட்டுள்ளது). தாய், தந்தை இல்லாத அவர் தனது
பாட்டியுடன் வசித்து வருகிறார். அவர் பெங்களூரில் உள்ள ஹிந்துஜா கார்மென்ட்
பேக்டரியில் டெய்லராக உள்ளார். நேற்று அவர் பெங்களூரில் உள்ள கெங்கேரியில்
யஷ்வந்த்பூர்-மைசூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் சொந்த ஊருக்கு புறப்பட்டார்.அவர் ரயிலில் ஏறியதில் இருந்தே 4 வாலிபர்கள் அவரை கிண்டல் செய்வதும், வம்பிலுப்பதுமாக இருந்தனர். இதையடுத்து அவர் ரயிலின் வாசல் அருகே சென்று நின்று கொண்டார். அப்போது அந்த வாலிபர்கள் அவரைப் பின் தொடர்ந்து சென்று சில்மிஷம் செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த அவர் போலீஸில் புகார் செய்வேன் என்று கூறினார்.
உடனே அந்த வாலிபர்கள் அவரை ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டனர். ரயில் சிம்சா ஆற்றின் மேல் உள்ள கொல்லி பாலத்தில் சென்றபோது அவரைத் தள்ளிவிட்டதால் அவர் ஆற்றுப்படுக்கையில் விழுந்தார். இதில் அவரது முதுகெழும்பு, கால்கள், தலையில் காயம் ஏற்பட்டது. இதைப் பார்த்த பயணி ஒருவர் மட்டூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து மாண்டியா போலீசார் 2 வாலிபர்களை கைது செய்தனர். அதன் பிறகு மேலும் 2 வாலிபர்கள் பாண்டவபுராவில் கைது செய்யப்பட்டனர். கைதான அக்பர், இம்ரான், ஷுபான், அகமது ஆகியோர் மைசூரில் உள்ள கல்யாணகிரியைச் சேர்ந்தவர்கள்.
காயமடைந்த திவ்யா மாண்டியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திவ்யாவை தள்ளிவிட்டபோது ரயில் மெதுவாகச் சென்றதால் தான் அவர் உயிர் பிழைத்துள்ளார் என்று போலீசார் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக