இதுவா வளர்ச்சி? ஜெ.வுக்கு கலைஞர் கண்டனம்
தி.மு.க. தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:முதல் அமைச்சர்
ஜெயலலிதாவின் 23-7-2012 அன்றைய அறிவிப்பு- 5 அண்ணா தொழில் நுட்பப் பல்கலைக்
கழகங்களையும் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன் ஒருங்கிணைத்து ஒரே பல்கலைக்
கழகமாக ஆக்கப் போகிறார்களாம்!
தி.மு.கழக ஆட்சியினால்
எடுக்கப்பட்ட முற்போக்கு முடிவுகளையெல்லாம் மாற்ற வேண்டுமென்ற ஒரே
நோக்கத்துடன் செயல்படுகின்ற ஜெயலலிதா, மாணவர்களின் கல்வியிலும் தலையிட்டு
தமிழகத்தின் வருங்காலச் சந்ததிகளைப் பாதிக்கும் செயலில் ஈடுபடுவதுதான்
மிகுந்த வேதனையாக உள்ளது.
இந்த வரிசையில்
தி.மு.கழக ஆட்சியிலே 5 இடங்களில் அண்ணா பெயரில் தொழில்நுட்பப்
பல்கலைக்கழகங்கள் என்றவுடன், அதனால் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும்
உள்ள மாணவர்கள் பெருமளவுக்குப் பயன்பெறுவார்களே என்ற எண்ணம் வராமல்,
அண்ணாவின் பெயரை ஐந்து இடங்களில் இல்லாமல் செய்து விட்டேன், பாருங்கள்
என்று செயல்படுகிறார்.
இப்படித்தான் கடந்த
ஆண்டு ஆட்சிக்கு வந்ததும் வராததுமாக சமச்சீர் கல்வித் திட்டத்தை ஏற்க
முடியாது, அந்தப் பாடத் திட்டப் புத்தகங்களையெல்லாம் தூக்கியெறிய
வேண்டுமென்று பள்ளிக் கல்வி பாழாகிடும் வகையிலே செயல்பட்டார்.நல்லவேளையாக
நீதிமன்றம் மிகுந்த கவனத்தோடு செயல்பட்ட காரணத்தால் சமச்சீர் கல்வித்
திட்டம் பிழைத்தது.
அந்த வரிசையில்தான் தற்போது பொறியியல் உயர் கல்வியின்
தரத்தை மேம்படுத்திடும் 5 அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக் கழகங்களையும்
ஒன்றாக ஒருங்கிணைக்கப் போகிறேன் என்கிறார். மற்றவர்கள் எல்லாம்
ஆக்குகின்ற முயற்சியிலே ஈடுபடுகிறார்கள் என்றால் இவர் மட்டும்தான்
அழிக்கின்ற முயற்சியிலே ஈடுபடக்கூடிய ஆற்றலுடையவர் (?) என்பதை மெய்ப்பிக்க
முயலுகிறாரோ? பல்கலைக் கழகங்கள் மாநிலத்தின் வெவ்வேறு பகுதிகளில் அமைவதால் அந்தந்தப் பகுதிகளிலும் தனித்தனியாக தொழில் வளர்ச்சியடையும். மேலும் பல மாணவ-மாணவியர் அவரவர் பெற்றோர்களுடன் தங்கி உயர் கல்வி கற்கும் வாய்ப்பைப் பெறலாம். இதனால் மாணவர்களுக்குப் பாதுகாப்பும், ஆரோக்கியமான உணவும், இருப்பிடமும், மன அமைதியும் அதிக அளவில் கிடைப்பதால், அவர்களின் அறிவு வளர்ச்சி ஆராய்ச்சியிலும் மற்ற முன்னேற்றத்திற்காகவும் உறுதுணையாக அமைகின்றன. அந்தந்த மாவட்டம் மற்றும் மாநிலங்களிலே தொழிற்சாலைகள் வளர்ச்சி அடைவதால், சென்னை மாநகரில் ஏற்படும் மக்கள் தொகை நெரிசல் குறையும். ஒரு பல்கலைக் கழகத்துடன் சுமார் 100 கல்லூரிகள் வரையில் இணைவிக்கப்படலாம் என்றுதான் பல்கலைக் கழக மானியக் குழு கூறியுள்ளது. ஆனால் தற்போது ஜெயலலிதா எடுத்துள்ள முடிவின்படி 571 கல்லூரிகள் அண்ணா பல்கலைக் கழகத்துடன் இணைவிக்கப்படவுள்ளன. இதனால் அண்ணா பல்கலைக் கழகத்திற்கு நிர்வாகச் சுமை அதிகரிக்கும். அங்குள்ள ஆசிரியர்கள் ஆராய்ச்சிப் பணியில் கவனம் செலுத்த முடியாது. தென் மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். இவ்வாறு கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக