ஞாயிறு, 29 ஜூலை, 2012

அடுத்த ”கசப்பு மருந்து” – தண்ணீர் வெட்டு!


    ‘சென்னை மக்களுக்கு வினியோகித்து வரும் தண்ணீர் அளவில் 25 சதவீதம் வரை குறைக்கப்படும்’ என சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்ததாக டெக்கான் குரோனிக்கிள் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. பால் விலையேற்றம், பேருந்து கட்டண விலையேற்றம், மின் கட்டண உயர்வு, மின் வெட்டு என்று நாட்டின் வருங்கால நலன் கருதி கசப்பு மருந்தை கொடுக்கும் ஜெயாவின் ஆட்சியில் மக்கள் முழுங்க வேண்டிய அடுத்த கசப்பு மருந்து,‘தண்ணீர் வெட்டு’. சென்னை நகருக்கு ஒரு நாளைக்கு 250 மில்லியன் லிட்டர் தண்ணீர் வழங்கி வந்த வீராணம் ஏரி வற்றிப் போய் விட்டது. செம்பரம்பாக்கம், சோழவரம், பூண்டி, புழல் நீர்த்தேக்கங்களில் நீரின் அளவு சுமார் 30 சதவீதம்தான் உள்ளது. இதனால் வரும் மாதங்களில் ஏற்படப் போகும் பற்றாக் குறையை சமாளிக்க நகரின் சில பகுதிகளில் அதிகார பூர்வமாக அறிவிக்காமல் தண்ணீர் வினியோகத்தின் அளவை 25 சதவீதம் குறைத்து விட்டதாக சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் சொல்கின்றனர்.

    தண்ணீர்-வெட்டுஇந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை குறைவாக பெய்வதாலும் வடகிழக்கு பருவ மழை சராசரியை விட குறைவாகவே பெய்யும் என்று மதிப்பிடப்படுவதாலும் இந்த நிலைமை என்று காரணம் சொல்லப்படுகிறது. இந்திய விவசாயத்தை பருவக்காற்றுகளின் சூதாட்டம் என்று சொல்வது போல அடிப்படைத் தேவையான குடிநீர் வினியோகமும் ‘பருவமழையின் சூதாட்டமாக’ மாறியிருக்கிறது. உண்மையில் இது இயற்கை மட்டும் நம்மை வஞ்சிக்கும் பிரச்சினையா?
    ‘கடந்த 139 வருடங்களில் பருவ மழை ஒரு தடவை கூட வராமல் இருந்ததில்லை என்றும் எல்லா ஆண்டுகளிலும் சராசரியில் 60 சதவீதத்துக்கு குறையாமல் மழை பெய்துள்ளது’ என்றும் இந்து நாளிதழில் ஜூலை 26-ம் தேதி வெளியாகியுள்ள அறிக்கை சொல்கிறது. ஆனால், மழைக் காலத்தில் வெள்ளமும் மற்ற மாதங்களில் தண்ணீர் பற்றாக்குறையும் என்பதுதான் சென்னை நகர மக்களுக்கு வாடிக்கையாக இருக்கிறது.
    இதற்கு காரணம் மக்கள் நலனில் அக்கறை இல்லாமல், அடிப்படை கட்டமைப்புகளை புறக்கணித்து, தனியார் நிறுவனங்களுக்குத் தேவையான வசதிகளை உருவாக்குவதில்  மட்டுமே கவனம் செலுத்தும் அரசு கொள்கைகள்தான்.
    கடந்த 40 ஆண்டுகளில் சென்னை நகரில் வாழும் மக்களின் எண்ணிக்கை மூன்று மடங்காகியிருக்கிறது. தகவல் தொழில் நுட்பத் துறை வளர்ச்சியால் பெரிய கட்டிடங்கள் கட்டுவதற்கு இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்து வரும் தொழிலாளர்கள், தகவல் தொழில் நுட்பத்துறையில் பணி செய்யும் ஊழியர்களின் குடியிருப்புகள், மேட்டுக் குடியினருக்கு தேவைப்படும் ஐந்து நட்சத்திர தரத்திலான கேளிக்கை வசதிகள் இவை அனைத்துக்கும் சேர்த்து நீர் தேவையை பல மடங்கு அதிகரித்திருக்கிறது.
    சென்னை போன்ற பெருநகரில் ஒரு நபருக்கு 135 லிட்டர் ஒரு நாளைக்கு வழங்கப்பட்ட வேண்டும் என்பது மத்திய பொது சுகாதார நிறுவனத்தின் பரிந்துரை. அந்த கணக்கின்படி சென்னை நகருக்கு வழங்கப்படும் குடிநீரின் அளவு கடந்த நாற்பது ஆண்டுகளில் மூன்று மடங்காகியிருக்க வேண்டும். அது நடக்கவில்லை என்பதோடு, இருக்கும் குடிநீர் வளங்களும் அழிக்கப்பட்டிருக்கின்றன. இப்போது சென்னையின் பல பகுதிகளில் ஒரு நாளைக்கு நபருக்கு 75 லிட்டரை விட குறைவான அளவு நீரே வினியோகிக்கப் படுகிறது.
    காலம் காலமாக பருவ மழை பெய்யும் போது நீரைத் தேக்கி வைத்து மற்ற நாட்களில் பயன்படுத்துவதற்காக உருவாக்கி வைத்திருந்த நீர் நிலை ஆதாரங்கள் நகரமயமாக்கம் என்ற பெயரில் அழிக்கப்பட்டிருக்கின்றன. தகவல் தொழில் நுட்பத்துறை வருமானத்தால் ஏற்றி விடப்பட்ட வீட்டு வாடகை, நில விலை ஏற்றம் காரணமாக பல ஏரிகள் நிரப்பப்பட்டு குடியிருப்புகளாக மாற்றப்படுவது வெகு வேகமாக நடந்து முடிந்திருக்கிறது.
    1978-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட சென்னை குடிநீர் வாரியத்திடம் பொதுப்பணித்துறை ஒப்படைத்த 29 ஏரிகளின் மொத்த நீர் தேக்கப் பரப்பில் 75 சதவீதம் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது. முகப்பேர், வளசரவாக்கம், விருகம்பாக்கம், கொளத்தூர், செந்நீர்குப்பம், ஆதம்பாக்கம், உள்ளகரம், தாம்பரத்தில் இருக்கும் தலக்கன்சேரி ஆகிய இடங்களில் இருக்கும் ஏரிகள் முழுவதும் ஆக்கிரமிக்கப்பட்டு இல்லாமல் ஆகி விட்டிருக்கின்றன. தாம்பரம் புதுத்தாங்கல் ஏரியில் 93 சதவீதம் ஆக்கிரமிக்கப்பட்டு வெறும் 7 சதவீதம் மட்டுமே குடிநீர் வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. வேளச்சேரி ஏரியின் மொத்த பரப்பளவில் 77 சதவீதம் ஆக்கிரமிப்புகளால் இல்லாமல் போயிருக்கிறது.
    பெருகி வரும் நகரத்துக்கு தேவையான புதிய நீர் வளங்களை உருவாக்கும் முயற்சிகள் அனைத்தும் அரைகுறையாகவே முடிந்திருக்கின்றன. 1968-ல் ஆரம்பிக்கப்பட்ட வீராணம் திட்டம் பல கோடி ரூபாய் விரயத்துக்குப் பிறகு சில ஆண்டுகளிலேயே கைவிடப்பட்டது. அந்த திட்டத்திற்காக வாங்கப்பட்ட கான்கிரீட் குழாய்கள் சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு 2003-ல் ஏலம் விடப்பட்டன. 1976-ல் திட்டமிடப்பட்ட கிருஷ்ணா நதியிலிருந்து சென்னைக்கு நீர் கொண்டு வரும் திட்டத்தின் கீழ் கிடைக்க வேண்டிய மொத்த 12 டிஎம்சி நீரில் சுமார் 3 டிஎம்சி அளவே சென்னைக்கு வந்து சேருகிறது. 2004-ல் மழை நீர் சேகரிப்புத் திட்டம் கட்டிடங்களில் பெய்யும் மழை நீரை நிலத்தடி நீராக தேக்கி வைக்க ஏற்பாடுகள் செய்தாலும், பொது இடங்களிலும், சாலைகளிலும் தண்ணீர் வீணாக போவதையும், மழைக்காலங்களில் வெள்ளப் பெருக்கெடுப்பதையும் சரி செய்ய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
    தமது தேவைகளுக்கான நீரை அடுக்குமாடி குடியிருப்புகளும், தனியார் நிறுவனங்களும் ஆள் துளை கிணறுகள் மூலம் நிலத்தடி நீரை உறிஞ்சி நிறைவு செய்து கொள்கின்றன. இதன் விளைவாக 1990க்குப் பிறகு சென்னையின் நிலத்தடி நீர் மட்டம் 4 மீட்டர் அளவு இறங்கி விட்டிருக்கிறது. மேலும் மேலும் தண்ணீரை இறைப்பதன் விளைவாக நிலத்தடி நீரில் குளோரைடின் அளவு பரிந்துரைக்கப்பட்ட அதிக பட்ச வரம்பை விட இரண்டு மடங்கு இருக்கிறது. புளோரைடும் நைட்ரேட்டும் பரிந்துரைக்கப்பட்ட அளவை தாண்டி விட்டிருக்கின்றன.
    பல இடங்களில் ஆழ்துளை கிணறுகள் மூலம் எடுக்கும் தண்ணீர் குடிப்பதற்கு லாயக்கில்லாத நிலைமை உள்ளது. இதே நிலை தொடர்ந்தால் அத்தகைய நீரும் கிடைக்காத நிலைமை ஏற்பட்டு விடும்.

    பருவ மழை குறைவாக பெய்வதால் ஏற்படும் குறுகிய கால தட்டுப்பாட்டிலும் சரி, நீண்ட கால நோக்கிலான தண்ணீர் இல்லாமையிலும் சரி, பாதிக்கப்படப் போவது பொதுமக்கள் மட்டும்தான். மேலும் மேலும் குறைந்து கொண்டே போகும் தண்ணீர் வளங்களை சுட்டிக் காட்டி ‘தண்ணீரை விற்பனை பண்டமாக ஆக்குவதன் மூலம், தகாத முறையில் தண்ணீரைப் பயன்படுத்துவதும் விரயமாக்குவதும் குறையும்’ என்கிறது மத்திய அரசின் தேசிய நீர்க் கொள்கை. என்ன விலை கொடுத்தும் வாங்க பணம் வைத்திருக்கும் ஐந்து நட்சத்திர விடுதிகளுக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும், அமைச்சர்களின் வீடுகளுக்கும் தேவையான தண்ணீர் தேவையான அளவு கிடைத்துக் கொண்டிருக்கும். ஆனால் பெரும்பான்மை மக்களுக்கு தண்ணீர் வினியோகம் குறைக்கப்படும்.
    மறுகாலனியாக்கத்தின் மூலம் நம் நாட்டை கொள்ளையடித்து விற்றுக் கொண்டிருக்கும் தனியார் நிறுவனங்களுக்கு கனிம வளங்களை வெட்டி விற்பது என்பது குறுகிய கால லாபத்தை கொடுப்பதுதான். ஆனால் தண்ணீர், மருத்துவம், போக்குவரத்து, கல்வி, மின்சாரம் இவையெல்லாம் வற்றாத லாபம் தரும் வளங்கள். நாட்டில் உள்ள 100 கோடி பேரும் தண்ணீர் குடிக்க வேண்டும், மருத்துவம் பார்த்துக்கொள்ள வேண்டும், பயணம் செய்ய வேண்டும், மின்சாரம் பயன்படுத்த வேண்டும், இவற்றை தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விட்டால் தலைமுறை தலைமுறையாக லாபம் சம்பாதிக்கலாம். அதனால்தான் புதுப் புது இடம் தேடி அலையும் பன்னாட்டு மூலதனம், ‘தண்ணீர் வினியோகம் உள்ளிட்ட சேவைத் துறைகளை தனியாருக்கும் பன்னாட்டு முதலீட்டாளர்களுக்கும் திறந்து விட வேண்டும்’ என்று கோரிக்கை வைத்து நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது.
    மக்கள் தாமாகவே தனியார் மயமாக்கத்தின் அவசியத்தை உணரும்படி அரசின் சேவைத் துறையை திட்டமிட்டு சீரழிக்க வைக்கிறார்கள். காலியாகும் வேலையிடங்கள் நிரப்பப்பட மாட்டாது, ஊழியர்களுக்கு சம்பள உயர்வு இருக்காது, அதிகாரிகளின் லஞ்ச, ஊழல்கள் கண்டு கொள்ளப்பட மாட்டாது. மக்களுக்கு தேவையான சேவை கிடைக்காமல் தவிக்கும் நிலைமை ஏற்படும். இப்படித்தான்’காசு கொடுத்தாலாவது தண்ணீர் கிடைத்தால் போதும்’ என்ற நிலை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
    குழந்தைகளின் கல்வி கட்டணத்துக்காக மற்ற செலவுகளை குறைத்துக் கொண்டு பள்ளிக் கட்டணம் கட்டி விடுவது போல, அவசர மருத்துவ தேவைகளுக்காக சேமிப்புகளையும் சொத்துக்களையும் முற்றிலுமாக இழந்து விடுவது போல தண்ணீருக்கும் தமது வருமானத்தின் பெரும்பகுதியை செலவழிக்க மக்கள் தயாராகிக் கொள்ள வேண்டியிருக்கும்.
    சுருங்கக் கூறின் தண்ணீர் தட்டுப்பாடு என்பது மக்கள் உருவாக்கிய பிரச்சினை என்பதாக இவர்கள் பேசி வருகிறார்கள். அதனால் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவதும், அதற்காக மக்களிடம் பிரச்சாரம் செய்வதும், உபயோகிக்கும் தண்ணீருக்கு விலை வைப்பதன் மூலம் அந்த பொறுப்புணர்ச்சியைகை கொண்டு வருவதும் வேண்டும் என்று இவர்கள் தனியார்மயத்தை நியாயப்படுத்துகிறார்கள்.
    உண்மையில் தண்ணீரை விரயமாக்குவது யார்? கால் கழுவவும், சமைக்கவும், துவைக்கவும் பொதுக்குழாயை நம்பியிருக்கும் மக்கள்தான் சென்னையில் அதிகம். இவர்களெல்லாம் விரும்பினாலும் கூட தண்ணீரை விரயமாக்க முடியாது. நினைத்த நேரத்தில் தெருக்குழாயில் வரும் நீரை காத்திருந்து பிடிப்பதில் துவங்கி பல இன்னல்களை அடையும் இம்மக்கள்தான் உண்மையில் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி வருகிறார்கள்.
    ரியல் எஸ்டேட் மூலம் ஏரிகளை சாதாரண மக்கள் வளைக்க வில்லை. கோடி ரூபாயில் விலைபேசப்படும் அப்பார்ட்மெண்டுகளிலும் அவர்கள் வசிக்கவில்லை. நட்சத்திர விடுதிகளும், பங்களாக்களும்தான் பாத்டப், நீச்சல் குளம், குளிப்பதற்கு கூட குடிநீர் என்று நீரை விரயமாக்கி வருகிறார்கள். நடுத்தர வர்க்கத்தைப் பொறுத்தவரை கேன் நீர், பாட்டில் நீர் இல்லாமல் வாழமுடியாது என்பதற்கு பழகிவிட்டார்கள். இவர்களை குறிவைத்துத்தான் தனியார்மய தண்ணீர் வியாபாரம் கொழித்து வருகிறது. இப்போது அரசே தண்ணீர் வெட்டை அறிவித்திருப்பதன் மூலம் எதிர்காலத்தில் முழு நீர்ப் பயன்பாடும் தனியார் கையில் மின் கட்டணம் போல தண்ணீர் கட்டணம் வசூலித்து செயல்படும் நிலை ஏற்படும்.
    இயற்கையான நீர் ஒரு வணிகப் பொருளாக விற்க்கப்படும் நிலை என்பது வேறு எதனையும் விட கொடூரமானது. வேறு எதற்காகவும் கூட அரசியல் போராட்டங்களை விரும்பாத ‘கண்ணியத்திற்குரியவர்கள்’ தண்ணீர் தனியார் மயத்திற்கு எதிராக போராட வேண்டும். இல்லையேல் உங்களது வருமானத்தில் கணிசமான அளவு நீருக்காக செலவிட வேண்டும். தண்ணீரிலிருந்தாவது உங்களது அரசியல் வாழ்வு ஆரம்பிக்கட்டும்.
    __________________________________________
    - செழியன்.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக