ஞாயிறு, 29 ஜூலை, 2012

சப்பாத்தி விலை ஒரு ரூபாய் சுய உதவி குழு சாதனை


ஒரு ரூபாய்க்கு சப்பாத்தி விற்கிறோம்!' குறைந்த விலையில் சப்பாத்தி விற்கும், மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த மாரியம்மா: ஓசூர் அருகில் உள்ள, கொத்தகொண்டப்பள்ளி கிராமத்தில், 400க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கிறோம். 
கிராமப் பகுதி என்பதால், படித்தவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். இங்கு, ஆண்களும், பெண்களும் விவசாயக் கூலி வேலைகளுக்குச் சென்று கொண்டிருந்தோம். வறுமையான சூழ்நிலையிலும், குழந்தைகளை படிக்க வைக்க நினைத்தோம். ஆனால், எங்களுக்கு சாப்பாட்டிற்கே கஷ்டமாயிற்றே... அதனால், கிராமப் பெண்கள், சுயமாக தொழில் செய்து முன்னேற முடிவெடுத்தோம்.
அந்த சமயத்தில் தான், "வேணுகோபால் சேவைகள் அறக்கட்டளை' சார்பில், பல கிராம மக்களுக்கு, உதவி களும், பெண்களுக்கு இலவசப் பயிற்சிகளையும் செய்து வருவது பற்றி அறிந்து, உதவி யை நாடினோம். எங்கள் ஆர்வத்தைப் புரிந்து கொண்ட அவர்கள், அனைத்துப் பெண்களுக்கும் தரமாக சப்பாத்தி தயாரிப்பது குறித்தும், அதன் வியாபார உத்திகளையும் சொல்லிக் கொடுத்து, இமாச்சலப் பிரதேசத்திலிருந்து பயிற்சியாளர்களை அழைத்து வந்து, இலவசமாக ஒரு மாதம் பயிற்சி அளித்தனர். பயிற்சி முடித்த பின், நம்பிக்கையுடன் தொழிலில் இறங்கினோம். வசதியுள்ளவர்கள் ஒரு, "செட்' சப்பாத்திக்கு, 30 ரூபாய் வரை செலவு செய்து சாப்பிடுவர். ஆனால், ஏழைகள்? அதனால், ஒரு ரூபாய்க்கு சப்பாத்தி விற்கலாம் என, முடிவு செய்து, செயலில் இறங்கினோம். வீட்டில் அதிகளவில், சப்பாத்திகளை செய்ய முடியாது என்பதால், சிறிய தொழிற்கூடத்தை நாங்களே அமைத்தோம். இதற்காக வங்கியில், நான்கு லட்சம் ரூபாய் கடன் வாங்கி, எங்களுக்குச் சொந்தமான நிலத்திலேயே, ஆறு கட்டடங்களை வெற்றிகரமாகக் கட்டி முடித்தோம். எங்கள் பகுதியில் உள்ள, ஆறு சுய உதவிக் குழுக்களையும் சேர்த்து, 110 பெண்கள் இத்தொழிலில் இன்று வரை, ஒற்றுமையாகச் செயல்பட்டு வருகிறோம். குறைந்த விலைக்கு சப்பாத்தி விற்பதால், பல கூலித் தொழிலாளிகள் வயிறும், மனமும் நிறைந்து, வாயாரப் பாராட்டுகின்றனர். அந்தப் பாராட்டு தான், எங்களை மேலும் சிறப்பாகச் செயல்பட வைக்கிறது.

வீழ்த்திய திருமணம்; நிமிர வைத்த உழைப்பு! பால்ய விவாகத்தால் பாதிக்கப்பட்டு, இன்று சாதனைப் பெண்ணாக உருவெடுத்துள்ள கல்பனா: நான் ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே, பெற்றோர் எனக்கு திருமணம் செய்து விட்டனர். கணவருடன் மும்பையில் குடியேறிய என்னை, புகுந்த வீட்டினர் கொடுமைப்படுத்தினர். எதிர்த்துப் போராட முடியாத வயதில், தற்கொலைக்கு முயன்றேன்; ஆனால், காப்பாற்றப்பட்டேன். கணவர் குடும்பத்து ஆண்களால், பாலியல் தொந்தரவுகளுக்கும் ஆளானேன். என்னைப் பார்க்க வந்த தந்தை, நான் அனுபவிக்கும் கொடுமைகளைப் பார்த்து தாங்க முடியாமல், அவருடனேயே அழைத்துச் சென்று விட்டார். பெற்றோர் வீட்டிற்கு வந்தும், எனக்கு நிம்மதி இல்லை. அக்கம் பக்கத்தினர், என்னைப் பற்றி அவதூறாகப் பேச துவங்கினர். மீண்டும் தற்கொலைக்கு முயன்றேன்; என் அத்தை காப்பாற்றி விட்டார். என் இரண்டாவது தற்கொலை முயற்சி, வாழ்வின் மீது பிடிப்பை ஏற்படுத்தியது. 16 வயதில் மீண்டும், மும்பைக்கே வந்து விட்டேன். ஒரு நிறுவனத்தில், தையல் இயந்திரங்களை இயக்கும் பணியில் வேலைக்குச் சேர்ந்தேன். என் தங்கை எனக்கு, துணையாக வந்திருந்தாள். நான் கஷ்டத்தில் இருந்த சமயம் தான், பணத்தின் மதிப்பை உணர ஆரம்பித்தேன். வங்கியில் கடன் பெற்று, சிறிய அளவில், "பர்னிச்சர்கள்' வாங்கி விற்கும் தொழில் செய்தேன். இந்த தொழில், எனக்கு இரண்டாவது திருமண பந்தத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. என் நண்பர் நடத்தி வந்த சிறிய நிறுவனம், நஷ்டத்தில் இயங்கியதால், மூட தீர்மானித்தார். அந்நிறுவனத்தை நான் நடத்துகிறேன் என, நம்பிக்கையுடன் வாங்கினேன். இரவு, பகல் பாராமல் தொழிலாளர்களுடன் உழைத்தேன். என் கஷ்டம் வீண் போகவில்லை. இன்று என், "கமானி ட்யூப்ஸ்' நிறுவனம் மூலம், ஆண்டிற்கு, 100 கோடி ரூபாய் சம்பாதிக்கிறேன். சிறந்த தொழிலதிபருக்கான ஜனாதிபதி விருதையும் பெற்றுள்ளேன். பிறரின் கேலி பேச்சுகளுக்கு செவி கொடுக்காமல், உறுதியான உள்ளத்துடன் எந்த வேலையை செய்தாலும் வெற்றி பெறலாம்; அது தான், என் வெற்றி ரகசியம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக