சென்னை: எனக்கு கொடுத்த வரவேற்பை பார்த்து நாம் தான் ஆட்சியில் இருக்கிறோமோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது என்று திமுக பொருளாளர் ஸ்டாலின் கூறினார்.
திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த 4,200 பேர் அதிமுக, தேமுதிக, மதிமுக, பாமக, புரட்சி பாரதம் ஆகிய கட்சிகளில் இருந்து விலகி இன்று திமுகவில் இணைந்தனர். இதற்கான விழா வானகரம் ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் நடந்தது. இங்கு தான் வழக்கமாக அதிமுக பொதுக் குழு- செயற்குழுக் கூட்டத்தை முதல்வர் ஜெயலலிதா நடத்துவார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று நடந்த நிகழ்ச்சியில் திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் 4,200 பேரும் திமுகவில் இணைந்தனர். அப்போது ஸ்டாலின் பேசுகையில்,
இந்த விழாவை பார்க்கும்போது திருவிழா போல் காணப்படுகிறது. எனக்கு கொடுத்த வரவேற்பை பார்த்து நாம் தான் ஆட்சியில் இருக்கிறோமோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள என்னிடம் கடந்த 4 மாதங்களாக தேதி கேட்டனர். கட்சிப் பணியாலும், உடல்நலக் குறைவாலும் தேதி தள்ளிப் போனது. இப்போது கூட்டத்தைப் பார்த்து மட்டற்ற மகிழ்ச்சியாக உள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆட்சி மாற்றம் ஏற்படுகிறது. கடந்த 2006ம் ஆண்டு தேர்தலில் ஜெயித்த தி.மு.க. சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம் என்று தேர்தல் வாக்குறுதி அளித்தது. அதை 100 சதவீதம் நிறைவேற்றியது.
முதலில் 3,000 பேர் இணையும் நிகழ்ச்சி என்று கூறினார்கள். தற்போது 4,200 பேர் இணைந்துள்ளனர். திமுக சார்பில் நடந்த சிறை நிரப்பும் போராட்டம் பிரமிப்பை ஏற்படுத்தியது. ஏராளமான இளைஞர்கள் அதில் பங்கேற்றனர். சிறைகளில் இடம் இல்லாததால் நம்மை விடுவித்து விட்டனர்.
தமிழக சட்டமன்றத்தில் தேமுதிக எதிர்க்கட்சியாக உள்ளது. ஆனால் மக்கள் மத்தியில் திமுக தான் எதிர்க்கட்சியாக உள்ளது என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக